கீரப்பாக்கம் ஸ்ரீ சாயி பேராலயம்

உலகம் மாறிவருகிறது. எதிர்கால சந்ததிகள் என்னவாகப் போகிறார்களோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது.  பந்த பாசங்களும், அன்பும் அரவணைப்பும் குறைந்து வரும் நிலையில், நமது சந்ததியினர் வேலையையும், பணத்தையும் கட்டிக்கொண்டு, படாடோபம் என்ற பெயரில் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு நமது மூதாதையர் குழுவாக வாழ்ந்தார்கள். நம் பெற்றோர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். நாம் தனிக் குடும்பமானோம். நம் பிள்ளைகள் தனித்தனியாக வாழ்கிறார்கள். வேலை நிமித்தமாக மகன் ஒரு இடத்திலும், மருமகள் ஓரிடத்திலும், பேரப்பிள்ளை விடுதியிலும், பெரியவர்கள் முதியோர் இல்லத்திலும் வாழ்கிறார்கள். சமூகம் தனி மனிதன் என்ற பிரிவு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

எவ்வளவு சொத்து சேர்த்தாலும், பணமிருந்தாலும் மனதில் நிம்மதியில்லாத நிலை வந்துவிட்டது. இவர்கள் இப்போது மதுபானக் கடைகளுக்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் செல்லலாம். மனம் போன போக்கிலும் நடக்கலாம். கடைசியில் ஒரு காலம் இருக்கிறது. அது கடவுளைத் தேடி வரும் காலம்

எங்கும் கிடைக்காத நிம்மதியை பெறுவதற்காக கடவுளைத் தேடி ஆலயத்திற்க்கு வருவார்கள். இப்போது எல்லா இடமும் அடுக்கு மாடி வீடுகளாவதால் ஆலயம் அமைக்கமாட்டார்கள். அவர்களால் முடியாது. ஆனால், நாம் நமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் நன்மை செய்யவே வாழ்கிறோம். இவர்கள் செம்மையாக வாழ, ஆலயம் செய்வோம். ஆளுக்கொரு ஆலயம் செய்ய முடியாது. ஊருக்கு ஒரு ஆலயம் செய்யலாம். ஊருக்கு ஒரு ஆலயம் அமைக்க முடியாவிட்டாலும், நகருக்கு ஒரு ஆலயமாவது அமைக்க நம்மால் முடியும்.

இந்த சேவையை எல்லோரும் சேர்ந்து செய்யலாம். வண்டலூர் – கேளம்பாக்கம் சாலைக்கு அருகே கீரப்பாக்கம் என்ற கிராமத்தில் மலைப்பகுதியில் பாபாவிற்க்கு மட்டுமன்றி, பக்தர்கள் வணங்குகின்ற மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைகிறது.

முதன்முதலாக விநாயகர் ஆலயம் மலையின் மலையின் கீழ்ப்பகுதியில் அமைகிறது.

ஆலயம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் திருக்கரங்களால் ஆலயம் அமைத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள்.

இது எதிர்காலத்திற்க்கு நாம் செய்கிற உண்மையான தொண்டு. ஒரு செங்கல் துண்டு, ஒரு இரும்புத்துண்டு என துண்டு துண்டுகளாக இணைத்து தூண்களையும், கோயிலையும் உருவாக்கலாம். வாருங்கள்! உங்கள் கைங்கர்யத்தோடு நாங்கள் பொறுப்பெடுத்து ஆலயம் அமைக்க முயற்சித்து வருகிறோம். முழு மனதோடு இந்தக்கோயில் திருப்பணிக்கு அழைக்கிறோம். முடிந்தவர்கள் உதவலாம். முடியாதவர்கள் பிரார்த்திக்கலாம்

விவரங்களுக்கும் நன்கொடைகள் அனுப்பவும்

SHIRDI SAI SAMADARMA SAMAJ, 3E/A, SECOND STREET, BUDDHAR NAGAR, NEWPERUNGALATHUR, CHENNAI – 600 063. Phone No. 9841203311

மேலதிக விபரங்களுக்கும், சாயி பேராலயம் பற்றி அறியவும்

http://keerapakkamsrisaitemple.blogspot.in/

Advertisements

ஆயிரம் காரணங்கள் இருக்கும்!

tvmalai

திருவண்ணாமலை அகஸ்தியர் ஆஸ்ரமம் நிறுவிய வேங்கடராம சுவாமிகள் சத்குருவாக வணங்கப்படுகிறவர். அவரை வாத்யாரே என்று அழைப்பார்கள். அவர் தொப்பி பற்றி கூறிய ஒரு விக்ஷயத்தை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்..

திருப்பணிகள் நடக்கும்போது கைங்கர்யம் செய்வதால் புண்ணியம் உண்டு என்று தெரிந்தவர்கள், பொருள்களோடு உடலுழைப்பையும் தருவார்கள். இப்படித்தான் அகத்தியர் ஆசிரமம் கட்டப்பட்ட காலத்தில், அரசு நிறுவனங்கள், வங்கிகள், எஞ்சினியரிங், மருத்துவம் என பல துறைகளிலும் பணிபுரிபவர்கள், கடுமையான உடல் உழைப்பிற்கு பழக்கமில்லாதவர்கள் ஆகியோர் பங்கு பெற்று சேவை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது வெயில் கடுமையாக இருந்தது. ஒரு சேவையாள் வந்து, குருவிடம், வாத்யாரே, வெயில் மிக கடுமையாக இருக்கிறது. ஒரு தொப்பி கொடுத்தால் வெயிலின் கடுமை தெரியாமல் இருக்கும் என்று கேட்டார்.

hat

அப்படியா, ஒன்றிரண்டு தொப்பிகள் இருந்தன. அதை மற்ற அடியார்கள் வாங்கிப் போய்விட்டனர். நம்மிடம் நிறைய தொப்பிகள் இருந்தாலும், அவற்றை எங்கு வைத்தேன் என நினைவில்லை. முடிந்தால் அப்புறம் தேடித் தருகிறேன். களைப்பாக இருந்தால் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். வெயில் தாழ, வேலையைத் தொடரலாம் என்றார் வேங்கடராமன் குரு.

மளிகை சாமான், கட்டுமானப் பொருட்கள், தொப்பி போன்றவற்றை பொறுப்பில் வைத்துள்ளவர், குருவின் பக்கத்தில் இருந்தார். அவர், வாத்யாரே, அடியேனுக்குத் தொப்பியிருக்கும் இடம் தெரியும். எடுத்து வந்து தரட்டுமா? எனக் கேட்டார். அப்படியா, ரொம்ப சந்தோக்ஷம். எங்காவது ஒரு தொப்பியிருந்தால், போய் கொண்டு வந்து நண்பரிடம் கொடு என குருதேவர் கூறினார்.

தொப்பியைப் பெற்றுக்கொண்டு அடியார் வேலைக்குச் சென்றுவிட்டார். அவர் சென்றதும், தொப்பியைக் கொடுத்தவரிடம், ”ரொம்ப புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்து விட்டாயோ!” என்று குரு கேட்டதும், தொப்பி கொடுத்தவர், தான் ஏதோ தவறு செய்து விட்டதை உணர்ந்து தலைகுனிந்து நின்றார்.

குரு சொன்னார், “ ஏம்ப்பா, நாங்க ஒன்னு சொன்னா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். நாங்கள் எதையும் எப்போதும் மறப்பது கிடையாது. அவ்வப்போது மறப்பது போல சில காரணங்களுக்காக நாடகமாட வேண்டியிருக்கும். அந்த அடியார் இன்றைக்கு இரண்டு மணி நேரம் வேலை செய்தால் அதனால் கிடைக்கும் புண்ணியம் அவருடைய குடும்பத்திற்குப் போதும் என்ற தெய்வீகக் கணக்கை நாங்கள் அறிந்திருப்ப தால், அவருக்குத் தொப்பி தராமல் அதைக் காரணம் காட்டி அவரை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லுகிறோம். ஆனால் உன்னுடைய புத்திசாலித்தனத்தினால், அவர் தொப்பியைப் போட்டுக்கொண்டு இன்னும் இரண்டு மணி நேரம் வேலை செய்து மேற்கொண்டு புண்ணியத்தைச் சேர்த்துக்கொள்ளக் கூடிய நிலை உருவாகி விட்டது. இந்த அதிகப்படியான புண்ணிய சக்தி அவர் தன்னுடைய தொழிலில் செய்யும் தவறுகளில் இருந்து காப்பாற்றுவதால், மேலும் விபரீதமான பல தவறுகளைச் செய்ய முயற்சிப்பார். அதனால் வரும் தண்டனைகளுக்கு யார் பொறுப்பேற்பது?” என்று கூறி தொப்பி கொடுத்த அடியாரைப் பார்க்க, அடியார் தலை குனிந்தார்.

இதேபோல, கிரிவலம் வந்த ஓர் அடியார், குருவிடம் வந்து, வாத்யாரே, வெயில் அதிகமாக இருக்கிறது. அடியேனுக்கு ஒரு தொப்பி கொடுத்தால், அதை கிரிவலம் முடிந்து திருப்பித்தந்துவிடுகிறேன் என்றார். பக்கத்திலிருந்தவரிடம், தொப்பி ஏதேனும் இருக்கிறதா? எனக் கேட்டார் குருதேவர்.

hat3தெரியவில்லையே குருதேவா! நீங்கள் சொன்னால் தேடிப் பார்க்கிறேன் என்றார் அவர். அவர்தான் தொப்பி கொடுத்து குட்டுப்பட்டவர்.

இந்த முறை, குரு தேவர் சொன்னார், “ இவர் என்னோடு பல ஆலயத் திருப்பணிகளில் ஈடுபட்டவர். ரொம்ப சீனியர் அடியார். இவர் கேட்கும்போது இல்லை என்று சொல்லமுடியாது.. எங்காவது தேடி நாலு தொப்பி எடுத்துக் கொடு என்றார்.”

அடியாருக்கு தொப்பியிருக்கும் இடம் தெரியுமாதலால், விரைந்து சென்று தொப்பிகளை எடுத்து வந்து கொடுத்தார். சத்குரு அதை தன் கைகளால் அவர்களுக்குக் கொடுத்து, ”நல்ல படியாக கிரிவலம் சென்று வாருங்கள். சென்று வந்தபிறகு, அதை இவரிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அடுத்தமுறை ஆசிரமம் வரும்போது, இதுபோல நாலு டஜன் தொப்பி வாங்கி வாருங்கள், மற்றவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்!” என்று கூறி அனுப்பிவைத்தார்.

கிரிவலம் முடிந்து மாலையில் வந்த அந்த குடும்பத்தார், தொப்பிகளை திருப்பிக் கொடுத்தனர். பிறகு, ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள்.

குருதேவர், அடியாரைக் கூப்பிட்டு, ”தொப்பிகளை எங்கு வைத்திருக்கிறாய்?” எனக் கேட்டார்.

அவைகளை மற்ற தொப்பிகளுடன் வைத்திருப்பதாகக் கூறினார் அடியார். இதைக் கேட்டு குருவுக்குக்கோபம் வந்துவிட்டது. அதை ஏன் மற்ற தொப்பிகளுடன் வைத்தாய்? அதை எடுத்து நெருப்பில் போட்டுவிடு என்று கூறினார். அடியாரும் அப்படியே செய்தார்.

அவர் வந்த பிறகு குருதேவர் கூறினார், “அந்தத் தொப்பிகளைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. இங்கு வந்த அடியார், பலரிடம் ’தொப்பி’ போட்டே பலரிடம் தனது காரியத்தை சாதித்துக்கொண்டவன். பல லட்சக் கணக்கான ரூபாயை லஞ்சமாக சம்பாதித்தவன். கடுமையான கர்ம பாக்கியை சேர்த்து வைத்துக் கொண்டு இருக்கிறான். இருப்பினும் அவன் அடியேனிடம் வந்துவிட்டதால், முடிந்த மட்டும் அவன் முற்பிறவிகளில் சேர்த்து வைத்த சஞ்சித கர்மாவை நாங்கள் குறைக்க முயற்சி செய்கிறோம். அதனால்தான் இந்த கொளுத்தும் வெயிலில் திரு அண்ணாமலையை வலம் வரச் செய்து, புனிதமான இந்த ஆசிரமத்தில் சில மணி நேரம் தங்க வைத்து, கர்ம வினைகளின் வேகத்தை ஓரளவுக்கு குறைத்து அனுப்புகிறோம். அதே சமயம், நல்ல உள்ளம் படைத்த பல அடியார்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எங்களுக்கு இருப்பதால் கடுமையான கர்ம வினைப்படிவுகள் தோய்ந்த அந்தத் தொப்பிகளை நெருப்பில் இட்டுப் பொசுக்கிவிடுகிறோம். அவனிடம் பல புதிய தொப்பிகளை வாங்கி அதைப் பல அடியார்கள் பயன்படுத்தும் போது இன்னும் கணிசமான அளவில் அவனுடைய கர்ம வினைகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது!” என்றார்.

மகான்களின் செயல்களுக்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதில் நாம் தலையிடவே கூடாது.

ஆதாரம்: கடவுள் தவறு செய்தால்? என்ற புத்தகம்

குருவிடம் பெற்ற அனுபவம்!

devotees

பாபா தன் குருவிடம் பெற்ற அனுபவத்தைக் கூறும்போது,

”குரு மகாபலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாகப் பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார். வெறும் கல், மணி இவையிரண்டுமே மெருகு ஏற்றுவதற்காகத் தேய்க்கப்படலாம். எவ்வளவு தேய்த்தாலும் கல் கல்லாகத்தான் இருக்கும். மணியோ ஒளிவிடும். இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும் வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?

ஆகவே, நான் குரு பாதங்களில் பன்னிரண்டு வருடங்கள் இருந்தேன். நான் வளரும் வரை அவர் என்னை ஒரு குழந்தை போல் பாவித்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாக்குறையும் இல்லை. அவருடைய இதயம் என் மீது அன்பால் பொங்கி வழிந்தது.

அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப் போல குரு கிடைப்பது அரிது. அவரது சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோக்ஷத்தை விவரிக்கவே முடியாது.

ஓ! அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்! அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கிவிடும். இருவருமே ஆனந்த மயமாகிவிடுவோம். வேறு எதையும் எனக்குப் பார்க்கத் தோன்றாது.

இரவு பகலாக அவரது முகத்தை உற்றுப்பார்க்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால் மனம் அவஸ்தைப் பட்டது.

அவரைத் தவிர வேறு எதன் மேலும் என்னால் தியானம் செய்ய முடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.

என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்கு மேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்தது இல்லை. கவனிக்காமல் விட்டதும் இல்லை. சங்கடங்களில் அவர் என்னை எப்பொழுதும் ரட்சித்தார்.

சில சமயங்களில் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன், சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன். ஆயினும் எப்பொழுதும் அவருடைய கூடுகை சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக்கொண்டார்.

தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறதோ, அவ்வழி தான் என் குருவினுடையதும். அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளைப் பாதுகாத்தார். தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதைப் பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை.

அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?

தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்குத் திருப்தியும் சந்தோக்ஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறு எந்த உபதேசமும் செய்யத்தெரியாது.

தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன. அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப் படுகின்றன. ஆகவே, நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப்பிடிவாதம் பிடிக்க வேண்டும்.

நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆகாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும். நீங்கள் வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத அன்பை என்னிடம் காட்டுங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறு எதையும் கற்றுத் தரவில்லை.

யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை. ஆறு சாஸ்திரங்களை அறிய வேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும். இதுவே குருவின் மகத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மகேஸ்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் பேறு பெற்றவன் ஆவான்.”

இவ்வாறு பாபா மூதாட்டிக்கு போதனையளித்ததாக சத்சரித்திரத்தில் எழுதப் பட்டிருக்கிறது. குருவின் திருநாமத்தை தியானித்தாலே போதும். அந்த நாமத்தை எப்போதும் நினைத்தாலே போதும், அவனுக்கு அனைத்தும் கிடைத்துவிடும். இதை விட வேறு மந்திர தீட்சை தேவையில்லை என்பதே பாபா கூறியவற்றின் உட்பொருள். இதை உணராமல் நான் மந்திர தீட்சை பெற விரும்பு கிறேன் என்பது மடமை.

பாபா, பாமரர்களும் நன்மை பெறவேண்டும் என விரும்பிய இறைவன். அதனால்தான் அவர் தீட்சையை யாருக்கும் கூறாமல் எப்போதும் என்னை நினைத்துக்கொள் என்றார்.

எப்போதும் அவர் மீது மாறாத நினைவை வைத்திருக்க வேண்டும். வேறு ஒன்றிலும் நாட்டமில்லாத அன்பை தன் மீது வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அன்பு எப்போது, எப்படி வரும் என்றால், சதாநேரமும் அவரது நாமத்தை உச்சரித்துக் கொண்டு இருக்கும் போதுதான் வரும். அவரது லீலைகளை எப்போதும் தியானித்தால்தான் வரும்.

எப்போதும் சாயி சாயி என்று சொல்வீர்களானால் உங்களை ஏழு கடலுக்கு அப்பாலும் கொண்டு சென்று சேர்ப்பேன் என்றிருக்கிறார். சிலரிடம் ராஜாராம் ராஜாராம் என்று சொல்லுங்கள் என்றிருக்கிறார். இவையெல்லாம் மந்திர தீட்சைகள்தாம். இந்த தீட்சையின் நோக்கம் நமது நல்வாழ்வு.

அவர் பூரண பிரம்மம். அந்த பிரம்மம் நமது நன்மைக்காக மண்ணில் இறங்கிவந்தது.. நம்மோடு இருந்தது, இப்போது இருக்கிறது.. இனி வரும் சந்ததியோடும் இருக்கும் என்ற உறுதியில் நின்றால் மட்டும் போதும். அவர் என்ன நமக்காக சொல்லியிருக்கிறார் என்பதில் சிந்தையைச்செலுத்தினால் மேலான நன்மைகள் கிட்டும்.

எப்படி ஒரு ஊருக்கு நாலு வழியிருக்குமோ அப்படி, நமது ஆன்மாவை கடைத்தேற்றுவதற்கான வழிகள் இவை என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. லவுகீக வெற்றி, ஆன்ம ஈடேற்றம். இதுவே மந்திர தீட்சையின் நோக்கம்.

மதுப்பழக்கம் மறைந்தது!

bless

2009 நவம்பர் முதல்வாரத்தில் முதன் முதல் சீரடிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு என்னிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தது. சீரடிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த பிறகு பாபாவை முழு மனத்தோடு நம்பினேன்.

”சீரடி ஸ்தலத்திற்கு வந்து தங்களை தரிசித்து ஊர், திரும்பிய பிறகு மதுப்பழக்கத்தை என் மனத்திலிருந்து நீக்கிவிடவேண்டும்!” என்று வேண்டினேன். அதை நிறைவேற்றினார். இந்த நான்கு ஆண்டுகளில் அந்த எண்ணமே என் மனதில் ஏற்படவில்லை. அன்று முதல் அவர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்.

இந்த நான்கு ஆண்டுகளில் ஒன்பது முறை சீரடிக்குச் சென்று வந்திருக்கிறேன். இரண்டு வருடங்களாக எனது பிறந்த நாள் அன்று பாபாவை தரிசிக்கும் பக்தர்கள் வயிறார சாப்பிட அன்னதானம் செய்து வருகிறேன். அதுவும் அவர் என் மனதில் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தியதால்தான்.

கரூரில் ஒரு பாபா ஆலயம் உள்ளது. அங்குதான் என் பிறந்த நாளின் போது அன்னதானம் செய்கிறேன். சென்ற மாதம் எனது நண்பரை சீரடிக்கு அழைத்துச்சென்றேன். படிப்படியாக பலரை சாயி பக்திக்குள் வழிநடத்துகிறேன்.

சாயி தரிசனம் புத்தகத்தில் பாபா ஆலயம் அமைக்க உதவி கேட்கப்பட்டதில், எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தந்தார். இடம் அமைந்து விட்டதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

சீரடியில் இருப்பதைப்போலவே இந்தக் கோயிலும் அமைய வேண்டும் என பாபாவை வேண்டிக்கொள்கிறேன். பாபா கோயில் கட்ட ஆகும் மொத்த சிமெண்ட் செலவை நானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் இருந்தாலும், நிரந்தர வேலையோ, போதிய வருமானமோ இல்லாதது ஒரு குறையாக உணர்கிறேன். எனது சக்திக்கு ஏற்றவாறு 25 மூட்டை சிமெண்ட் வாங்கித் தரவுள்ளேன்.

பாபாவுக்கு மிகக் கடமைப்பட்டுள்ளேன். என் மனதிலும் சில எண்ணங்களை நினைக்க வைத்து சில செயல்களையும் செய்ய வைத்த என் பாபாவுக்கு நன்றி. தற்சமயம் பாபா கோயிலில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் பாபா நிறைவேற்றி விட்டால், அதை விட பாக்கியம் இவ்வுலகில் எனக்கில்லை.

டி.எஸ். கணேஷ்.

சாயி பக்தர் துமால்

foursai

என் தொழில் வக்கீல் என்பதால் என்னிடம் இன்னொரு வழக்கு வந்தது. மூன்று சகோதரர்கள் சேர்ந்து அவர்களின் எதிரி எலும்பை முறித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். தாக்கப்பட்டவர்கள் ஒரு மருத்துவமனையில் இருபது நாட்களுக்கும் மேல் தங்கி சிகிச்சை பெற்றதற்கான சான்று பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்கள்.

இந்த வழக்கு மேல் முறையீட்டுக்காக என்னிடம் வந்தது. நானும் உடனே மேல் முறையீட்டு மனு,விடுதலை மனு தயார் செய்து, மூத்த ஆங்கிலேயரான செசன்ஸ் நீதிபதியிடம் சமர்ப்பித்தேன்.

வழக்கின் தன்மையைப் பார்த்த நீதிபதி, “ இது மிகவும் வலுவான வழக்கு. இதில் விடுதலை தர முடியாது” என்று கூறிவிட்டார். உடனே பாபாவை நினைத்தேன். பின் நீதிபதியிடம், ”ஐயா, இந்த வழக்கில் எதிரிகளின் எலும்பு முறிந்துவிட்டதாகச்சான்றளித்தவர் பதிவு பெற்ற மருத்துவரல்ல, போலி மருத்துவர். அவரது மருத்துவமனையிலேயே இருபது நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றதாகக்கூறியிருப்பது வேடிக்கையானது. மேலும், குற்றம் சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விவசாயிகள். தற்போது சிறையில் உள்ளார்கள். இதனால் அவர்களது விவசாயம் பாதிக்கிறது” என்றேன். குற்றம் உறுதியானால் நிரந்தர சிறைவாசம்தான் என்ற நீதிபதி எனது மனுவை ஏற்றுக்கொண்டார்.

அரசாங்க வக்கீல் என்னிடம், ”வழக்கில் விடுதலைக்காக வாதாடப் போகிறீர்களா? அல்லது நீதிபதியிடம் மன்னிப்புக் கோரி கருணை காட்ட வேண்டப்போகிறீரா?” எனக் கேட்டார்.

பாபா இருக்க பயமேன் எனக்கு? ”விடுதலைக்காக வாதாடப் போகிறேன்” என்றேன். வழக்கைத்தள்ளுபடி செய்து விடுதலை செய்ய வாதாடிய நான், பிறகு குறைந்த பட்சமாக தண்டனையைக் குறைக்க கருணை காட்டுமாறு வேண்டினேன்.

நீதிபதி என்னிடம், கருணை வேண்டும் என்றால் இவ்வளவு நேரம் வாதாடி எனது நேரத்தை வீணடித்து இருக்கவேண்டாம் என்றார்.

அரசாங்க வக்கீலிடம், ”எலும்பு முறிந்துவிட்டது என்று ஒரு போலி மருத்துவர் கொடுத்த சான்றை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் நீதிபதி. அதற்கு அரசாங்க வக்கீல், ”அடிபட்டவர்கள் மருத்துவரின் மருத்துவமனையில் இருபது நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றார்கள்” என்றார்.

கோபம் கொண்ட நீதிபதி ”இதை ஒரு மூன்றாம் வகுப்பு மேஜிஸ்ட்ரேட் இடம் சொல்லவும். நீர் ஒரு செசன்ஸ் நீதிபதி முன்னால் பேசிக்கொண்டிருக்கிறீர், மூன்றாம் வகுப்பு மேஜிஸ்ட்ரேட்டிடமல்ல!’ என்று அரசாங்க வக்கீலைக் கண்டித்தார்.

இதைக் கேட்ட அரசாங்க வக்கீல் அப்படியே அதிர்ந்துவிட்டார். மேலும் எந்த விவாதமும் தொடரவில்லை. குற்றவாளிகள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலையானார்கள். வக்கீல் தொழில் செய்து கொண்டே நான் சமுதாயப் பணியிலும் ஈடுபட்டேன்.

அரசாங்கம் நாசிக் மாவட்;ட உள்ளாட்சிக்கழகத்தின் முதல் தலைவராக என்னை நியமித்தது. இது ஒரு கவுரவ பதவி. இதை 1-11-1917 முதல் 13-5-1925 வரை வகித்தேன்.

இந்தப் பொறுப்பில் தினம் ஆயிரக்கணக்கான ஆவணங்களில் கையெழுத்திடும் நிலை. இதனால் வக்கீல் தொழிலை கவனிக்க முடியவில்லை. வருமானமும் குறைந்தது. அப்போதைய எனது வருமான வரி 260 ரூபாயிலிருந்து பூஜ்யமாகக் குறைந்து விட்டது. இந்த சேவைக்காக அரசாங்கம் எனக்கு ராவ் பகதூர் பட்டம் தந்தது. இது ஒரு சாதாரண பட்டம்தான். ஆனால் கவுரவப் பட்டம். இருந்தாலும் பாபாவின் மீது பாரத்தைப் போட்டு சேவையைத் தொடர்ந்தேன்.

ஒருநாள் கையெழுத்துக்காக ஆவணங்களை பியூன் என்னிடம் கொண்டுவந்தார். பொதுவாக எல்லாவற்றிலும் கையெழுத்திட்டு அன்றே அனுப்பிவிடுவேன். ஆனால் அன்று என்னைப் பார்க்க ஒரு முக்கியப் பிரமுகர் வந்திருந்தார். அவரிடம் நள்ளிரவு வரை பேசியதால் கையெழுத்து இடவில்லை. காலையில் இடலாம் என விட்டுவிட்டேன்.

காலையில் அவசர வேலையாக வெளியில் சென்றதால், ஆவணங்களை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டேன். மறுநாள் வழக்கம் போல் ஆவணங்கள் வந்தன. அதில் முந்தைய நாள் கையெழுத்திடாத ஆவணங்கள் ஏதுமில்லை.

அவற்றை வாங்கிப் பார்த்தபோது அனைத்திலும் என கையெழுத்து இருந்தது. நான் அதிர்ந்தேன். இது சாத்தியமே இல்லை. பியூனையும் முந்தைய இரவு சாப்பாட்டுக்கு அனுப்பிவிட்டேன். இது பாபாவின் செயல்தான் என நான் எண்ணி நெகிழ்ந்தேன்.

இந்தப் பதவியில் இருக்கும்போது துவக்கப்பள்ளிகள் எனது கட்டுப் பாட்டில் இருந்தன. பள்ளிக்கல்வி ஆய்வாளர் தீபாவளிக்கு முன்னதாக எல்லாருக்கும் சம்பளம் தர கூறினார். அவர் ஒரு முஸ்லீம். அந்த நேரத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை. மீண்டும் கூறினார். தலைமை கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, அரசாங்கத்திலிருந்து பணம் வரவில்லை, ஆகவே, சம்பளம் தர இயலாது எனக் கூறினார். மீண்டும் கல்வி ஆய்வாளர் நினைவூட்டினார்.

எனக்கு தர விருப்பம், ஆனால் முடியவில்லை. பாபாவிடம் சீட்டுக் குலுக்கிப் போட்டேன். கொடு என வந்தது. எல்லோருக்கும் சம்பளம் தரப்பட்டது. அனைவரும் மகிழ்ந்தனர். இதனால் வெகுநாட்கள் கழித்து எனக்கு தணிக்கை அதிகாரியிடமிருந்து ஆட்சேபணை வந்தது. நானும் நோட்டட் பார் பியூச்சர் கெயிடன்ஸ் என எழுதி பாபாவின் ஆசியால் அதை முடித்து விட்டேன்.

என் வாழ்வில் பாபாவின் உதவி எண்ணில் அடங்காது. ஆனால் சிலவற்றை மட்டும்தான் நான் கூறுகிறேன். 1910ம் ஆண்டு எனது நண்பர் கோபால் ராவ் பூட்டி, என்னை இங்கிலாந்துக்கு அனுப்பி பார் அட் லா படிக்க வைக்கும் செலவையும், மேலும் இந்தியாவில் எனது குடும்பத்திற்கு ஆகும் செலவையும் தான் கடனாகத் தருவதாகக் கூறினார்.

நாங்கள் எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு பாபாவிடம் அனுமதி பெறச் சென்றோம். சாமா, பாபாவிடம், என்னை மேல் படிப்புக்கு இங்கிலாந்து அனுப்பலாமா? எனக் கேட்டார். பாபா வேண்டாம் எனக் கூறிவிட்டார்.

”துமாலின் தேவை இங்குதான் தேவை. அவனது சொர்க்கமும் இந்தியாவில்தான். பின் ஏன் இங்கிலாந்து செல்லவேண்டும்?” எனக் கேட்டார்.

எனக்கு என்ன தேவை என்பதை பாபாதான் அறிவார். ஆகவே, இங்கிலாந்து செல்லவில்லை. 1911ல் மும்பை ஜெ.ஜெ. மருத்துவமனையில் எனக்கு அறுவை சிகிச்சை. மயக்க மருந்து தந்தார்கள்.

பாபா அறுவை சிகிச்சை மேஜைக்கு அருகில் என் தலைமாட்டில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்துக்கொள்ள பாபா இருக்கிறார் என்ற நம்பிக்கை வந்தது. அறுவை சிகிச்சை நலமாக முடிந்தது.

1915ம் ஆண்டு நாசிக்கில் எனக்கு அரசாங்க வக்கீல் பதவியை அளிக்க அரசு முன்வந்தது. இரண்டு நாள் அவகாசம் கேட்டேன். பாபாவுக்குக் கடிதம் எழுதினேன்.”இப்போது உள்ள வேலை நன்றாகவே உள்ளது. புதிய பதவி வேண்டாம்” என்றார் பாபா. எனவே, அதையும் மறுத்துவிட்டேன்.

1918ம் ஆண்டு பாபா மகாசமாதிக்கு முன், சீரடி, பூனா மற்றும் பல இடங்களில் ப்ளு காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது. பூனாவில் என் சகோதரன் மனைவிக்குக் காய்ச்சல் கடுமையாக உள்ளதாக தந்தி வந்தது. நான் உடனே எண்பது ரூபாய் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். போகும் வழியில் பாபாவிடம் ஆசீர்வாதமும், உதியும் பெற்றுச் செல்லலாம் என சீரடி வந்தேன்.

பாபாவை தரிசித்தபோது, அவர் என்னிடமிருந்து எண்பது ரூபாயையும் தட்சணையாகப் பெற்றுக்கொண்டார். எனக்குப் புரிந்துவிட்டது, என்னை அனுப்ப பாபாவுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் பாபாவிடம் அனுமதி கேட்டேன். நாளை பார்க்கலாம் என்றார். இப்படியாக மூன்று நாட்கள் தங்கினேன். மீண்டும் சகோதரரிடமிருந்து அவர் மனைவி இறந்துவிட்டதாகத் தந்தி வந்தது.

பூனாவில் என்ன நடக்கப் போகிறது என பாபாவுக்கு மட்டுமே தெரியும். காரண, காரியம் எனக்குத் தெரியவில்லை. அவரது தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டேன். பின் பூனா சென்றேன். இது பாபாவின் மகாசமாதிக்கு முன் நிகழ்ந்தது.

ஆகவே, பாபாவை அவரது ஸ்தூல தேகத்தில் தரிசிக்கும் வாய்ப்பையும், அவரோடு சில நாட்கள் தங்கும் வாய்ப்பையும் எனக்கு அவர் அளித்தது அவரின் கருணைதான்.

சிறு வயதுக் கனவை நிறைவேற்றிய பாபா!

 face

திருச்சியில் வசித்து வருகிறேன். எனது மகள் ஜி. பாரதி சென்ற ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றாள்.

டாக்டராக வேண்டும் என்பது அவளது சிறுவயது கனவு. எனவே எம்பிபிஎஸ் கவுன்சிலிங் மட்டுமே விண்ணப்பித்தோம். வேறு எதற்கும் விண்ணப்பிக்கவில்லை.

கவுன்சிலிங் தேதி வேறு தள்ளிக் கொண்டே போனது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்பொழுது எங்கள் குடும்ப நண்பர் திருமதி சுப.மணிமேகலை, பாபாவை வேண்டிக்கொண்டு ஒன்பது வாரம் பாபா ஆலயம் போகச் சொன்னார். எனது மகளும் செல்ல ஆரம்பித்தாள்.

கவுன்சிலிங் ஆரம்பித்து அழைப்புத் தேதியும் வந்தது. சென்னை வந்தோம். முதல்நாளே அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாக இன்டர்நெட்டில் போட்டுவிட்டார்கள். அழுது கொண்டே திரும்பி வந்துவிட்டோம். எனது மகள் விடாமல் பாபா கோயிலுக்குச் சென்று வந்தாள்.

ஒன்பதாவது வாரம் பாபாவுக்கு கேசரி செய்துகொண்டு சென்றாள். ரஷ்யாவில் சீட்டு கிடைத்து படிக்கச்சென்றுவிட்டாள். வருகிற ஜூலை மாதம் வருகிறாள்.

எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது எப்படி அனுப்பினோம் என்று இன்று நினைத்தாலும் பிரமிப்பாக உள்ளது. எல்லாம் பாபாவின் அருளால் கிடைத்தது என்பதை மட்டும் என்னால் மறுக்கமுடியாது. அவள் இன்றும் ரஷ்யாவில் பாபாவை நினைக்காமல் எந்த காரியத்தையும் செய்யமாட்டாள்.

அமுதா குணசேகரன், திருச்சி.