குணங்களற்ற பிரம்மம்


குணங்களற்ற  பிரம்மம் எப்படி குணங்களோடு கூடிய விஷயமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது?
கே.சூரிய நாராயணன், சென்னை – 45.
காரண காரியத்திற்க்காக பரப்பிரம்மம் சத் – சித் – ஆனந்தம் என்கிற சச்சித்தானந்தமாக மாறும்போது, மாயை செயலாற்ற ஆரம்பித்து சத்துவ குணம் , ராஜஸ குணம், தமோ குணம்  ஆகிய குணங்களுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.  தமோ குணத்தால் ஜடப்பொருட்களும், ரஜோ குணத்தால் ஜீவராசிகளும், சத்துவ குணத்தால் புத்தியும் தோன்றியது என்பார்கள் ஞானிகள்.
சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து
Advertisements

நரசிம்ம சுவாமி – தொடர் பாகம் 3

நரசிம்ம சுவாமி சேலத்தில் வாழ்க்கை
     வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து பாடம் கற்பித்தச் சிறுவனை பள்ளியில் சேர்த்தனர் . நரசிம்மர் மற்றச் சிறுவரைப் போல அல்லாமல் மிகவும் புத்திசாலியாகவும் , துறுத்துறுப்பானவராகவும் இருந்தார் . பள்ளியில கூறப்பட்ட பாடங்களில் இருந்த அப்பியாசங்களை தானே சோதனை செய்து பார்த்தால் ஒழிய நம்ப மறுத்தார் . நமக்குத் தெரியாத , புரியாத , நம் அறிவுக்கு அப்பாற்பட்டதை தெரிந்து கொள்ள முயன்றார் . உலக நிகழ்வுகளை படிக்கத் துவங்கியவர் மனதை அமைதி இன்மை ஆக்ரமித்தது .
     இயற்கையிலேயே உடல் வலிமை கொண்டிருந்தவர் புதுமையாக எதையேனும் செய்ய நினைத்தார் . தன்னை சுற்றி உள்ள நண்பர்கள் சோம்பேறித்தனமாக , துடிப்பின்றி , எந்த பிரச்சனைக்கும் முடிவு காண முடியாமல் தவித்தபடி இருந்ததைக் கண்டார் . ஆகவே அவர்களுடன் தாமும் சேர்ந்து இருந்தால் எங்கே தாமும் அவர்களைப் போல ஆகிவிடுவோமோ என பயந்தார் . மந்தமாக இருப்பது தற்கொலைக்கு சமம் என நினைத்தார் .
     அவருடைய பெற்றோர்களான அங்கச்சியம்மாளும் வெங்கடகிரி ஐயரும் அவரை பக்தி மார்க்கத்தில் வைத்து வளர்த்திருந்தனர் . செல்வந்தர்கள் என்றாலும் தாராள மனம் படைத்தவர்கள் . தம் தோட்டத்தில் விளைந்த தேங்காய் ,மாங்காய் போன்றவற்றை தம் உபயோகத்துக்கென வைத்திருந்தது போக மீதியை நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் , வேலையாட்கள் என அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள் . தம்முடைய வாழ்வில் பின்னாளில் அது குறித்துக் கூறிய நரசிம்மசுவாமி தன்னுடைய தாயாரிடம் இருந்தே ஒருவர் தன வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டிய சமூக தர்மத்தை தாம் கற்று அறிந்ததாகக் கூறினார் .
     நரசிம்மசுவாமியின் தந்தை பக்தி மார்க்கத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்ததினால் மாலை வேளைகளில் நண்பர்கள் , அக்கம்பக்கத்தினர் வேலையாட்கள் என அனைவரையும் அழைத்து ராமாயணம் , மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து சில பகுதிகளை படித்துக் காட்டி சொற்பொழிவு ஆற்றுவார் . அது போல பண்டிகை நாட்களிலும் சாதுக்கள் , சன்னியாசிகளை வீட்டிற்கு அழைத்து சொற்பொழிவு ஆற்றுமாறுக் கூறுவார் . ராமாயணம் , மகாபாரதம் போன்ற காவியங்களில் இருந்து எடுத்த காட்சிகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவார் .
     அதனால் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த நரசிம்மசுவாமிக்கும் சாதுக்கள் , சன்னியாசிகளின் மீது தன்னை அறியாமலேயே ஒரு ஈடுபாடு ஏற்பட்டது . அனைவரும் அந்த சாதுக்கள் , சன்னியாசிகளுக்குக் கொடுத்த மரியாதையை கண்டவருக்கு தாமும் அவர்களைப் போல சாதுவாக , சன்னியாசியாக மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது .
     நரசிம்மசுவாமியின் தந்தை மூட நம்பிக்கைகளைக் கொண்டவர் அல்ல.  தம் மதத்தைச் சாராதவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களையும் தம் வீட்டில் நடைபெற்ற பஜனைகளில் , பூஜைகளில் கலந்துக்கொள்ள அழைப்பதில் பாகுபாடே காட்டவில்லை . அது குறித்து பின்னர் நரசிம்மசுவாமி கூறிய பொழுது தம்முடைய வாழ்வில் தூய்மையான வாழ்வை கடைப்பிடித்தத்தின் காரணம் தம்முடைய தந்தையிடம் இருந்து அவற்றைக் கற்று அறிந்ததுதான் என்றார் .
      நரசிம்மசுவாமி வாழ்க்கை முறையை வடிவமைத்ததில் அவருடைய தாயாரின் பங்கு மிகவும் அதிகம் . தன்னுடைய மகன் பக்தி மார்க்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகப் பக்திப் பாடல்களை பாடிக் காட்டுவார் . ஊரில் எந்த சாதுக்கள் , சன்னியாசிகள் வந்தாலும் அவர்களை தம் வீட்டிற்க்கு அழைத்து விருந்து உபசாரம் செய்வதை நரசிம்மசுவாமியின் பெற்றோர்கள் ஒரு நியமமாகவே வைத்து இருந்தனர் . சிருங்கேரி சுவாமிகளும் காரைக்காலில் இருந்த சுரக்காய் சுவாமிகளும் நரசிம்மசுவாமியின் மனதில் பெரும் இடத்தை பிடித்து இருந்தனர் . ஆதி சங்கராச்சாரியாரின் அவதாரமாகக் கருதப்பட்ட சிருங்கேரி சுவாமிகளிடம் சிறு வயதில் அவர் சென்று இருந்த பொழுது ஸ்வாமிகள் நரசிம்மசுவாமி கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்தாராம் . அதன் பின் ஜகத்குரு ஸ்ரீ நரசிம்மபாரதி அங்கிருந்து சென்று விட்டார் . அப்போதுதான் அந்த சிருங்கேரி ஸ்வாமிகள் தரையில் தம் பாதங்கள் படாமல் வேக வேகமாகச் செல்வதை நரசிம்மசுவாமி கவனித்தார் . அவரை தாம் சிறு வயதில் சந்தித்த பொழுது அவர் நேருக்கு நேர் பார்த்த பார்வையில் இருந்த காந்த சக்தியை தம் வாழ்நாளில் கிடைத்த பொக்கிஷமாகக் கருதியதாகவும் அதை தம்மால் மறக்கவே முடியாது எனவும் நரசிம்மசுவாமி கூறினார் .
     1882 ஆம் ஆண்டில் அவருக்கு பூணூல் போடப்பட்டது . காயத்ரி மந்திரத்தை தந்தை வெங்கடகிரி ஓத , வீட்டு வைதீகர் சந்தியாவந்தனத்தைக் கற்றுக் கொடுத்தார் . தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்துகொண்டும் வேத பாடசாலையில் ருத்ரம் , சமகம் , ஸ்ரீசூக்தம் போன்றவற்றையும் கற்று அறிந்தார் . பக்கத்து வீட்டில் இருந்த அலமேலு என்ற பெண்மணி அவருக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுத்தார் .
     நரசிம்மசுவாமியுடைய தாயார் தினமும் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றிய பின்னால் , பசுவுக்கு சிறிது உணவு தந்தபின்னரே உணவு அருந்துமாறு அவரிடம் கூறி இருந்தாள். அதற்குக் காரணம் கேட்டபொழுது , மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தாம் உணவு அருந்துவது பாவம் என்றாளாம் அங்கச்சியமாள் தினமும் ஏழைகளுக்கும் தானம் செய்வது உண்டு .
     அப்படி ஒரு நாள் ஒருவருக்கு பிச்சை போட்டதை,  நரசிம்மர் கண்டித்தார் . அநத ஆள் அதற்குத் தகுதியானவன் அல்ல என அவர் கூறியபோது , அவருடைய தாயார் அவரிடம் , நரசிம்மா, தானம் கேட்டு வருபவன் தகுதியானவனா, இல்லை தகுதி இல்லாதவனா எனத் தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை . தானம் கேட்டு வரும் எவருமே கடவுளின் அவதாரமே , ஆகவே அவர்களுக்கு தானம் தருவது நமது கடமை என்றாளாம் .
     அது போலவே சமூகத்தினால் கீழ் ஜாதியினர் , தீண்டப்படாதவர் என ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய தாயார் உதவி வந்தாள் . அது குறித்து பின்னர் கூறிய நரசிம்மசுவாமி தம்மிடம் உள்ளவற்றை கொடுப்பவரே கடவுள்.  அதைச் செய்யாமல் அனைத்தையும் தன்னிடம் வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் பேய்களுக்கு சமம் என்றார் . தனது தாயார் அங்கச்சியம்மாள் கடைப்பிடித்து வந்த அந்தக் கொள்கையே கர்மயோகம் என்றார் . மனித ஜீவன்களை சிவபெருமானாகக் கருதி அதை தம்முடைய வாழ்விலும் கடை பிடிப்பவர் ஆத்ம ஞானம் பெற்றவர்கள் . அவர்களே புனிதமானவர்கள் என்ற தத்துவார்த்தமான உண்மையையும் புரிந்து கொண்டார் .
     அக்கம்பக்கத்தினர் உதவி கேட்டு வந்த பொழுதெல்லாம் உதவ அவருடைய தாயார் தயங்கியதே இல்லை . ஒருமுறை அடுத்த வீட்டில் இருந்தவள் சுகம் இன்றி இருந்த போது தம் வீட்டில் சமையலை முடித்துக் கொண்டு அவள் வீட்டிற்குப் பொய் சமைத்து கொடுத்தவளிடம் நரசிம்மர் அம்மா நீ சுயநலம் பிடித்தவளாக இருக்கின்றாயே . முதலில் அவளுக்கு சமைத்துப் போட்டுவிட்டு வந்து அல்லவா  நம் வீட்டில் சமைக்க வேண்டும் என்ற பொழுது அவருடைய தாயார் கூறினாராம் , நான் அப்படிச் செய்து இருந்தால் அவர்கள் சாப்பிடப் போகும் முன், அந்தச் சமையல் ஆறிப் போய்விடாதா ? ”. அந்த வார்த்தைகள் அவருடைய மனதில் ஆழப் பதிந்தன .
     அப்படிப்பட்ட விசாலமான மனது கொண்ட தாயார் அவருக்கு குருவாக இருந்தாள் . பிற்காலத்தில் நரசிம்மசுவாமி தன்னைப் பற்றி அதிகம் கூறிக் கொண்டது இல்லை . மாறாக தம்முடைய தாய் தந்தையின் வாழ்க்கை நெறியும் தத்துவமும் தம்மை நல்ல முறையிலான வாழ்கையை அமைத்துக் கொள்ள எப்படி எல்லாம் உதவின என்பதை அடிக்கடி கூறுவது உண்டு . சேலத்தில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டவர் மேல் படிப்பு படிக்க சென்னைக்குச் சென்றார் .

………தொடரும்

நரசிம்ம சுவாமி தொடர் பாகம் 1
நரசிம்ம சுவாமி தொடர் பாகம் 2

நன்றி:

http://shirdisaibabatamilstories.blogspot.in


பிரார்த்தனையின் சக்தி

பிரார்த்தனையின் சக்தி பற்றிக் கூறுங்கள்    – கே காந்திமதி, கோவை
இறைவனிடம் தன்னை ஒப்புவித்துக் கொள்வதுதான் உண்மையான பிரார்த்தனை.  நம்பிக்கை என்பது ஒரு உண்மையான சக்தியை, அதனுடைய கருணையை அறிந்து கொள்வதாகும்.  உன்னத சக்தி என்பது ஒரு பக்தனைப் பொறுத்தவரை மிகவும் அந்தரங்கமான சமாச்சாரம்.

அவன் எத்தனைக்கு எத்தனை நம்பிக்கை வைக்கிறானோ, அத்தனைக்கு அத்தனை அதில் ஆர்வமுடையவனாகிறான்.

அவனுடைய சரணாகதி முழுமையடைகிறது.  பக்தனின் அகந்தை முற்றாக நீங்குகிறது.  எல்லாம் அவன் சித்தம் என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறது.


இப்படித் தன்னை ஒப்புவித்துக்கொள்கிற நிலையில் விண்ணப்பம் கிடையாது.  பேரம் கிடையாது.  அது சுயநலத்தை ஒரேயடியாக அழித்துப் போடுகிற காரியமாகும்.

பிரார்த்தனை என்பது விருப்பங்கள் பற்றிய சிந்தனை அல்ல.  அது நமக்குள் மறைந்து கிடக்கும் சக்தியை மேலே கொண்டு வருவதும், அதன் மூலம் நமக்கு வலிமையளிப்பதும் ஆகும்.  அந்த வலிமை நமது சோம்பலைப் போக்கும்.  தடைகளை அகற்றும். ஆன்மீகப் பாதையில் தென்படும் அத்தனை எதிர்ப்புச் சக்திகளையும் ஓசைப்படாமல் வென்று விடும்.  இதுவே பிரார்த்தனையின் சக்தி

தேவநாதன் என்ற எழுத்தாளர் எழுதிய புத்தகத்தில் இருந்து

சாயி புத்ரன் பதில்கள்

சாயிதரிசனம் இதழிலிருந்து

ஆன்மீக ஞானம்


பாபாவிடம் நான் ஆன்மீக ஞானம் கேட்கிறேன். அவர் அதைத் தாமதப்படுத்துகிறார்.  ஞானத்தைப் பெற வழி சொல்லுங்கள்.

பா.கேசவன்  புலியூர்
ஆன்மீக ஞானம் என்பது வெளியில் இருந்து அறிந்து கொள்வதால் வருவதல்ல.  தன்னைப் பற்றிய சிந்தனையே ஆன்ம ஞானத்தைத் தரும்.  அதை அனுபவமாக்கிக்கொள்ளவேண்டும்.

ஞானத்தை விட தியானமே சிறந்த்து என்று பகவத் கீதை கூறுகிறது. ஞானத்தைப் பெறுவதற்க்கு முன்பு பாபாவை தியானித்துப் பழகுங்கள். திரும்பத் திரும்ப செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி, மனம் ஒன்ற ஒன்ற உங்களுக்கு ஞானம் வந்துவிடும்.  ஆன்மாவை வேண்டுகிறவன் ஆத்ம ஞானம் அடைகிறான் என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. முயற்சி செய்யுங்கள்

சாயி புத்ரன் பதில்கள்

கோயில் கட்டலாம் வாருங்கள்!

திக்கெட்டும் சாயி கோயில், திசையெங்கும் சாயி முழக்கம் என்பதை வலியுறுத்தி சாயி கோயில்களை உருவாக்கி, நற்பணிகளைச் செய்திட உருவாக்கப்பட்ட சீரடி சாயி சமதர்ம சமாஜ; அறக்கட்டளையின் புதிய சீரடி சாயி பாபா ஆலயத்திற்கான ஆரம்ப வேலைகள், வண்டலூர்  –ரத்தின மங்கலம்  – கண்டிகை வழியில் உள்ள அம்மனம் பாக்கம் மலையடிவாரத்தில் 29-12-2013 ஞாயிற்றிக்கிழமை அன்று பூமி பூஜை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் துனி, பிரார்த்தனைக் கூடம், தியானக் கூடம், அன்னதானக் கூடம் உட்பட பல அம்சங்கள் இடம் பெறுகின்றன. சீரடியிலிருந்து கொண்டு வரப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிற குருஸ்தானத்தின் வேப்பமரக் கன்று இந்த இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்படவுள்ளது.
மாணவர்களுக்கு மட்டும் அருள் பாலிப்பதற்காக மாணவ கணபதியாக எழுந்தருளவிருப்பதாக வாக்களித்த பாபாவுக்குத் தனி சந்நிதி மாணவ ஞான  கணபதி ஆலயமாகஇந்த வளாகத்தில் உருவாக்கப் படுகிறது.
எந்தப் புண்ணியவானின் கைங்கர்யத்தால் இந்த ஆலயம் அமைப்பதற்கான முதல் கம்பிகள், செங்கற்கள், மணல் மற்றும் சிமெண்ட் போன்றவை வாங்கப்படுகிறதோ அவர்களுக்கு மிகுந்த பலனை பாபா கொடுப்பார் என்று கோபர்கான் சுவாமிகள் பூஜ்ய ஸ்ரீ  சாய் சக்தி சுப்ரமண்யம் அனந்த தீர்த்த மகராஜ் ஆசி வழங்கியிருக்கிறார்.
சாயி பக்தர்களாகிய உங்களுடைய உதவியால் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் இன்று உலகப்புகழ் பெற்று உருவாகியுள்ளது. இதே போல புதிதாக அமையவுள்ள இந்த இடமும் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அற்புதத் தலமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாபா உங்கள் மனதில், இந்தக் கோயில் உருவாக்கப் பணியில் உதவி செய்யுங்கள் என்று ஏவினால், நீங்கள் பொருட்களாக வாங்கித் தரலாம், அல்லது நன்கொடைகளாக அளிக்கலாம்.
மேலதிக விபரங்கட்கு பெருங்களத்தூர் சீரடி சாயி சமதர்ம சமாஜ் மையத்தினை அணுகவும்..


சாயி வரதராஜன்

வில்வ மரம்

வீட்டில் வில்வ மரம் நல்லதா?

எங்கள் வீட்டில் பூஜைக்காக விலவ மரம் வைத்து பெரிய மரமாக வளர்ந்துள்ளது.  தேக்கு மரம் ஒன்றும் உள்ளது. வில்வ மரமும் தேக்கு மரமும் வீட்டிலிருப்பது நல்லது இல்லை என்று கூறி வீட்டினை விற்க இயலாமல் தடை ஏற்படுகிறது. இது உண்மையா? எங்கள் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்….

ஏ.பத்மினி வேலூர்

எங்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படித்தான் வில்வ மரம் வளர்கிறது என வீட்டை விற்றுவிட்டார்கள்.  அந்த வீட்டின் முகப்பில் ஒரு சிறிய கடை வைத்திருந்தவர் அந்த வீட்டினை வாங்கினார்.  சில காலத்திற்க்குள் கடையும் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. வில்வ மரத்தை ஒதுக்கிவிட்டு மீதி இடத்தில் மிகப் பெரிய பிளாட் கட்டியுள்ளார்.. அதாவது அந்த அளவிற்க்கு அவருக்கு வசதியும் வந்திருக்கிறது.

ஆகவே, வீட்டை விற்கும் எண்ணத்தை விட்டுவிட்டு உங்கள் மகனின் விருப்பப்படி பிளாட் கட்டுங்கள்.  கடனும் அடையும்.  பொருளாதாரமும் மேலோங்கி வளரும்.  ஒரு வேளை கண்டிப்பாக அந்த மரத்தை எடுத்தே ஆகவேண்டும் என்றால் இன்னொரு வில்வக்கன்றை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தபிறகு இதை எடுக்கலாம் என்கிறார்கள் பெரியோர்கள்.  அருகில் உள்ள சிவன் கோயிலில் கேட்டு செயல்படுங்கள்.
சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து