தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளித்திருநாளன்று தீபச் சுடரொளியில் இறைவனை ஒளிமயமாகக் கண்டு, நம்முள் ஞானஒளி பிரகாசிக்க வேண்டி வழிபடுகிறோம்.
இறைவனை ஒளியாகச் சொல்வது மரபு; வேதமும் அதையே சொல்கிறது.

‘சொற்றுணை வேதியன், சோதிவானவன்’ என்கிறார் அப்பர்.

‘ஆதியாய நான்முகனும் மாலும் அறிவறியா சோதியனே’ என்கிறார் சம்பந்தர்.

’ஜோதியே, சுடரே, சூடாமணி விளக்கே’ என்கிறார் மாணிக்கவாசகர்.

‘அருள் விளக்கே, அருட் சுடரே, அருட் ஜோதி சிவமே’ என்கிறார் வள்ளலார்.

‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்’ என்கிறார் திருமூலர்.

’மண்டிய பேரொளி, நீ வாழி! பராபரமே’ என்கிறார் தாயுமானவர்.

’ஞானசுடர் விளக்கு ஏற்றினேன், நாரணற்க்கு’ என்கிறார் பூதத்தாழ்வார்.

கீதையில் பகவான் கூறுகிறார்: ‘நான் பக்தனின் அந்தக்கரணத்தில் வீற்றிருந்து, அருளால் இரங்கி மெய்ஞ்ஞானச்சுடர் விளக்கால் அஞ்ஞான இருளை அகற்றி விடுகிறேன்’.

இவைகளை நினைவு கூர்ந்து விளக்கேற்றி வணங்கி தீபாவளியினை கொண்டாடுவோம்.

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Advertisements

பக்தை அளித்த பால் பேடா

கோவிந்த் பல்ராம் மன்கர் என்பவர் ஒரு முறை ஷீரடிக்கு செல்ல இருந்த சமயம், அங்குச் செல்லுமுன் திருமதி தாரகத் என்ற பக்தையை பார்க்கச் சென்றார். பாபாவிற்கு அன்புடன் எதாவது கொடுத்து அனுப்ப எண்ணிய  அந்த பக்தை வீடு முழுதும் தேடி, எதுவும் கிடைக்காமல் இறுதியில், ஏற்கனவே நிவேதனம் செய்த பால் பேடாவை கண்டவர், அதனை  பாபா ஏற்பாரா மாட்டாரா என்று துளிக்கூட எண்ணாமல்,  பாபா மேல் கொண்ட அன்பினால், அதை பாபா ஏற்பார் என்று நம்பிக்கை கொண்டு  பாபாவிடம் கொடுக்குமாறு சொன்னார்.
 கோவிந்த் பல்ராம், சீரடிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்யச் செல்லு முன், பால் பேடா கொண்டு செல்ல மறந்து விட்டார்.
 சர்வமும் அறிந்த பாபாவோ “எனக்கு என்ன கொண்டு வந்தாய்?” என்றார்.
கோவிந்த் ” எதுவும் இல்லை” என்றார்.
மறுமுறை தரிசனம் செய்தபோதும்,  பாபா இதையே கேட்டார்.
கோவிந்தும் ஒரே பதிலை சொன்னார்.
பாபா உடனே அவரிடம் “தாரகத் எனக்கு எதுவும் கொடுக்கவில்லையா ?’ என்று கேட்ட போதுதான், அவருக்கு ஞாபகம் வந்து,  அவரது தங்குமிடம் சென்று பேடாவை கொணர்ந்து கொடுத்தார்.
பாபா அதனை மிகவும் விரும்பிச் சுவைத்து உண்டார்.
பக்தியுடனும் அன்புடனும் அளிக்கும் தனது பக்தர்களின் காணிக்கையை அது எத்தகையது ஆயினும் ஏற்பார் அந்த பெருமான்.
அந்த சற்குருவை வணங்கி சாய் ராம் என்று கூவி நம்பி அவரைப் பணிவோம்.

ஜெய் ஜெய் சாய்ராம்.

சாயியின் அருள்

       ஸாயீயினுடைய அருள் பலஜன்மங்களில் செய்த தவத்தால் கிடைத்த பயன். தாகத்தால் தவிக்கும் பயணி தண்ணீர்ப்பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவதுபோல் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 
      சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியதுபோல் பார்வையாளர்களுக்குத் தெரிந்தபோதிலும், அவருடைய நாக்கு சுவையே அறியாததால் அவருக்கு அந்த உணர்வே கிடையாது. 
புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றி­ருந்து வரும் இன்பங்களை அவர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிக்கொள்வார்?
 
      கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லை.
 
     ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரம்மசரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும் தவிர வேறு எவருமே அதைப் பார்த்ததில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மசரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறெவரைச் சொல்லமுடியும்?
 
     தாயே பிறவி உறுப்புகளைப் பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப்பற்றி என் சொல்வது? பாபாவினுடைய பிரம்மசரியமும் அவ்வாறானதே; பூர்ணமானது; அபூர்வமானது. 
      அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக்கொண் டிருந்தார். சிறுநீர் கழிப்பதைத் தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக்கோளங்களைப் போல, இருக்கவேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை. 
      பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்தவிதமான ஆசையும் இல்லை; ஆசைகள்பற்றிய விழிப்புணர்வே இல்லை.
      ஸத்துவம், இராஜஸம், தாமஸம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பதுபோல் வெளிப்பார்வைக்குத் தெரிந்தது; ‘செயல் புரிபவரைப்பற்றற்றவராகவும் தூயஞானத்தின் உருவமாகவும் தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார். 

      உலகவிவகாரங்களே பிரம்மமாகத் தெரியும் முக்திநிலையில் அவர் 

இருந்தார். பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை 

அது.  தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் 

பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை. நானாவல்லீ ஆசனத்தி­ருந்து 

எழுந்திருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு 

நகர்ந்துவிட்டார். 

     இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை

பரவுலகத்தில் அடையவேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு 

அருள்புரிவதற்கென்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மஹிமை 

இவ்வாறே. 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

காகா புராணிக்

தோபேச்வர் என்னும் ஊரைச் சேர்ந்த ரகுநாத் (1821 – 1910) ஒரு சித்தர். காகா புராணிக் என்ற பெயரால் நன்கு அறியப்பட்டவர். பூர்வ ஜன்ம சம்பந்தத்தால் டாக்டர் பண்டித்துக்கு அவருடைய சேவடிகளில் ஈர்ப்பு உண்டாகி சிஷ்யராகிவிட்டார். 
      பண்டித் தம் குரு காகாவைக் கூவி அழைத்தார். அதனால் ஏற்பட்ட அனுபவம் அவரை விசுவாசத்தில் இருத்தியது. மனம் எப்படியோ, பாவம் எப்படியோ, அப்படியே பக்திப் பெருக்கு அன்றோ.
      இருந்தபோதிலும், பூஜைச் சடங்குகள் எல்லாம் பாபா விரும்பியபோதுதான் அனுமதிக்கப்பட்டன. அனுமதி இல்லை எனில், பாபா நரஸிம்ஹ அவதாரம் எடுத்தது போலக் கோபங்கொண்டு, பூஜை திரவியங்களையெல்லாம் விசிறி அடித்துவிடுவார். 
      நரஸிம்ஹ அவதாரம் எடுத்தபோது அருகே நிற்க எவருக்கு தைரியமிருந்தது? கோபச் சுவாலையாக அவர் இருந்தபோது, அனைவரும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிடுவர். 
      சிலசமயங்களில் திடீரென்று கோபாவேசம் கொண்டு, தம் கோபத்தை பக்தர்கள்மீது காட்டுவார். மற்றசமயங்களில் மெழுகைவிட இளகியவராகவும், சாந்தமும் மன்னிக்கும் சுபாவமும் உருவெடுத்து வந்தவர் போலவும் இருப்பார். 
      சில நேரங்களில் காலாக்கினியைப் போன்று பயங்கரமாகத் தோன்றி, பக்தர்களை வாள்முனையில் நடக்கச் செய்தார். சிலசமயங்களில் வெண்ணெயைவிட இளகியவராக உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்.
 
     வெளிப்பார்வைக்குக் கோபத்தால் அவர் நடுங்கலாம்; கண்விழிகளை வேகமாகச் சுழற்றலாம்; ஆனால், இதயத்திலோ தாய்க்குக் குழந்தையின்மேல் இருப்பது போன்ற கருணை ஊற்று பொங்கியது.
 

      அடுத்த கணமே தம்முடைய சுய சாந்திநிலையை மீண்டும் அடைந்து பக்தர்களைத் தம்மிடம் வருமாறு உரக்க அழைப்பார், ”நான் யார்மீதாவது கோபப்படுவது போலத் தெரிந்தாலும், என்னுடைய இதயத்தில் கோபமே கிடையாது.– தாய் தன் குழந்தையை எட்டி உதைத்துத் தள்ளினால்தான், கடல் ஆற்றை வாராதே என்று திருப்பியடித்தால்தான், நான் உங்களை வெறுத்து ஒதுக்கி இன்னல் செய்வேன். நான் என் பக்தர்களின் பிடியில்தான் இருக்கிறேன்; அவர்களின் பக்கத்தில் நிற்கிறேன். எப்பொழுதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன்; துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது ஓடிவருகிறேன்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

பாவச் சுமையினை குறைத்தல்

        சாய் நாதர் தினமும் வீடு வீடாகச் சென்று உணவு பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக ஐந்து வீடுகளுக்கு செல்வார்.
        எல்லாம் வல்ல இறைவனுக்கு ஏன் இந்த நிலை என்று பலர் வியந்தனர்.  அவர் நினைத்தால் உலகுக்கே உணவு படைக்கலாமே எனவும் பேசினார். சந்ததிசெல்வம், புகழைத் துறந்தவர் என்றும் யாசித்தே உணவு பெருவர்.
        ஏனெனில் சன்யாசிகள் அவர்களுக்கு  என்று எதுவும் இல்லாத நிலையில் யாசித்தே உணவு பெருவர்.   அவர்களுக்கு உணவு அளிப்பது சம்சாரியின் கடமை என சாத்திரம் சொல்கிறது.
        ஆயினும் சாய் ஒரு சந்நியாசி அல்லவே ! மேலும் அவர் சம்சாரியும்  அன்று!  அவருக்கு உலகே வீடு. உலகோரைக் காப்பதுவே அவர் செயல். எனவே அவர் செய்யும் எந்த ஒரு செயலையும் விமர்சிக்க இயலாது   மற்றும் அவர் மக்களை பாவச் சுமையிலிருந்து காக்கவே பிச்சைப் பாத்திரம் சுமந்தவர்.
   சரி, இது ஏன்,  எவ்வாறு என்று அறிவோமா ?
       உணவு தயாரிக்கையில் அதாவது கழுவுவது, இடிப்பது, அரைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது பல கிருமிகளையும், ஜந்துக்களையும் நாம் கொல்ல நேரிடுகிறது.  அதனால் ஏற்படும் பாவச் சுமைகளுக்குப் பரிகாரத்தினையும் சாத்திரம் சொல்கிறது. பிரம்மனுக்கோ, தேவருக்கோ, வேதத்திற்கோ பித்ருக்களுக்கோ அல்லது வீடு தேடி வரும் அதிதிக்கோ உணவிட்டால் பாவ விமோசனம் கிடைக்கும் என்றும் சொல்கிறது.

          சாய்ராம் அவ்வாறு பிச்சை கேட்டுச் சென்றதன் மூலம் மக்களை பாவத்திலிருந்து காத்து, அவர் தம் பாவத்தினை அவரே இரந்து பெற்றார்.            இதன் மூலம் நாம் எல்லோரும் உணர வேண்டியது,  இல்லார்க்கும் வறியவர்க்கும் உணவிட வேண்டியது நம் கடமை மட்டுமின்றி, அச்செயல் நம் பாவச் சுமையையும் குறைக்கும் என்பதுவே.

சாயியின் கிருபை!

      உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால், ஸாயீயினுடைய உருவத்தில் சிர்டீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு, முத­ல், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டுவிடவேண்டும். பக்தியாலும் பிரேமையாலுந்தான் அவனை அறியமுடியும். 
      சிர்டீ மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்தகாலத்தில் பழுத்து, ஸாயீ என்னும் முளை விட்டிருக்கலாம். இது சிலகாலம் கழித்து சிர்டீக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது. 
விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது; ஜன்மமில்லாதது ஜன்மத்தை ஏற்றுக்கொண்டது; உருவமில்லாதது உருவெடுத்தது; கருணையின் ரஸம் மனித உருவெடுத்தது.
 
      புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கொடை-இந்த ஆறு மஹோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன. பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாவென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றாநிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக்கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக்கொண்டார். 
     ஆஹா! அவருடைய கிருபைதான் என்னே! பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய நிஜமான இயல்பை இறைவனே அறிவார். வாக்கின் தேவதையாகிய ஸரஸ்வதியும் சொல்லத்துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலைகுனியச் செய்தன. ஸாயீ இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே பேசினார். 
     இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது; இருப்பினும், கடமை தவறக்கூடாது என்னும் காரணத்தால் சொல்லி­யே தீரவேண்டியிருக்கிறது. 
     பக்தர்களின்மீது கருணை கொண்ட ஸாயீ, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார், ”அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசா­.லி.”
      , பாபா எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார். எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல். எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை. எவ்வளவு மரியாதை. பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது; இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். 

      என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டுவிட்டது எனில், அதைக் 


காதுகொடுத்துக் கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்துகொள்ள 

வேண்டுமெனில், ஸாயீநாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் 

அகன்றுவிடும்.

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து