சீரடியை வளர்த்த ராம நவமித் திருவிழா1897 – ம் ஆண்டு வாக்கிலிருந்துதான் சீரடிக்கு ஏராளமானன மக்கள் வர ஆரம்பித்தார்கள் என்று சொல்லலாம். அதற்கு முன்பெல்லாம் சீரடியில் பாபாவுக்காக வரும் பக்தர்கள் கூட்டம் சிறு நூறுகள் அல்லது சில ஆயிரங்களிலேயே இருந்தன. அதன் பிறகு அது ஏழாயிரம் முதல் எழுபத்தைந்தாயிரம் வரை உயர்ந்தது. பிறகு லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் சீரடியில் குவியத் தொடங்கியது.
இத்தகைய சிறப்பு மிக்க ராம நவமித் திருவிழா சீரடியில் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதே மக்கள் வெள்ளம் திரள ஆரம்பித்தது. இதற்கு வித்திட்டது ஒரு சர்வேயர். அவரது பெயர் கோபால் ராவ் குண்ட். அவருக்கு மூன்று மனைவியர் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லை. பாபாவை வேண்டிக் கொண்டு பிள்ளைப்பேறு கிடைத்ததும் அதற்கு நன்றிக்கடனாக ஏதாவது ஒரு விழாவை நடத்தவே அவர் தீர்மானித்திருந்தார்.
பாபா முஸ்லீம் என கருதப்பட்டதால், அவரை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகவோ என்னவோ, அவர் முஸ்லீம் மகான்களின் நினைவு தினமான உரூஸ் பண்டிகையைக் கொண்டாட விரும்பி, தன் போன்ற பக்தர்களான தாத்யா பாடீல், தாதா கோதே பாடீல், சாமா போன்றவர்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் பாபாவிடம் வேண்டி அனுமதியைப் பெற்றபோதிலும், அந்த ஊர் கிராம முன்சீப் குல்கர்னி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அனுமதி தரக்கூடாது என்று எழுதி அனுப்பினார். ஆனால் பாபாவின் அனுக்கிரகம் இருந்ததால் விழாவுக்கு அரசு அனுமதி அளித்தது.  அதன் பிறகு, உரூஸ் கொண்டாடப் பட்டது. இந்த தினம் ராமநவமி தினமாக இருக்கக் கூடும் என பக்தர்கள் தீர்மானித்தனர். அதன் விளைவாகத்தான் இரண்டு விழாக்களையும் ஒன்றாக நடத்த முடிவு செய்தனர்.
இந்துக்களும், முஸ்லிம்களும் இதற்கு ஒப்புதல் தரவே, விழா களைகட்டத் தொடங்கியது. சீரடியில் இந்து முஸ்லீம் இணைப்புக்கு இது பாலமாக விளங்கியது. இதில் சந்தனக்கூடு ஊர்வலம் போன்றவையும் சேர்ந்து விழாவைப்புதுமையாக்கியது. இது 1912-ல் நடந்தது.
பாபாவின் முஸ்லீம் பக்தரான அமீர் சக்கர் அவர்களின் மேற்பார்வையில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. மூன்று ஆண்டுக்குப் பிறகு அவரது மனைவி இதை மேற்பார்வை செய்தார்.
ராமநவமித் திருவிழா பெரிய அளவில் பேசப்படுவதற்கும், சீரடி ஒரு சமஸ்தானமாக மாறுவதற்கும் ராதா கிருஷ்ண மாயி என்ற அன்னை தான் காரணம். அவரது கடுமையான உழைப்பு காரணமாக செல்வந்தர்கள், பக்தர்கள் என சேர்ந்து ராமநவமித்திருவிழாவை பிரபல்யப் படுத்தினார்கள். இந்த விழா மிகப்பெரிய அளவு பிரபல்யமானது
1912 – ம் ஆண்டில்தான். கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர் பீஷ்மா என்ற பக்தர், காகா மகாஜனி ஆகியோர் கலந்து பேசிதான் உணுஸ் தினத்தில் ராம நவமி கொண்டாட பாபாவிடம் அனுமதி பெற்றனர்.
ராமர் பற்றிய பாடல்கள் அனைத்தையும் பீஷ்மா இயற்றிப் பாடினார். பகலில் ராமநவமித் திருவிழா, இரவில் சந்தனக் கூடு விழா என நடந்தது. 1913 – ல் இருந்து ராம நவமிக் கொண்டாட்டத்தில் நிகழ்ச்சிகள் அதிகமாக்கப் பட்டன.
சித்திரை முதல் தேதியிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சப்தாஹம் செய்ய ஆரம்பித்தாள் ராதாகிருஷ்ணமாயி. பக்தர்கள் அனைவரும் முறை வைத்துக் கொண்டனர்.  சித்திரை ஒன்று முதல் பன்னிரண்டாம் தேதி வரை பக்தர்களின் கூட்டத்தால் சீரடி திணற ஆரம்பித்தது. மல்யுத்தப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இதற்குப் பிறகுதான் தாஸ்கணு மகராஜ் பாபாவிடம் வந்து அங்கு கீர்த்தனை செய்தார். துவக்கத்தில் ஐந்து முதல் ஏழாயிரம் பேராக இருந்த மக்கள் கூட்டம், எழுபத்தைந்தாயிரமாக உயர்ந்தது. இந்தளவுக்கு சீரடியை ராமநவமித் திருவிழா உயர்த்தியது.
நமது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் இந்த விழா ராம நவமி அன்று மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது. காலை முதல் பகல் பன்னிரண்டு மணி வரை ஹோமம், ஆரத்தி, அன்னதானம் என அமர்க்களப்படும். இடம் சிறியதாக இருப்பதாலும், பக்கத்தில் கிறித்தவ குடும்பத்தின் இடையூறாலும் இவ்விழா எளிமையாக நடைபெற்றாலும் பக்தர்கள் எறும்புகளைப் போல வருகிறார்கள். உண்மையாகவே வெல்லக்கட்டியை மொய்க்கும் எறும்புகளைப்போல, பக்தர்கள் வரிசையாக தெருவில் நின்று பாபாவை தரிசிக்க வருவது நமது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் காணக் கண்கொள்ளாக்காட்சியாகும். அனைவரும் வாருங்கள், அவன் அருளைப் பெறுங்கள்.
Advertisements

சின்னதோ பெரியதோ உன் கோரிக்கைகளை பாபா கேட்பார்!சாயி பாபா செய்த அற்புதம்
என் பெயர் பத்மாவதி. என் கணவர் பெயர் துரைராஜ். சென்னை நுங்கம்பாக்கத்தில் வாழ்ந்து வந்தோம். ஐந்து பிள்ளைகள். கஷ்டத்தோடுதான் வாழ்க்கையை ஆரம்பித்தேன். என் கணவர் குடித்தே வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதோடு, பாதி நாள் வாழ்க்கையோடு வாழ்வை முடித்துக்கொண்டார்.
அம்மனைத்தான் வணங்குவேன். பாபா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. போன ஜென்மத்துப்புண்ணியம் இருந்ததால் அவர் எங்களை காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போல இழுத்துக் கொண்டார். எப்பொழுதும் அவரது நாமத்தையே இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருக்கும் நிலையைத் தந்தார் அவர்.
என் மகள் மற்றும் குடும்பத்தார் சாயி தரிசனம் பத்திரிகையை வாங்கிப்படிப்பார்கள். என்னை ஒரு நாள் ஆலந்தூரில் உள்ள எனது தங்கை சாவித்திரி என்னை சீரடிக்குப் போகலாம் என அழைத்தாள். நானும் அவளும் இரண்டு பேரும் மட்டும் சீரடிக்குப் போனோம். பாபாவின் இடங்களை தரிசித்து பரவசமடைந்தோம். அதன் பிறகு சென்னை வந்த நான் தீவிர சாயி பக்தையாகி. எல்லாவற்றுக்கும் அவரையே நம்ப ஆரம்பித்தேன்.
என் கணவருக்கும் அவரது சகோதரிகளுக்கும் உரிமையான இடம் பாகம் பிரிக்கப்படாமல் இருந்தது. அவர் போய் விட்ட நிலையில் அது பெரிய பிரச்சினையாக ரூபம் எடுத்தது. பாபாவுக்கு ஒன்பது வார விரதமிருந்து வேண்டிக் கொண்டேன். ஒரு பிரச்சினையும் இல்லாமல் பாகம் பிரிக்கப்பட்டது.
என் மகனுக்குத் தலைவலி வருவதைத் தவிர்க்க எப்போதும் கண்ணாடி அணிந்திருப்பான். ஒரு முறை, மீஞ்சூர் போக ரயிலுக்கு நின்றிருந்தோம்.  இரவு நேரம் வேறு. கூட்ட நெரிசலில் கண்ணாடி தவறி கீழே விழுந்துவிட்டது. கூட்டம் கண்ணாடியை மிதித்திருககும் என நினைத்தோம். பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். வண்டி போன பிறகு செல்போன் வெளிச்சத்தில் தேடிப் பார்த்தால், சிறு கீறல் கூட இல்லாமல் இருந்தது.
என் கடைசி மருமகளுக்கு இரண்டாவது பிரசவம். சர்க்கரை வியாதி இருந்ததால் அனைவரும் பயந்து கொண்டிருந்தோம். பிரசவ நாளன்று பாபாவின் உதியை அவள் வயிற்றில் தடவி விட்டேன். சிறிது நேரத்தில் நல்லபடியாக ஆண் குழந்தை பிறந்தது. பிறகு சர்க்கரை வியாதியும் குறைந்த்து.
                                                பத்மாவதி, நுங்கம்பாக்கம்.

நில்! கவனி! சொல்!-3


நேற்றைய தொடர்ச்சி
சொல்
இன்றைக்கு வருகிற நிறைய பிரச்சினைகள், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதில்தான் ஆரம்பித்து பரவுகிறது. நின்று நிதானித்து பிறர் கூற வருவதை கவனித்து உணர்ந்துகொண்டால் நாம் எப்படி பதில் பேசலாம் என்பதையும் அறியலாம்.
நாம் சொல்லுகிற வார்த்தைக்கு பதில் சொல் சொல்ல முடியாதவாறு நிதானித்து வார்த்தைகளை உருவாக்கிப் பார்க்க வேண்டும்.
உன் போன்ற பெண்களோ, உன் பெண்ணோ கூட இன்றைக்கு தவறான பாதைக்குப் போவதற்கு முக்கியக் காரணம், அவர்கள் நிறைய நேரம் போன் மூலம் பேசிக்கொண்டிருப்பதுதான்.. இத்தகைய பேச்சுக்கள் மூலம் ஏமாந்து போவதும் உன் போன்ற பெண் பிள்ளைகள்தான். எனவே, தேவையற்ற விதத்தில் எதையேனும் சொல்வதற்காக அடிக்கடி போன் போட்டுப் பேசுவதைத் தவிர்த்துவிடு. கூடிய வரையில் தகவலை நேரில் சொல்லி அனுப்பு..அல்லது பிறர் மூலம் கூறு.
உன்னோடு அடத்திற்குப் பேசுபவர்கள், அதிக அளவில் நெருங்கி வர நினைத்துப் பேசுபவர்கள் ஆகியோரிடம் நறுக் என ஒரு வார்த்தையில் பதில் சொல்.. நானும் கொஞ்சம் பேசிப் பார்க்கலாமே என்று பேச ஆரம்பித்தால் சிக்கல் வந்துவிடும்.
இன்றைக்கு கோர்ட் படிகளில் ஏறிக்கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பாரேன்.. அவர்களில் பலர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்பு அவனோ, அவளோ பேசிய பேச்சில் மயங்கி, தனது பெற்றோர் சொற்களை மீறி திருமணம் செய்துகொண்டிருப்பர். கடைசியில் உண்மை சொரூபத்தை அறிய வரும் போது, அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் வாழ்க்கையையே இழந்துவிடுவார்கள்.
இந்த நாக்கு இருக்கிறதே அது நரகத்தையும் உருவாக்கும், சுவர்க்கத்தையும் உருவாக்கும். உனது நாக்கு உன் குடும்பத்தாருக்கு சொர்க்கத்தை உண்டாக்கினால் போதும். மற்ற நேரத்தில் அதில் இருந்து ஒரு வார்த்தையும் பிறக்காமல் பார்த்துக்கொள்வதுதான் நலம்.

மகளே! உன் வாயிலிருந்து புறப்படுகிற சொல் எப்போதும் குறைந்த ஸ்ருதியில் இருக்கவேண்டும். உச்சஸ்தாயியில் சொல்வது பிரச்சினையை உண்டாக்குவதால், சத்தத்தைக் குறைத்துப் பணிவோடும், கனிவோடும் பேசவேண்டும். நமது தகுதிக்கு சமமானவர்கள், நம் வயதுக்கும், தகுதிக்கும் கீழானவர், நம்மோடு மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறவர்கள், அலப்புகிற புத்தியுள்ள மக்கள், குழந்தைகள் ஆகியோருடன் எதையும் சொல்வது உசிதமானது அல்ல. உனக்கு மேல் தகுதியுள்ளவர்களிடத்தில் அவர்களைப் பற்றியோ, உன்னைப் பற்றியோ மிகைப்படுத்தி, அல்லது எதையேனும் சொல்லி வைப்பதும் ஆபத்து. அதாவது உன் வாயைத் திறந்து எதையும் நீ சொல்ல வேண்டாம் என்பதே என் கருத்து.
ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தைகளை சொல். அதிலும் பிறர் நலம் சார்ந்த வார்த்தைகளைச்சொல்வது மிகவும் நல்லது. அதைத்தான் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்கப் பழம் என்பார்கள்.
உனது சொல் ஒன்றிரண்டாக இருக்கட்டும். அதற்கு மேல் வந்தால் அதில் பாவங்கள் சேர்ந்து விடும்.. பிரச்சினைக்கு வித்திடும்.
என்ன மகளே! அப்பா இந்தக் கடிதத்தில் எனக்கு தேவையில்லாத விஷயத்தைப் பற்றி சொல்லி வீணடித்துவிட்டார் என்று நினைக்கிறாயா?  என் வார்த்தைகளை நின்று நிதானித்து உணர்ந்து பார். நான் சொல்வதில்தான் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது என்பதை அறிவாய்.
அடுத்த முறை சந்திக்கலாம் குழந்தாய்!
அன்புடன் அப்பா  சாயி பாபா

மகளே! உன் வாயிலிருந்து புறப்படுகிற சொல் எப்போதும் குறைந்த ஸ்ருதியில் இருக்கவேண்டும். உச்சஸ்தாயியில் சொல்வது பிரச்சினையை உண்டாக்குவதால், சத்தத்தைக் குறைத்துப் பணிவோடும், கனிவோடும் பேசவேண்டும். நமது தகுதிக்கு சமமானவர்கள், நம் வயதுக்கும், தகுதிக்கும் கீழானவர், நம்மோடு மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறவர்கள், அலப்புகிற புத்தியுள்ள மக்கள், குழந்தைகள் ஆகியோருடன் எதையும் சொல்வது உசிதமானது அல்ல. உனக்கு மேல் தகுதியுள்ளவர்களிடத்தில் அவர்களைப் பற்றியோ, உன்னைப் பற்றியோ மிகைப்படுத்தி, அல்லது எதையேனும் சொல்லி வைப்பதும் ஆபத்து. அதாவது உன் வாயைத் திறந்து எதையும் நீ சொல்ல வேண்டாம் என்பதே என் கருத்து.

ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தைகளை சொல். அதிலும் பிறர் நலம் சார்ந்த வார்த்தைகளைச்சொல்வது மிகவும் நல்லது. அதைத்தான் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்கப் பழம் என்பார்கள்.
உனது சொல் ஒன்றிரண்டாக இருக்கட்டும். அதற்கு மேல் வந்தால் அதில் பாவங்கள் சேர்ந்து விடும்.. பிரச்சினைக்கு வித்திடும்.
என்ன மகளே! அப்பா இந்தக் கடிதத்தில் எனக்கு தேவையில்லாத விஷயத்தைப் பற்றி சொல்லி வீணடித்துவிட்டார் என்று நினைக்கிறாயா?  என் வார்த்தைகளை நின்று நிதானித்து உணர்ந்து பார். நான் சொல்வதில்தான் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது என்பதை அறிவாய்.
அடுத்த முறை சந்திக்கலாம் குழந்தாய்!
அன்புடன் அப்பா  சாயி பாபா

சாயி – ஷிர்டி பாபாவின் புனித சரிதம்-3


சாயி  – ஷிர்டி பாபாவின் புனித சரிதம் – குங்குமம் இதழில் தொடராக வந்து கொண்டுள்ளது. அற்புத நடை. சரிதத்தின் மொழி பெயர்ப்பு நம்மை மெய் சிலிர்க்கவைக்கும் ஒன்று.

இதன்   பகுதி 3 னை படிக்க இங்கே கிளிக்செய்யவும்

நில்! கவனி! சொல்!-2


நேற்றைய தொடர்ச்சி
கவனி
நீங்கள் எவ்வளவோ பேசுகிறீர்கள்.. நான் அதற்கு    குரல் கொடுத்து பதில் கூறுகிறேனா?  மவுனமாக கவனித்து, தேவைக்கேற்பவே பதில் கூறுகிறேன். பல நேரங்களில் நான் பேசுவதில்லை, கவனிக்கிறேன். காரணம் என்ன?  உன் வார்த்தையால் நீ சிக்கிக்கொள்ள மாட்டாயா? அதை வைத்து உன்னை பிடித்துக்கொள்ளலாமா என்று யோசிக்கிற கிரகங்கள் என்னிடம் வேண்டிக் கொள்வதுதான்.
பதிலுக்குப் பேசாமல் மவுனமாக அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டிருந்தால், எதிராளி அதிகமாகப் பேசமாட்டார். அதனால் உனக்கு நன்மையே நடக்கும். ஒருவர் பேசும்போது அவர் வாயை மட்டும் பார்க்காதே.. கண்களைப் பார்.. அவரது உடம்பைப் பார்.. ஏனெனில் உடம்பும் பேசும்.
உடம்பு பேசுமா?
உடம்பும் பேசும்.
ஒருவர் பேசும்போது அல்லது அவரது உடம்பு பேசும்போது நாம் கவனித்தால் அதிலிருந்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவர் நிற்கிற தோரணை, நடக்கிற தோரணை, பார்க்கிற தோரணை போன்ற பல நிலைகளை வைத்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை கணிக்கலாம்.
ஒருவன் நிற்கிற தோரணை அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் காட்டும், நிமிர்ந்து நிற்பவன் அஞ்சாநெஞ்சன், குனிந்து நிற்பவன் கோழை, பின் கை கட்டுபவன் எச்சரிக்கையானவன், கும்பிடு போடுகிறவன் காரியவாதி, நேரே நின்று பேசுபவன் நிஜமாக உரையாடுகிறவன், திரும்பிக் கொண்டு பேசுகிறவன் புறக்கணிக்கிறவன் என அறியலாம்.
கடுத்தது காட்டும் முகம், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனநிலையை முகமும், கண்களும் வெளிப்படுத்தும். இப்படித்தான் கால்கள், கைகள் வெளிப்படுத்தும். பயத்தால் உடல் நடுங்கும்.. கோபத்தால் உடல் குலுங்கும்.. இரத்தம் சூடேறும்.. இவை மன நிலையை காட்டும் விஷயங்கள். பேசும்போது தலை தாழ்ந்தால் அவர் கூச்சப்படுகிறார், வேறு பக்கம் பார்த்தால் அவர் உங்களது பேச்சை விரும்பவில்லை.. பேசும்போது உறங்குகிறார், அல்லது கொட்டாவி விடுகிறார் என்றால் சீக்கிரம் பேச்சை முடித்துக்கொள் என்று அர்த்தம். முக பாவணைகளை வைத்தும் அவரது மனநிலையைப் படிக்கலாம்.
உங்களைப் பார்த்ததும் கண்கள் துடித்தாலோ, அதிலிருந்து கண்ணீர் திரண்டு வந்தாலோ அவர் மிகவும் அன்பாக இருக்கிறார்.. அனல் மூச்சை வெளியிட்டால், மூக்கு துடித்தால் கோபத்தோடு இருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
நம் எதிரில் இருப்பவர் பேசுவதைப் பார்த்தே நமது கண்கள் நம்மை 95 சதவிகிதம் பதில் பேசத்தூண்டுகிறது. மற்றபடி கேட்டல் உணர்தல், நுகர்தல் மூலம் பேசுவது வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே நம்மிடம் உள்ளது. உண்மையில், நாம் நிறைய விஷயங்களைத் தவறவிடுகிறோம்.
ஒருவர் நிற்றல், நடத்தல், கவனித்தல், சைகை செய்தல், முகபாவனை போன்றவற்றின் மூலம்தான் மிக அதிகமாக பிறருடன் தொடர்பு கொள்கிறார். அதன் அளவு 55 சதம். வார்த்தைகளின் ஏற்ற இறக்கத்தால் பிறருடன் அவர் பகிர்ந்து கொள்வதும், வெறும் வார்த்தைகளை அவர் பேசுவதும் இதை விடக் குறைவுதான்.
மனிதர் ஆடைகளால் பேசுகிறார்கள். பகட்டான ஆடைகள் ஒருவரது டாம்பீகத்தை, செல்வத்தை, நாகரீகத்தை, இன்ன பிறவற்றைப் பேசுகின்றன. இதனால்தான் ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள்.
மென்மையாகத் தொடுவதும், வன்மையாகத் தொடுவதும் மனநிலையை வெளிப்படுத்துவது. இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை கூர்ந்து நோக்கக் கற்றுக்கொள். இந்தக் கவனிப்புகள் எல்லாம் சாதாரண கவனிப்பு மட்டுமே. ஒருவர் உன்னோடு பேச வருகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள். அதற்கேற்பப் பேசப் பழகு.
என்னதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும், எதிர்பால் நண்பராக இருந்தால் எப்போதும் ஒரு அடி தள்ளியே இரு. வயதானவராக இருந்தாலும், இளைய வயதுள்ளவராக இருந்தாலும்கூட அப்படியே செய்.. அது உன்னை எல்லா நிலைகளில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ளும். இல்லாவிட்டால் உன்னை தர்ம சங்கடத்தில் தள்ளி, மனநிம்மதியைக் கொடுத்து வருத்தப்பட வைத்துவிடும்.
உனக்கு எனது அருள் இருக்கிறது என்பதற்காக அதை வெளியே காட்டிக்கொள்ளவோ, அல்லது பிறரை அருளை நாடவோ கூட தனியாகச் செல்வது நல்லதல்ல. கூட்டத்தோடு சென்றாலும் அவர்கள் கவனம் உன் மேல் படாதபடி பார்த்துக்கொள்..சில தாந்தீரிகவாதிகள் மீது மரியாதைக் காட்டிப்பேசினால்கூட, நள்ளிரவு நேரத்தில் போன் செய்து, உன்னிடம் தவறான முறையில் பேசுவார்கள். அவர்களிடம் கேட்டால், நானல்ல, என்னை இயக்குகிற யட்சிணிகள் அவ்வாறு பேசச் சொல்கின்றன என்பார்கள். இத்தகைய துணிகரமான பாவிகளிடமிருந்து உன்னை எப்போதும் காத்துக்கொள்ள, நீ அவர்கள் நோக்கத்தை கவனிக்க வேண்டியது அவசியம். இப்படித்தான் மகளே! ஒவ்வொன்றையும் எச்சரிக்கையாக கவனித்து நடந்துகொள்.
                                           இதன் தொடர்ச்சி நாளை

நில்! கவனி! சொல்!


ஸ்ரீ சாயியின் குரல்

என் அன்புக் குழந்தாய்!
சமீப காலமாக உனக்கு ஏற்பட்டு வருகிற சில கசப்பான அனுபவங்களை நினைத்து வருத்தப்பட்டு வருகிறாய்.. உனக்கு மேலிருப்பவர்கள் உன்னை நிந்திப்பதும், உன்னைக் கேவலப்படுத்துவதும், உன் வாயைப் பிடுங்கிக்கொண்டு அதைக் குற்றமாகப்பேசுவதும் தொடர்கதைகளாகிக் கொண்டு வருகின்றன. இதனால் நீ கலங்குகிறாய் அல்லவா?
வீட்டில் உன்னை கண்டபடி கடிந்துகொண்டு வாசலில் தள்ளி வைப்பதையும், வழியின்றி நீ திகைத்து நிற்பதையும் கண்டு  பரிதவிக்கிறேன்.
இதோ நான் கற்றுத் தரும் சில விஷயங்கள் உனக்கு ஆறுதலாகவும் தெளிவாகவும் இருக்கும். நீ நடக்க வேண்டிய வழிகளை போதிக்கும். என் வழியைப் பின்பற்று.. உன் கப்பல் எந்த சேதாரமும் இல்லாமல் கரை சேரும்.
முதலில் உன் வாய்க்குக் கடிவாளம் போடு்
உனது வார்த்தைகள் உன்னைப் பற்றி பிறருக்கு அடையாளம் காட்டக்கூடியவை. வார்த்தைகளால் இந்த உலகம் தலைகீழாக மாறியிருக்கிறது. போரும், சமாதானமும், சண்டையும், சந்தோஷமும், இன்பமும் துன்பமும் இந்த வார்த்தைகளால்தான் வருகின்றன.
எனவே, நீ வார்த்தைகளைச் சொல்வதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதல் ஆலோசனை. இதற்காக நான் மூன்று மந்திரங்களை உனக்கு உபதேசிக்கிறேன். அவை நில், கவனி, சொல்! என்பவை.
நில் என்பதற்கு நிதானித்தல் என்று பொருள். கவனி என்பதற்கு பிறரை பேசவிட்டு கவனிப்பது மட்டுமின்றி, அவரது உடலின் பேச்சுக்களையும் கூர்ந்து கவனிப்பது என்பது பொருள்.  சொல் என்பது அதற்குப் பிறகு நீ பேச வந்ததை உடனே சொல்லாமல் அவர்கள் விரும்பம் விதத்தில் பேசு என்பது பொருள். இவற்றை சரியாகக் கடைப்பிடித்தால் உனக்கு சிக்கல்கள் வராது.
நில்
உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உள்ளத்தில் ஒன்று உதட்டில் வேறொன்று வைத்துப்பேசுகிறார்கள். இந்த கபடம் தெரியாமல் எதையோ பேசி சிக்கிக் கொள்கிறாய். எதைக் காக்க முடியாவிட்டாலும் உனது நாக்கை மட்டுமாவது காத்துக்கொள். இல்லா விட்டால் சொல் குற்றத்தில் சிக்கிக்கொண்டு துன்பப்படுவாய் என்பார் வள்ளுவர்.
ஒரு மனிதனின் வாழ்வும் தாழ்வும், உயர்வும் மேன்மையும், வீழ்ச்சியும் மாட்சியும் அவனது நாவில் தான் குடியிருக்கின்றன. அந்த நாக்கிலிருந்து வரும் வார்த்தையை வைத்தே இவற்றை அவர்கள் எடை போடுகிறார்கள்.
ஒருவரிடம் நட்பு கொள்வதும் பகைமை கொள்வதும், உயர்வான மதிப்பைப் பெறுவதும், இகழ்ச்சியடைவதும்கூட இந்த நாக்கினால்தான் வருகிறது. எனவேதான் ஒருமுறை பேசுவதற்கு முன்பு பலமுறை யோசனை செய் என்றார்கள். எதைக் கொட்டினாலும் அள்ளிவிடலாம், வார்த்தையைக் கொட்டினால் அள்ளமுடியாது.
வில்லில் இருந்து சென்று அம்பும், வாயிலிருந்து சென்ற சொல்லும் இலக்கை தாக்காமல் விடாது. அதைத் திரும்பப் பெறவும் முடியாது. தீயினால் சுட்டாலும் புண்ணாகி ஆறிவிடும், நாக்கினால் சுட்டுவிட்டால் ஆறவே ஆறாது.
சொல்லாத சொல்லுக்கு நீ முதலாளி.. சொன்ன சொல் உனக்கு முதலாளி. இப்படி பல விஷயங்கள் சொல்லைப் பற்றி இருக்கின்றன. எனவே, அதைப்பற்றி பேசுவதற்கு முன்பும் நிதானம் தேவை.
நாம் பேசுவதற்கு மட்டும்தான் நிதானம் தேவை என்றில்லை. பிறர் பேசுவதையும் நிதானமாகக்கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறர் பேசும்போது, குறுக்கே பேசுவது, வார்த்தைக்கு வார்த்தை எதிர்வார்த்தை பேசுவது, எதிரில் பேசுபவர் முழுவதும் கேளாமல் உடனே பதில் கூறுவது,  எரிச்சல் அடைவது போன்றவற்றைச்செய்யாமல், எதிரில் இருப்பவர் என்ன பேசுகிறார் என்பதை முழுமையாகக் கேட்கவேண்டும்.
நான்கூட உன்னிடம் பலவழிகளில் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் நீ அதை கவனிப்பதில்லை. மாறாக, நீ மட்டுமே என்னிடம் பேசுவதாக நினைத்து புலம்பிக் கொண்டு இருக்கிறாய்.
எனக்கு நைவேத்தியம் வைத்தது, என் கோயில் செலவுக்குப் பணம் அனுப்பியது, உதவி செய்தது என எல்லாவற்றையும் என்னை உன் உள்ளே வைத்துக்கொண்டே சொல்லிக் காட்டுகிறாய்.. இதனால் உனக்கு எந்தப் பலனும் இல்லை.. நீ பத்து லட்ச ரூபாயைக் கூட தந்திருக்கலாம், உன் சொத்துக்களைக்கூட எனக்கு எழுதி வைத்திருக்கலாம். அதை வெளியே சொல்லும் போது,  ஷேர் மார்க்கெட் சரிந்ததைப் போல புண்ணியம் அனைத்தும் சரிந்து விடுகிறது அல்லவா? இதை எண்ணிப் பார்க்காமலேயே எதையும் பேசுகிறாய்..
இனிமேல் நீ யாரிடம் பேசினாலும், பேசுவதற்கு முன்பு இதைப் பேசலாமா? வேண்டாமா என்பதை பலமுறை யோசனை செய்.. புறங்கூறுதல் அதாவது ஒருவரைப் பற்றி பின்னால் பேசுவது, பிறரைத் தூற்றி எதிரில் இருப்பவரை புகழ்ந்து பேசுவது, காரியத்தை சாதித்துக் கொள்ள நயந்து பேசுவது போன்றவற்றை விட்டுவிடு.
உண்மையை உள்ளபடி சொல், பொய்யைச் சொல்லும் அவசியம் வருவதைத் தவிர்த்துவிடு..பிறர் உன்னை ஆதிக்கம் செலுத்தும் வகையில் பிறரை அதிகமாக உன்னிடம் பேசவிடாதே- நீயும் பிறரிடம் சிக்கிக் கொள்வதைப் போல பேச்சை விட்டுவிடாதே!
மனைவியே கணவனை ஏமாற்றி சொத்துக்களை பிடுங்கிக் கொள்வதும், மனைவி அல்லாது பிற மாது சகவாசம் உள்ளவர்கள் தங்கள் சொத்துக்களை இழப்பதும், தெரிந்தவர்கள், நண்பர்கள் என ஜாமீன் நின்று அனைத்தையும் இழப்பதும், எதற்கும் முன் நின்று வாக்குக் கொடுத்து சிக்கிக்கொள்வதும் உனக்கு வேண்டாத வேலைகள்.
என்னிடம்கூட வேண்டிக்கொள்ளும்போது நான் இதைச் செய்கிறேன், நீ எனக்கு இதைச் செய் என பொருத்தனை செய்யாதே! அப்படி செய்தால், நான் உன்னை சோதிப்பேன்..
அரிச்சந்திரன் சிக்கிக் கொண்டதைப் போலவும், தர்மன் காட்டுக்குப் போனதைப் போலவும் நீ சிக்கி அல்லல் படுவாய்.. இப்படிச் சொல்லாமல், இரக்கம் உள்ள தந்தையே எனக்கு இதைச் செய் என்று சொல், போதும்! நீ வேண்டியதை நான் செய்வேன். அதன் பிறகு உனக்கு மனம் இருந்தால் எனக்கு சேவை செய்.. இல்லாவிட்டால் விட்டுவிடு..
இன்றிலிருந்து வார்த்தைகளை வெளியே அதிகம் கொட்டாதே! சரியா?

                                                                                                  மீண்டும் நாளை சந்திப்போமா!