உன் தலையெழுத்து மாறும்!

 25129

சாயி சரித்திரம் அத்தியாயம் பத்து நமது தலையெழுத்தை மாற்றுகிற உபாயத்தைக் கூறுவதிலிருந்து துவங்குகிறது.

”எவர் சகல உலகங்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மத்திலேயே சதா லயித்து இருக்கிறாரோ, அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்போமாக.

யாரைப் பற்றிய நினைவே நம்மை ஜனன மரணச்சுழலில் இருந்து விடுவிப்பதற்குப் போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீகப் பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இதற்கு ஒரு பைசாவும் செலவில்லை.

சொற்பப் பயிற்சியால் பெரும் பலன் அனாயசமாக கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இதர தேவதைகள் அனைத்தும் மாயை. குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம் தலையெழுத்தையே மாற்றி விடுவார். எங்கே தூய நேர்மையான குரு சேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலம் ஆகிவிடுகிறது. நியாயம், மீமாம்சை, போன்ற சாத்திரங்களை படித்துவிட்டு,  ஒரு தலைமுடியை இரண்டாகப்பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திப்பூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.

சத்குரு நாவாயைச் செலுத்தும்போது, ஆதிபவுதிகம், ஆத்யாத்மிகம், ஆதி தைவிகம் ஆகிய இன்னல்களில் இருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.

கடலைக் கடப்பதற்கு கப்பலின் தளபதியின் மீது விசுவாசம் வைக்கவேண்டும். அதுபோலவே, சம்சாரக்கடலைக் கடப்பதற்கு குருவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும்.

ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்க கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தமது லீலையால், ஆனந்தத்தை லட்சணமாக உடைய மோட்சத்தை அளிக்கிறார்.

எந்த சத்குருவின் தரிசனம் இருதயத்தின் முடிச்சுகளை அவிழ்க்குமோ, புலனடக்கம் கிடைக்கச்செய்யுமோ, முன் ஜென்மங்களில் சேர்த்த பாவ மூட்டைகளையும் இந்த ஜன்மத்தில் செய்த பாவங்களையும் அழிக்குமோ அவருடையப் பெருமையை பாடுவோமாக.. என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த விக்ஷயங்களை நன்றாக உள்வாங்கி தியானித்தால் போதும்.. அனைத்தும் சரியாக நடக்கும்…..

தியானிக்கலாம் வாருங்கள்..

நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால்..அதாவது இப்போதுள்ள சூழல்கள் மாறி, நல்ல நிலை ஏற்பட வேண்டுமானால் நீங்கள் பின் வரும் விக்ஷயங்களை  தெளிவாக அறிந்து கடைப் பிடிக்க வேண்டும்.

1) குருவைஎந்நேரமும்நினைக்கவேண்டும்.

அதுவும் பிரேமை நிறைந்த மனத்தால் நினைக்க வேண்டும்.  குருவை நினைக்க நேரம் காலம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் நினைக்கலாம். இந்த நினைவே தியானம் ஆகும். இதற்கு பத்து பைசா செலவு கிடையாது.

சிறிது சிறிதாக நினைக்க நினைக்க அது பெரிய நேரத்தையே ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால் நமக்கு நிறைய பலன் கிடைக்கும்.

என் பிரச்சினை இப்படியிருக்கிறது… குருவே காப்பாற்று என கவலையோடு கெஞ்சத் தேவையில்லை.

குருவை நினைப்பது என் கடமை என நினைக்கவும் கூடாது. மாறாக, அவர் நமது தந்தை, நமது நண்பன், நமது பிள்ளை, நமக்கு நன்மை செய்கிறவன் என்ற எண்ணத்துடன் பெருமையாக நினைக்க வேண்டும். இந்த எண்ணத்தில் அன்பு கலந்திருக்க வேண்டும். பயம் கூடாது.

அன்பு இல்லாத வழிபாடு பயன் தராது. அன்பு இல்லாமல் கடவுளை வழிபட்டால் அது ஏற்புடையது ஆகாது. ஆகவே, எந்த மூர்த்தத்தை வழிபட்டாலும் அதன் மீது அன்பு காட்டவேண்டும். குருவை வழிபாடு செய்கிறவன் குருவின் மீது முழுமையான அன்பு செலுத்தவேண்டும்.

இந்த நினைவை எப்படி உண்டாக்கிக்கொள்வது?

ஓர் இளைஞன் இருக்கிறான். தன் வயதுள்ள பல பெண்களைப் பார்க்கிறான்.. அவர்கள் அனைவரையும் நினைத்து அவன் ஒருபோதும் தூக்கத்தை இழப்பது கிடையாது. அவர்களுள் தன் நடத்தைக்கும், தனது குணத்திற்கும் ஒத்து வருகிற யாரோ ஒருத்தியை மனதில் நினைக்கிறான். அந்த நினைவு அவனை, அவளிடம் நெருங்க வைக்கிறது. பேசவைக்கிறது, அது காதலாக மாறி, சதா அவளது நினைவில் மனம் லயிக்கிறது.

இப்படித்தான்.. பல குருமார்கள், கடவுள்கள் என இருக்கும் நிலையில் இதில் நாம் யாரைத் தேர்வு செய்வது என முடிவு செய்யுங்கள். தேர்வு செய்த பின், அந்த ஒன்றின் மீது மனத்தை முழுமையாகச் செலுத்துங்கள். பிறகு, இரவு பகலாக நீங்கள் அந்த ஒன்றிலேயே லயித்து விடுவீர்கள்.

குருவை எப்போது நினைக்க வேண்டும்?

உடல் ஆரோக்கியமாகவும்,பலமாகவும் இருக்கும் போது எப்போதும் குருவை தியானிப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.

வயதாகி, நோய்கள் வந்து, பலம் இழந்து பிறரால் கைவிடப்பட்டு நினைவு தடுமாறி, படுக்கையில் விழுந்துகிடக்கிற நேரத்தில் கடவுளை நினைக்க முடியாது. எனவே, இன்றே, இப்போதே குருவை –  கடவுளை தேர்வு செய்யவேண்டிய நேரம். அதை செய்யுங்கள்.

2. பலதேவதைகள்மாயை

நாம் பல தெய்வ வழிபாடு உள்ளவர்கள். இதை விவேகானந்தர்  மறுத்திருக்கிறார். பல பெயர்களில் ஒரே கடவுளைத்தான் கும்பிடுகிறோம் என்றார் அவர்.

கடவுளின் ஒவ்வொரு குணத்தையும் ஒவ்வொரு ஒரு தனிக்கடவுளாக கும்பிடுகிறோம். அவன் நம் மீது கருணையும், பாசமும், பரிவும் உள்ளவன். வெண்ணையை விட மென்மையானவன் என்பதால் அவனை தாயுமானவன் என்கிறோம்.

அம்பாளாக வழிபடுகிறோம். எங்கும் நிறைந்தவன் என்பதால் விஷ்ணுவாக கும்பிடுகிறோம். அவனே படைக்கிறவன் என்பதால் பிரம்மாவாக வழிபடுகிறோம். எதற்கும் முதன்மையானவன் என்பதால் விநாயகராக,  வெற்றியைத் தருவதால் முருகனாக,  செல்வத்தைத் தருவதால் லட்சுமியாக, கல்வியைத் தருவதால் சரஸ்வதியாக வழிபடுகிறோம்.

இறைவனை பெண்ணாக பாவித்து வழிபடுவதன் நோக்கம்.. பெண்ணுக்கு இயல்பாகவே தாய்மை குணம் அதிகம்..

இரக்க சுபாவம் அதிகம்.. கடுமை முகம் காட்டுவது குறைவு. நம்பினால் உயிரையும் தரும் இயல்பு பெண்ணுக்கு மட்டுமே அதிகம் உண்டு.

எனவே, சுலபமாக அன்பைப்பெறுவதற்காக இறைவனை பெண்ணாக பாவித்து வணங்குகிறோம்.

உடனடியாக உங்களுக்கு என்னிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றும்..

சாயி ராம்.. இப்படிச் சொல்கிற நீங்கள்..பரிகாரத்திற்கு இதைச் செய்.. இந்த கடவுளை வழிபடு.. குல தெய்வத்தைக் கும்பிடு என்றெல்லாம் கூறுகிறீர்கள்..

சனிதோக்ஷ யாகம் செய்கிறீர்கள், அது ஏன்? எனக் கேட்கலாம்.

குருவே தெய்வம் என்பதை உணர்ந்தவர்கள் மிகக்குறைவு. என்னை முற்றிலும் அணுகுகிறவர்களுக்கு, நான் இந்த வித்தியாசத்தை உணர்த்தி அவர்களை சாயி பக்தியில் அதாவது குரு பக்தியில் நிலை நிறுத்துவேன்.

ஒன்றில் மனத்தை செலுத்தாமல் அனைத்தின் மீதும் நம்பிக்கை வைத்து ஓடுகிறவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னால் ஏற்காது. எனவே, அவர்கள் போக்கில் அவர்களை அனுப்பி, படிப்படியாக மாற்ற முயற்சிக்கிறேன்.

முதலில் எல்லா தெய்வத்தையும் கும்பிடு. பிறகு..அவையெல்லாம் ஒன்றே என உணர்ந்திடு. அந்த ஒன்றும் நமது குருவே என்பதைத் தெளிந்திடு..

இதுவே எனது கோட்பாடு. இந்தத் தெளிவு முழுமையாக வந்த பிறகுதான் ஒருவருக்கு ஆணித்தரமாக பாபா மீது நம்பிக்கை வரும். தலையெழுத்து மாறும்.

3. சாஸ்திரஞானம்தேவையில்லாதது..

கடவுளை மனதால் தேட வேண்டும். புத்தகத்தில் தேடக்கூடாது. விஷ்ணு சகஸ்ரநாமத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதால் நீங்கள் விஷ்ணு பக்தர் ஆகி விட முடியுமா?

லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதால் மட்டும் அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகி விடக்கூடுமா? பொருள் தெரியாமல் படிக்கிற எதனாலும் பயன் இல்லை.

மேளங்கள் கூட வித்தியாசத்தைத் தருகின்றன. டும்டும்டும் என்றால் கல்யாணத்திற்கு.. டொண் டொண் டொண் என்றால் கடைசி ஊர்வலத்திற்கு..

ஆனால், பொருள் தெரியாமல் படிக்கிறதால் எதை உணரமுடியும்?

என்ன செய்யலாம்?

மனதில் அந்த இறைவன் மீது மாறாத அன்பு செலுத்தி, நாமத்தை மட்டும் சொல்லுங்கள் போதும்..அவனை முழுமையாக நம்பினால் மட்டுமே போதும்..எல்லா விதமான தடைகளில் இருந்தும் நாம் தப்புவிக்கப் படுவோம்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் குருவின் மீது மாறாத நம்பிக்கை இருந்தால் நம் வேண்டுதல் பலிக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அப்படி இல்லாமல், அபிராமி அந்தாதியில் கொஞ்சம், கோளறு பதிகத்தில் கொஞ்சம், ஆழ்வார் திருவாய் மொழியில் கொஞ்சம் படித்துவிட்டு துன்பம் போகும் என்று நினைப்பது அறிவீனம். கடவுள் மீது மாறாத நம்பிக்கை வைத்து வேண்டினால் அப்படியே நடக்கும். புத்தகத்தால் நடக்காது.

4. ஐக்கியபக்திவேண்டும்

இறைவன் எப்போதும் நம்மையே நினைத்துக்கொண்டு இருப்பவன்.. ஆனால், நாமோ அவனைத்தவிர பிறவற்றில் மனதை செலுத்திக் கொண்டு இருப்பவர்கள். இதனால் அவன் மீது நமக்கு அன்பும் வருவதில்லை.. ஐக்கியமும் ஏற்படுவது இல்லை.

நானும் அவனும் மின்சாரமும் மின்கம்பியும் போல.. இரும்பும் காந்தமும் போலடூ மலரும் வாசமும் போல, செடியும் வேரும்போல,  உடம்பும் உயிரும் போல, ஒன்றில் ஒன்று கலந்திருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும் வகையில் பக்தி செலுத்த வேண்டும்.

நான் அப்படித்தான் பக்தி செலுத்துகிறேன்..

ஆனால் என் கஷ்டம் தொடருகிறதே என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், உங்களது பக்தி பொய்யானது என்று பொருள்..

ஐக்கிய உணர்வு வந்துவிட்டால் துன்பமும் இன்பமும் தனித்தனியாகத் தெரியாது. அனைத்தும் சமமாகத் தெரியும். மனம் இறைவனிடம் கெஞ்சிக்கேட்காது.. அதைப் பற்றி நினைக்காமல் நடைபோட ஆரம்பிக்கும்..

சில சமயம், இந்த ஐக்கிய பாவம் நானும் கடவுளும் ஒன்று நினைக்க வைக்கும். உண்மை இதுவானாலும், நாம் இந்த ஜன்மாவில் – சரீரத்தில் –  அஞ்ஞானத்தில் இருக்கிறோம். மாயை வசப்பட்டவர்களாக மயங்கிக்கிடக்கிறோம்.

இந்த நிலையில் நம்மை அவ்வாறு நினைக்கக்கூடாது. அது கர்வமாகும்.

சீதா பிராட்டியாரின் தந்தையார்  ஜனக முனி அனைத்தும் அறிந்தவர். தானே பரப்பிரம்மம் என்பதை அறிந்தவர். இவரது கர்வத்தைப் போக்க ஒருமுறை விநாயகப்பெருமான் தீர்மானித்தார்.

ஒரு பிச்சைக்கார பிராமணர் வடிவில் வந்து, அரசனை சந்தித்து, அரசே எனக்குப் பசிக்கிறது.. சாப்பாடு தரவேண்டும் எனக் கேட்டார்.  தன் மகனை அழைத்து பிராமணருக்கு உணவு தருமாறு கூறினார் ஜனகர். மகனும் பிராமணருக்கு உணவு பரிமாறினார்.  பிராமணரோ பசிக்கிறது.. போடு போடு எனக் கூறி அரசாங்க களஞ்சியத்தில் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டார்.

இந்த விக்ஷயத்தை மன்னரிடம் தெரியபடுத்தி, இனி அவருக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை எனக்கூறினார்கள்.  இவரை எப்படியாவது சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பி விட வேண்டும் என நினைத்த ஜனகர்,

பிராமணரிடம் வந்து, ஐயா, இங்கு இவ்வளவுதான் முடியும்.. வேறு எங்காவது மிச்சம் மீதியை சாப்பிட்டுக்கொள்ளுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தார்.

பிராமணர், ஒரு பூசாரியின் வீட்டிற்கு வந்து, சாப்பிட ஏதேனும் தாருங்கள் என்றார். நைவேத்தியம் கூட கிடையாது. ஒரு பருக்கையும் இல்லை என அவ்வீட்டார் கூறினார்கள். வேறு என்ன இருக்கிறது பாருங்கள் எனக்கேட்டார் பிள்ளையார்.

பிள்ளையாருக்குப் படைத்ததில் ஒரே ஒரு அருகம் புல் மட்டும் இருக்கிறது என்றார் அந்த பூசாரி.

சரி, அதையாவது கொடு என வாங்கிப்புசித்தார். அவரது பசி அடங்கியது. அது மட்டுமல்ல, ஜனகரின் மிதிலை நகரம் முழுவதும் உடனடியாக செல்வபுரியாக மாறியது.

இந்த மாற்றத்தை அறிந்த ஜனகர், இது எப்படி சாத்தியமாகும் என விசாரித்தார். பக்கத்து வீட்டில் சாப்பிடுகிற பிராமணரால் இது நடக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு அங்கே ஓடி வந்தார். அவரைப் பார்த்த விநாயகர், ஒருவனுடைய பசியைத்தணிக்கவே முடியாத நீ, எப்படி பரப்பிரம்மம் ஆகமுடியும்? எனக் கேட்டார்.

பரப்பிரம்மம் என்றால் அனைத்தையும் கடந்தது, அனைத்தையும் செய்ய வல்லது என்பது பொருள். நாம் ஜடத்தில் இருப்பதால் பரமாக இயலாது என்பதை உணர்த்தினார்.

ஜனகர் –  தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோர, விநாயகர் அவரை வாழ்த்தி மறைந்தார்.

பார்த்தீர்களா? ஐக்கிய பக்தியும் அதிக அறிவும் ஒருவனை கடவுளாக நினைக்க வைத்து, கர்வம் கொள்ள வைத்துவிடுகிறது.

நாம் எப்போதும் கடவுள் பக்தர் என்ற நிலையிலேயே நின்று கொள்வது நல்லது.  நம் தலையெழுத்து மாற, ஐக்கிய பக்தி வேண்டும். கர்வம் கூடாது.

5. இறைவன்புகழைப்பாடவேண்டும்:

நம்முடைய தலையெழுத்து மாறவேண்டும் என்றால் இறைவனின் புகழைப்பாட வேண்டும். அதாவது நாம் நம்புகிற நமது குருவின் இயல்பைப் பற்றி பிறரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

முதலில் இறைவனாகிய குருவின் இயல்பு –  அவர் செய்த லீலைகள் –  நமக்குச் செய்த அற்புதங்கள் என அவரைப் பற்றி பெருமையாக பிறரிடம் எடுத்துக்கூற வேண்டும். இது இறைவனுக்குச் செய்கிற சேவையாகும்.

இவ்வாறு செய்யும்போது இறைவன் மகிழ்ந்து நம் தலையெழுத்தை மாற்றி விடுவான். நம்மை பிறர் முன்னிலையில் உதாரணமாகவும் வைப்பான்.

 

 

 சாயி வரதராஜன்

Advertisements

எல்லாம் கடந்தவர் பாபா!

DSC_0005

பாபா யாருக்கும் மந்திரம், தந்திரம் ஆகியவற்றை உபதேசம் செய்ததில்லை. எனக்கும் அப்படித்தான். இதை ஷாமா ஒருமுறை என்னிடம் கூறினார்.

ராதாபாய் தேஷ்முக் என்ற மாது சீரடி வந்தார்.  பாபாவிடம் உபதேசம் பெற முயற்சித்தார். மந்திர உபதேசம் பாபா செய்வதில்லை என்பதை அறிந்து உபவாசம் இருக்க ஆரம்பித்தார். உபவாசத்தின் நான்காம் நாள், ஷாமா இதைப் பற்றி கூறி ஏதாவது ஒரு கடவுளின் மந்திர உபதேசத்தை அவளுக்குக்கூறுங்கள் என்றார்.

பாபா அவளைக் கூப்பிட்டார். ”நான் மந்திர உபதேசம் தருவது வழக்கம் அல்ல. எனது குருவும் அப்படித்தான். நான் என் குரு முன் சென்று நிற்பதற்கே நடு நடுங்குவேன். குருவின் உதவி என்பது ரகசியமானது. சூட்சுமம் நிறைந்தது. நான் யாருடைய காதிலும் உபதேசம் செய்வதில்லை. மேலும் எங்களின் வழிமுறைகள் அலாதியானது ” என்றார்.

பாபா மற்றவர்கள் போல பிரசங்கம் செய்ததில்லை.  ஆனால் ஒன்றிரண்டு வார்த்தை அல்லது வாக்கியத்தில் குறிப்புகள் தருவார். அதைப் புரிந்துகொண்டு அதன்படி நடந்தால் அளப்பரிய நன்மை உண்டு என்பது என் அனுபவம். மோட்சத்தை அடைவதுதான் மக்களின் நோக்கம். விவேகம், வைக்கியம் தேவை என்றெல்லாம் பாபா என்னிடம் கூறியதில்லை.

ஆனால், எல்லா சமுத்திரத்தையும் உலகங்களையும் கடந்து ஆண்டவனை அடைவதுதான் மனிதனின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார். என்னிடம் இந்த உலகம், இங்குள்ள எல்லாமே மாயை என்று கூறியது இல்லை. ஆனால், இந்த உலகமும் அதைத்தாண்டியுள்ள அனைத்தும் உண்மையானவை. ஆகவே, இங்கு என்ன உள்ளதோ அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

பாபா அடிக்கடி கர்மா பற்றியும், மறுபிறவி பற்றியும் என்னிடம் பேசியுள்ளார். ஆகவே, இப்பிறவியிலும், மறுபிறவியிலும் நாம் நல்லதையே செய்யவேண்டும் என்றார். அடிக்கடி மற்றவர்களின் கடந்த பிறவி பற்றியும், வரும் பிறவி பற்றியும் சொல்லியுள்ளார்.

இப்பிறவியில் என்ன செய்கிறோமோ, அதன் விளைவை அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இந்துத்வா தத்துவம். ஆனால் பாபா தான்,  எந்த மதம், இனம், ஜாதி என எப்போதும் கூறியதில்லை. அவர் எல்லாவற்றையும் கடந்தவர்.

பாபா பகவத் கீதை, பாவர்த்த ராமாயணம், ஏக்நாத் பாகவதம், பஞ்சதசி, யோக வசிஷ்ட்டம் ஆகியவற்றில் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்தார். இவற்றில் அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.

ஞான தேவரின் ஆரத்தி ஆரம்பித்தவுடன் நெஞ்சின் முன் கரம்கூப்பி, கண்களை மூடி அமர்ந்து விடுவார். கபர்டேயிடம் பஞ்சதசி நமக்கு ஓர் பொக்கிக்ஷம் என்றார். யோக வசிஷ்டத்தை மிகவும் புனிதமாகக் கருதினார்.

கு.இராமச்சந்திரன்

அவதார புருஷர்!

25129

நாம் ஸாயீயை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ, ‘நான் அல்லாவின் உடுப்புத் தலைப்பில் கட்டப்பட்டவன்’ என்றே சொல்லி¬க்கொண்டார்.

அவதார புருஷராக இருந்தபோதிலும், உலக நியமங்களுக்குக் கட்டுப்பட்டே வாழ்க்கை நடத்தினார். வர்ணாசிரம தர்மத்தின்படி தூய வாழ்க்கை நடத்தும்படி பக்தர்களுக்கு போதித்தார்.

அவர் யாரோடும் எவ்விதத்திலும் போட்டியிட்டதேயில்லை; மற்றவர்களையும் போட்டியிட ஊக்குவித்ததில்லை. இவ்வுலகில் இயங்கும் இயங்காப் பொருட்கள் அனைத்திலும் இறைவனைக் கண்ட அவர், அடக்கமும் பணிவும் உருவானவர்.

அவர் யாரையும் இகழ்ந்து பேசியதில்லை; எவரையும் துச்சமாகக் கருதியதில்லை. எல்லா உயிர்களிலும் இப் பிரபஞ்சத்தின் உணர்வான நாராயணனையே கண்டார்.

சாயி சத்சரித்திரத்திலிருந்து

பெருங்களத்தூரில் அற்புதம்!

புதுக்கோட்டையிலிருந்து நானும் எனது மனைவியும் சென்னை வந்து பெருங்களத்தூரில் தங்கினோம். எனது மூன்றாவது மகனுக்கு விரைந்து திருமணம் நடக்க பெருங்களத்தூரில் பிரார்த்தனை வைத்தோம்.

பி.ஈ. படித்த வேலை பார்க்கும் பெண் பெருங்களத்தூரில் நிச்சயமாகி திருமணம் நடந்தேறியது. எனது இரண்டாவது மகனுக்கு வீடு கட்ட முயற்சி மேற்கொண்டேன். அந்த கோரிக்கையும் பாபாவின் அருளால் இனிதே நிறைவேறி, பணிகள் துவங்கி யிருக்கின்றன.

பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் பாபா பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறார். அந்த அற்புதங்களை நீங்களும் அனுபவிக்க வேண்டும்.

மா மாயனான பாபா, பெருங்களத்தூரில் செய்கிற அற்புதங்களையும், நாள் தோறும் நிறைவேற்றித் தருகிற பிரார்த்தனைகளையும் என்னைப் போல நீங்களும் அனுபவிக்க வேண்டும்.

கஷ்டத்தில் இருப்பவர்கள் விரைந்து வந்து பலனடைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

ஸ்ரீநிவாச சுந்தரராஜன்,

புதுக்கோட்டை

ஆன்மீக முன்னேற்றம்!

baba2

அது 1914 ம் ஆண்டு. பாபா என்னிடம் பலமுறை பதினைந்து ரூபாய் தட்சணை கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்பது அவருக்குத் தெரியும். இதை அவரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவர், ”உன்னிடம் பணம் இல்லை என்பது தெரியும். ஆனால், நீ யோக வசிஷ்டம் படிக்கிறாய் அல்லவா? அதிலிருந்து கொடு”  என்றார்.

அதாவது நான் யோக வசிஷ்டத்தில் உள்ள நல்ல போதனைகளை படித்து அதை  நெஞ்சில் நிறுத்திக்கொள்வதே நான் அவருக்குக் கொடுக்கும் தட்சணை.

அவர் என் இதயத்திலேயே நீங்கா இடம் பெற்றுள்ளார் அல்லவா?

இராமனையும், கிருஷ்ணரையும் புனிதர்களாகக்கருதினார். ஞானேஸ்வர், துகாராம் போன்ற ஞானிகளையும் வெகுவாக மதித்தார். கடவுளை அடைய நான்குவித மார்க்கங்கள் சொல்லப்பட்டுள்ளன.

தியானம், கர்மம், ஞானம், பக்தி.

தியானத்தில் ஆசனம், பிராணாயாமம், ஒருமுனைப்படுத்தல், குண்டலினி –  பின் இதன் மூலம் சக்தி பெறுதல். ஆனால் பாபா இதைப் பற்றியெல்லாம் அக்கறை காட்டியதுமில்லை, பிறரைச் செய்யச்சொன்னதும் இல்லை. ஆனால் என்னிடம் ஒருமுறை பிராணாயாமம் செய்கிறவர்கள் எல்லாம் மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடைய என்னிடம் வருவார்கள் என்றார்.

கு.இராமச்சந்திரன்

உயிர் காத்த பாபா!

25125

எனது மகன் சிவபாஸ்கரன் உடல் நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான்.

நாளுக்கு நாள் அவன் உடல் நலம் குறைந்துகொண்டே வந்தது. உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையும் குறைந்து வந்தது. மருத்துவமனையில் எனது மகனோடு இருந்தபோது, எனது இரண்டாவது மகன் வந்து, வீட்டுக்குப் போகுமாறு என்னை அனுப்பிவிட்டான். வீடு வந்து பாபாவிடம் மன்றாடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன்.

பத்து  நாட்கள்  பூஜை செய்தேன். அவன் என் மகனில்லை, உங்கள் மகன். நீங்கள் என்ன செய்தாலும் சம்மதம் என்று பாபாவிடம் பொறுப்பை விட்டு விட்டேன். பாபாவின் அற்புதத்தால் எனது மகன் உயிரோடு திரும்பி வந்தான். அது மட்டுமல்ல, அதன் பிறகு அவன் வாழ்வில் நல்ல காலம் பிறந்து, வீடு வாங்கினான். அவனது மகன் பி.ஈ. முடித்தான். குடும்பம் நல்ல நிலையில் உள்ளது.

என் பாபாவின் அற்புதங்களை வார்த்தையாலோ, பேச்சாலோ வர்ணிக்க இயலாது. அவரது கருணை கடலிலும் பெரிது. என் உடல் உயிர் அனைத்தும் அவருக்கே சொந்தம்.

அவருக்கு எனது நமஸ்காரங்கள்.

சகுந்தலா,

சக்திநகர், முடிச்சூர்.