உன்னை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வேன்!

sai18

”எங்கு போனாலும் நம்பிக்கையும், திடமான அர்ப்பணிப்பும் இருந்தால்தான் நினைத்ததை சாதிக்க நம்மால் முடியும்

 

நமக்கு இன்றுள்ள பிரச்சினைகளைவிட நமக்கு ஏற்படுகிற குழப்பங்கள்தான் அதிகம். இந்தக்குழப்பத்திற்குக் காரணம், ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கிற புதிய வாய்ப்புகள், நாம் அறிமுகமாகிற புதிய சூழல்கள். இதனால் இது நல்லதா? அது நல்லதா? என யோசித்து குழம்புகிறோமே தவிர, சரியான முடிவு எடுக்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில் இருக்கிற உன்னை சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வேன்! என்று பாபா கூறுகிறார். சத்சரித்திரம் கூறுகிறதை கேளுங்கள்.

தீட்சித் போன்ற பக்தர்கள் பாபாவுடன் ஒரு குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பக்தர் கேட்டார்: “பாபா, எங்கே போவது?” என்று!

பாபா சொன்னார்: “ மேலே போ!” என்று!

கேள்விக்கேட்டவர் மேலும் பாபாவிடம் கேட்டார்: ”வழி எப்படியிருக்குமோ?”

”பல வழிகள் உள்ளன. சீரடியிலிருந்தும் ஒரு வழி உள்ளது. ஆனால் இந்த வழி கடினமானது. வழியில் ஓநாய் போன்ற மிருகங்களையும் குண்டு குழிகளையும் காண நேரலாம்!” என்றார் பாபா.

உடனே, தீட்சித் குறுக்கிட்டு, ‘ வழிகாட்டி உடனிருந்தால்?” எனக் கேட்டார்.

பாபா, ”அப்பொழுது எந்தவித குழப்பமும் இருக்காது. வழிகாட்டி உன்னை சிங்கம் ஓநாய் போன்ற மிருகங்களிடமிருந்தும், குண்டு குழிகளில் இருந்தும் காப்பாற்றி சரியான இடத்திற்கு அழைத்துச்செல்வார். அவர் இல்லையென்றால் காட்டில் வழி தவறவும், குழியில் விழவும் கூடும்!” என்றார்.

இந்த சம்பாக்ஷணை, குருவைப் பற்றியது அல்லவா? இது ஆன்மீகத்திற்குத்தானே பொருந்தும் என நினைக்காதீர்கள். பாபா ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமல்ல, லவுகீகத்தில் இருப்பவர்களுக்கும் கடவுள்தானே!

நாம் இந்த விக்ஷயத்தை நமது வாழ்க்கையோடு பொருத்தி தியானிக்கலாம்.

மேலே போ!

நாம் குழம்பும்போது, உடனடியாக சோர்ந்து விடுகிறோம். எல்லாம் அவரது அனுமதியோடும், ஆசியோடும் நடக்கிறது என்ற எண்ணத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும். அடுத்த மாதம் உனக்கு மிகப்பெரிய வேலை வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பில், இந்த மாதம் செய்கிற வேலையை விட்டுவிடுவது ஆபத்தானது அல்லவா? ஆகவே, இதில் தொடர்ந்து கொண்டே, அந்த வேலையை எதிர்பார்க்கவேண்டும்.

மேலே போ என்ற பாபாவின் வார்த்தைக்கு தொடர்ந்து முன்னேறு என்று பொருள். ஆன்மீகமாக இருந்தாலும் சரி, லவுகீகமாக இருந்தாலும் சரி, முன்னோக்கித்தான் போகவேண்டும். பின்னே திரும்பிப் பார்க்கக்கூடாது. அதுவா? இதுவா என சந்தேகப்படக்கூடாது. தடைகளைத் தாண்டி போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

”பிறந்த குழந்தை வெளிச்சத்தைப் பார்க்கக்கண்கூசுகிறது என்பதற்காக கண்களை மூடிக் கொண்டே இருந்தால், அதனால் கடைசிவரை உலகத்தைப் பார்க்கவே முடியாமல் போய்விடும். நடக்கும்போது விழுந்துவிடுவோம் என பயந்து படுத்தே கிடந்தால், வாழ்க்கையில் அக்குழந்தையால் நடக்க முடியாமலே போய்விடும்.

குழந்தையாயிருந்தபோதே, நீ உலகத்தை உற்றுப்பார்த்தாய்! அந்தப் பழக்கத்தால் இப்போது உன்னால் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. கால்களில் சக்தியில்லாதபோதே, நடக்கப் பழகினாய்.. அதனால் இப்போது மான் போல துள்ளிக் குதித்து ஓடுகிறாய்..

அறியாப் பருவக் காலத்தில் உன் சக்திக்கு மீறிய விக்ஷயங்களை தைரியமாக எதிர்கொண்டதைப்போலவே, இப்போது எதிர்காலத்தைப் பற்றி அறியாத நிலையில் உள்ளபோதும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். முன்பிருந்த அதே தைரியத்தை வளர்த்துக்கொண்டு பிரச்சினையை எதிர்கொள்ள முடியும்! தொடர்ந்து முன்னேறு! ” என்கிறார் பாபா.

எந்த வழியில் முன்னேறுவது?

போகச் சொல்லிவிட்டார். எந்த வழியில் போவது என்பது அடுத்தக் குழப்பம்.

இதுவரை நான் எத்தனையோ வழிகளில் முயன்று பார்த்துவிட்டேன்.. பெரும்பாலானவை தோல்வியில் முடிந்துவிட்டன. நான் ஜெயிக்கலாம் என்ற தன்னம்பிக்கையோடு செயல்பட்டாலும் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. நான் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்தவர்கள் பலரும் இப்படித்தான் தோற்றுப் போய் விட்டார்கள். ஆகவே, எப்படிப்போவது என்று தெரியவில்லை.

இதற்குத் தீர்வாகத்தான் பாபா சொன்னார்: “பல வழிகள் உள்ளன. சீரடியிலும் ஒரு வழி உள்ளது!”

ஆன்மீகத்தில் வழிகாட்டுவதற்கு பல சத்குரு, குருமார்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பினால் உலகியல் வாழ்க்கைக்கும் வழிகாட்டுவார்கள். ராகவேந்திரரை நம்புகிறவர்கள் அவரிடம் வேண்டுவார்கள், ரமணரை நம்புகிறவர்கள் அவரிடம் வேண்டுதல் வைப்பார்கள். சாயியை நம்புகிறவர்கள் பாபாவிடம் வேண்டுவார்கள் அல்லவா? இப்படி பல வழிகள் இருந்தாலும், பாபாவின் வழியும் உள்ளது. அந்த வழி சுலபமாக இருக்கும் என நினைத்து விடவேண்டாம், கடினமானது என்கிறார் பாபா.

நாம் நினைத்தவுடனே அனைத்தும் நடந்து விட வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் அப்படி நடக்காது.. அதற்கான நேரம் வரவேண்டும், நமது நம்பிக்கை அந்த விக்ஷயத்தில் திடமாக இருக்க வேண்டும். சோதிக்கப்படும்போது தளர்ந்துவிடாமல் அவர் மீது உறுதியாக பாரத்தைப் போடவேண்டும்.

இப்போதுள்ள மனநிலையில் அதெல்லாம் சாத்தியப்படாது.. என்கிறார் பாபா. இது சாத்தியமில்லாவிட்டால் வேறு வழியில் போகலாம் எனச் சென்றாலும், அதுவும் சாத்தியம் ஆகாது. எங்கு போனாலும் நம்பிக்கையும், திடமான அர்ப்பணிப்பும் இருந்தால்தான் நினைத்ததை சாதிக்க நம்மால் முடியும்.

நம்பிக்கையை – குருவை மாற்றிக்கொண்டே இருந்தால் எந்தக் காலத்திலும் வெற்றிகிட்டாது. இதனால்தான் பாபா ; “இந்த வழி கடினமானது!” என்றார்.

எச்சரிக்கை தேவை:

வழியில் ஓநாய், சிங்கம் போன்ற மிருகங்கள் இருக்கும்.. குண்டு குழிகள் இருக்கும் என்று பாபா எச்சரிக்கிறார்.

) மிருகங்களிடம் ஜாக்கிரதை

ஓநாய், சிங்கம் என பாபா குறிப்பிடுவது காட்டில் வாழ்கிற மிருகங்கள் அல்ல.. நம்முடனே இருந்து கொண்டு நம்மை மறைமுகமாகவும், நேரடியாகவும் அழிப்பதற்காகக் காத்திருக்கிற பகைவர்களை – போட்டியாளர்களை, பொறாமைக்காரர்களைப்பற்றித்தான் அவர் இப்படி எச்சரிக்கிறார்.

பலராக கூட்டு சேர்ந்து நம்மை வீழ்த்த நினைப்பவர்களும் இருக்கிறார்கள், தனியாளாக இருந்து போட்டுக்கொடுத்து நம்மை காட்டித் தந்து வீழ்த்துபவர்களும் இருக்கிறார்கள்.

நமக்கு எதிரிகள் பணியிடத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, நண்பர்கள் வடிவில், உறவுக்காரர்கள் வடிவில், தெரிந்தவர்கள் வடிவில், சில சமயங்களில் சொந்த இரத்த உறவுகளிலேயே எதிரிகள் தோன்றிவிடுவார்கள். அதுமட்டுமல்ல, ஆலோசனை தருகிறவர்கள் என்ற பெயர்களில் புகுந்துகொண்டும் நம்மை அழித்துவிடுவார்கள்.

சாயி பக்தர்கள் என்ற பெயரில் அறிமுகமாகி, எத்தனையோ பேருடைய குடும்பங்களை நாசம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.

நீ யாரை அதிகமாக நம்புகிறாயோ, அவரால் ஏமாற்றப்படுவதும் உண்டு. நீயுமா நண்பா? என ஜூலியஸ் சீசர் கேட்டதைப் போல, எல்லோருடைய வாழ்விலும் இந்த நிகழ்வுகள் உண்டு.

இத்தகைய நபர்களால் இதுவரை நீ பாதிக்கப்பட்டு இருப்பாய்.. இதனால் யாரைப் பார்த்தாலும் அவர்கள் மேல் ஒருவித அச்சம் உனக்கிருக்கும். குழப்பம் நீடிக்கும்..

இப்படிப்பட்ட நபர்கள் உன்னைச் சுற்றியிருக்கும் போது வெற்றி எப்படி வரும்?

உன்னுடைய சக்தியை மீறி, வாழ்வோம் என்ற நம்பிக்கை அற்றுப் போகும்வகையில் உன்னை இந்த விலங்குகள் எதிர்கொள்ளும். அப்போது வெற்றி எங்கிருந்து வரும்?

பாபாவை நம்பினால் மட்டுமே வரும்.

இப்படிப்பட்டவர்கள் யாருமில்லை என நீ நினைத்து நடைபோட்டால் அடுத்த சோதனை ஒன்று காத்திருக்கிறது.. அது குண்டும் குழியும் நிறைந்த வழிகள்..

) வழிகளில் எச்சரிக்கை தேவை்

எதிரிகள் யாருமே இல்லை. ஆனால் இதில் தப்பிவிடலாம் என நம்பிக்கொண்டிருப்போம். நாமே முயன்று தனிவழியொன்றை உருவாக்குவோம்.

மற்றவர்கள் போன பாதைதானே என நினைத்து நாமும் அதில் போகமுயன்று விழுந்துவிடுவோம்.

ஏன் இப்படி?

பாதைகள் எல்லாமே உறுதியானவையோ, தெளிவானவையோ கிடையாது. மலர் போர்த்தப்பட்ட பாதையாக இருந்தாலும் அதன் அடியில் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

ஆர்வத்தால் நாம் ஒன்றில் ஈடுபட்டு பிறகு

அதில் சிக்கிக்கொள்வோம். இதைத் தவிர்க்கத்தான் ”எண்ணித் துணிக கருமம்” என்றார் வள்ளுவர்.

லாபம் வருமென நினைத்தது நட்டத்தில் முடிவதும், கடன் வாங்கி வீடுகட்டி, வட்டிக்காக வீட்டை விற்பதும், நல்லது என நினைத்து செய்து கெட்டதை சம்பாதிப்பதும் போன்ற விக்ஷயங்களே அனைத்தும் குண்டு குழிகளான பாதைகள்.

இத்தகைய விக்ஷயங்களால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாத நிலை வந்துவிடும்.

இதெல்லாம் பாபாவின் எச்சரிக்கையில் இருக்கிற விக்ஷயங்கள்.

பிறகு என்ன செய்வது?

வழி காட்டியை வைத்துக்கொள்ள வேண்டும்.

வழிகாட்டியின் அவசியம்:

சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும் என்பார்கள். குருடனுக்குக் குருடன் வழிகாட்ட முடியாது என்பார்கள்.

இதெல்லாம் எதற்காக என்றால், விக்ஷயம் தெரியாத நாம், விக்ஷயம் தெரிந்த நல்லவர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காக!

மேல் நாடுகளில் மலைச்சறுக்கு, மலை ஏறுதல் போன்றவற்றுக்குச் செல்பவர்கள், தங்களுடன் ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்வார்கள்.

ஏற்கனவே, அந்த வழிகளைப் பற்றிய அறிமுகம் வழிகாட்டிக்கு இருப்பதால், அவர் தன்னுடன் வருகிறவர்கள் வழி தவறிவிடாமல் சரியான வழியை காட்டுவார். அது மட்டுமல்ல, மலையில் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் – எது சுலபமாக கடக்கக் கூடியது? எந்த இடத்தில் மலைப் பாம்பு போன்றவை இருக்கும் என்பன வற்றையெல்லாம் அறிந்திருப்பதால், தன்னுடன் வருபவர்களுக்கு இவை பற்றிய அனைத்துத் தகவல்களையும் தருவார்.

கூடவே, போகும்போது தான் வைத்துள்ள நாய்களை முன்னால் அனுப்பி, சூழல்களை அறிந்து கொள்வார். புதர்களில் மலைப் பாம்புகள் இருக்கக் கூடும் என்பதால் கற்களை எடுத்து வீசிக்கொண்டே நடக்கவைப்பார்..

அதேபோல, மலை ஏறுகிறவர்களை தன் பின்னால் வரச் சொல்லிவிட்டு, தான் முன்னால் செல்வார். உயிர்போனாலும் தன்னுயிர் போகட்டும், தன்னை நம்பியவர்கள் வாழட்டும் என நினைப்பார். இப்படித்தான் பாபாவும்!

நாம் அவரை முழுமையாக நம்பி, சரணடைந்து விட்டால் சரியான வழியை எளிமையாகத்தெரிவித்து, நமது செயல்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதற்காக நம்முடனேயே இருப்பார். அதுவும் ஜன்ம ஜன்மமாக!

அவர் சரியான வழியைக் காட்டுவதற்கு, நீங்கள் அவருக்கு ஒத்துழைப்பை முழுமையாகத் தாருங்கள்.

வெற்றி பெறுங்கள்.

ஸ்ரீ சாயி வரதராஜன்

Advertisements

சத்குரு சாயியின் உத்தம பக்தர்கள்!

sai59

மனித வாழ்வில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தொடர்கதை. மனிதன் ஆழ்ந்து ஆராய்ந்து அவற்றை குறைக்கவோ, போக்கவோ முடியும். கஷ்டங்களைப்போக்க எளிய வழி மகான்களை பற்றிக்கொள்வது. இதனினும் எளிது மகான்களுக்கு எல்லாம் மகானான பாபாவின் பாதங்களைப்பற்றிக் கொள்வது.

சீரடிக்குச் சென்றேன், என் கஷ்டம் தீரவில்லை. உடல் நலமில்லாமல் போய்விட்டது. நகை திருடுபோய்விட்டது. பணத்தைப்பறிகொடுத்தேன். பாபாவை தினமும் வணங்குகிறேன், நினைப்பது நடக்கவில்லை.

இப்படி நிறைய புலம்பல்கள்.. ஒரு காலக்கட்டத் தில் நிறைய பரிகாரம் என்ற பெயரில் பணச் செலவு. அலைச்சல்.. எதுவும் எடுபடுவதில்லை.

இவற்றுக்கு என்னதான் தீர்வு? என ஆழ்ந்து யோசித்தபோது, பாபா வாழ்ந்தபோது அவரிடம் அன்பு கொண்டு பழகிய பக்தர்களின் வாழ்வைப்படிக்க நேர்ந்தது.

அவர்களின் வாழ்க்கையும் அவர்களுக்கு பாபாவின் உபதேசமும், வழிகாட்டுதலும், அவர்களின் சேவையும் எல்லா பிரச்சினை களுக்கும் ஒளி விளக்காக இருந்தது.

அதையே நாம் பின்பற்றினால் நிச்சயம் விடுதலை பெறலாம்.

அதற்காக சாயி பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை இனி தொடர்ந்து படிக்கலாம்.

 

கு. இராமச்சந்திரன்

எப்போதும் காப்பேன்!

sai18

சாயி பக்தையான நான் சென்னையில் வசித்த போது, மும்பையில் இருந்த எனது தந்தையார் கீழே விழுந்து தொடை எலும்பு முறிந்துவிட்டதாக தகவல் வந்தது. அவரை கவனித்துக்கொள்ள ஆள் தேவை என்பதால் நான் அங்கு போக வேண்டிய சூழல்.
என்னிடம் ஒரு ரூபாய்கூட இல்லாத நிலையில், செய்வது அறியாது திகைத்தேன். ஐதராபாத்திலுள்ள என் தங்கை, மும்பை மெயிலுக்கு ஈ டிக்கெட் போட்டுக் கொடுத்தாள். அது வெயிட்டிங் லிஸ்டில் இருந்தது. எனது ஒன்றுவிட்ட சகோதரர் இதை கன்பர்ம் செய்து தருவதாகக் கூறியதால், ரயில் நிலையம் சென்றேன். டி.டியிடம் டிக்கெட்டை காண்பித்தபோது, ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை.
செய்வது அறியாது இரவு 12.30 மணி வரை அங்கு நின்றிருந்தேன். எனது தங்கைக்கு போன் செய்தேன். ஏதேனும் பஸ் பிடித்து ஐதராபாத் வந்துவிட்டால் துரந்தோ எக்ஸ்பிரஸ்ஸில் மும்பைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினாள்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் ஆட்டோவில் சென்றேன். புறப்பட்ட போது எனக்கு முன்னால் இன்னொரு வண்டியில் பாபா முன்னால் செல்வது தெரிந்தது. தொடர்ந்து நாமஜெபம் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு பஸ் கிடைத்து ஐதராபாத் சென்று அங்கிருந்து மும்பை சென்றேன்.
அதேபோல, எனது தங்கை மகளின் திருமணம் முடிந்து ரயிலில் ஏறும்போது தாங்க முடியாத மூச்சுத்திணறல் வந்தது. ஆனால் அது ஸ்ரீ பாபாவின் கருணையால் சிறிறு நேரத்தில் சரியாகிவிட்டது. இருந்தபோதும், நாலைந்து நாட்களாக சரியாக சாப்பிட முடியாத நிலை தொடர்ந்தது.
இதே நிலையில் நான் சொந்த ஊரான நாக்பூர் வந்து சேர்ந்தேன். நாக்பூர் வந்த மறுநாள் இரவு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு என் மகனால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டேன்.
இரண்டு மூன்று நாட்கள் ஐசியுவில் இருந்தபோது, எனது இரத்த நாளத்தில் இரண்டு அடைப்பு இருப்பது கண்டு பிடித்து ஸ்டண்ட் போட்டனர். மயக்க மருந்து கொடுக்கும்போது மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது.
நான் சாயி நாமத்தை சொல்லியபடி இருந்தேன். மருத்துவர்கள் சரியான சிகிச்சை செய்து காப்பாற்றினார்கள்.
நான் மத்திய வர்க்கத்துப் பெண் மணி. என்னிடம் சிகிச்சை பெறுவ தற்குக்கூட பணமில்லாத நிலை. இந்த நிலையில் எனது சகோதர சகோதரிகளும், உறவுக்காரர்களும் பணத்தாலும் சரீரத்தாலும் உதவி செய்து என்னைக் காப்பாற்றி அனுப்பினார்கள்.
இதேபோல, சமீபத்தில் என் மகனுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். திடீரென இரத்த சர்க்கரை அளவு குறைந்து விட்டதால், வேகமாகச் சென்று கொண்டு இருந்த வண்டியிலிருந்து விழுந்தேன். எனக்கு என்னவோ ஆகிவிட்டது என என்னுடைய மகன் பதறிப்போய் வண்டியை நிறுத்திவிட்டு கதறியபடி ஓடிவந்தான்.
எனக்கு சர்க்கரைக் குறைவால் ஏற்பட்ட மயக்கத்தைத் தவிர வேறு எதுவுமே ஆகவில்லை. பாபா எப்படித்தான் என்னைத் தாங்கிப் பிடித்துக்காப்பாற்றினாரோ தெரியாது..
எல்லையில்லாத அவரது கருணையை நினைக்கும்போது கண்களில் இருந்து நீர் கசிகிறது, உடல் புல்லரிக்கிறது. அவரது பக்தராக இருப்பதே கோடி புண்ணியமான செயலாகும்.
கமலா,நாக்பூர்

உன் வீட்டிற்க்கு வருகிறேன்!

srisai

நீங்கள் என் வீட்டிற்கு வந்து கால் வைத்தால் போதும், என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என பல பக்தர்கள் எப்போதோ பார்க்கிற தங்கள் குருவிடம் வேண்டுவார்கள்.
பாபாவுடன் இருந்துகொண்டே மிகவும் கஷ்டப் பட்டுவந்தவர் மகல்சாபதி. பணம் கொடுத்து உன்னை பெரிய ஆளாக்கிவிடுகிறேன் என்று பாபா பணம் கொடுக்க முன்வரும் போது, வேண்டாம் உங்கள் அருளிருந்தால் போதும் என மறுத்து விட்டவர். இதனாலேயே பல தினங்கள் குடும்பத்தோடு பட்டினியும் கிடந்தவர்.
பாபாவுடன் மசூதியிலும், சாவடியிலும் மாறி மாறி படுத்துக்கொள்வார். இரவு முழுவதும் உறங்காமல் பாபாவின் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அவரது இதயத்துடிப்பை கவனிப்பது மகல்சாபதி வழக்கம்.
பாபா மூன்று நாட்கள் தனது உடலைவிட்டு நீங்கியபோது, அந்த உடலை முற்றிலுமாக பாதுகாத்து வந்தவர். இத்தனைக்கும் மேலாக சீரடிக்கு மட்டுமின்றி உலகத்துக்கு பாபாவை அறிமுகம் செய்துவைத்தவர் அவர்.
அவரது நிலையில் நாமிருந்தால் என்ன நினைப்போம், நான் வேண்டாம் என்றுதான் சொல்வேன்! ஆனால் நீதானே சூழ்நிலை பார்த்து வற்புறுத்தித் தரவேண்டும்.
உனக்காக ஒன்றும் செய்யாதவன் எல்லாம் உன்னிடம் கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறான், உனக்குப் பெயர் வைத்து, உயிர் காத்து கூடவே இருக்கிற என்னை கஞ்சிக்கில்லாமல் அலைய விட்டுவிட்டாயே! நன்றிகெட்டவனே! என்றெல்லாம் பேசுவோம்.
நமது நிலையைப் பார்க்கிற மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்றால், ராமர் இருக்கும் இடத்தில் மோகம் இருக்காது, மோகம் இருக்குமிடத்தில் ராமர் இருக்கமாட்டார். பகலிருக்கும் இடத்தில் இரவு இருக்காது, இரவு இருந்தால் பகலிருக்காது. இப்படித்தான் சாயி இருக்கும் இடத்தில் கஷ்டம் இருக்க முடியாது! என்பார்கள்.
மகல்சாபதி அப்படிப்பட்ட விதண்டாவாதம் பேசுபவர் கிடையாது. எதிர்பார்ப்பதும் இல்லை. பயந்த சுபாவம்.. மிகுந்த பக்தியுள்ளவர்.
ஒருநாள் பாபா அவரது மனைவியைக் கூப்பிட்டு நான் இன்றைக்கு உன் வீட்டுக்கு வருவேன்..வந்தால் வேண்டாம் என்று என்னை நிராகரித்து விடாதே! எனக் கூறி அனுப்பினார்.
திருமதி மகல்சாபதிக்கு ஒன்றுமே புரியவில்லை. பாபா வந்தால் சந்தோக்ஷம்தானே! எதற்காக பாபா இப்படி கூறுகிறார் என நினைத்துக்கொண்டே வீடு போய்விட்டார்.
அன்றைக்கு திருமதி மகல்சாபதியிடம் கூறிய அதே பாபா, இன்றைக்கு உங்களிடம் கூறுகிறார். திருமதி! நான் உங்கள் வீட்டுக்கு வரப்போகிறேன்..வந்தால் என்னை நிராகரித்துவிட வேண்டாம்!
பாபா கூறிய சூழலைப் பாருங்கள்.. வீட்டில் வறுமை.. பல நாட்களாகத் தொடர்ந்து பட்டினி..கையில் பத்துப் பைசாகூட கிடையாது.. இந்த நிலையில் பாபா வீட்டிற்கு வந்தால் என்ன செய்வது? என நிச்சயம் அந்த அம்மாள் கஷ்டப்பட்டு இருப்பாள். நீங்கள் எப்படி?
இன்னும் பிள்ளைக்குத் திருமணமாகவில்லை.கடன் தொல்லை, நிம்மதியில்லை, கணவன் மனைவி இடையே ஒன்றுமையில்லை. வேலையில் பிரச்சினை. இப்படி ஏதாவது ஒன்று உள்ளதா?
பாபா உங்கள் வீட்டுக்கு வருகிறார்..
மகல்சாபதி வீட்டுக்கு அவர் எப்படி வந்தார்? என் வீட்டுக்கு அவர் எப்படி வருவார்?
பாபாவை பார்க்க தீட்சித் என்ற பக்தர் வந்தார். அவர் கையில் உறையிடப்பட்ட கவரில் பத்து ரூபாய் வைத்திருந்தார். அன்று ஏனோ, மகல்சாபதி நினைவில் இருந்த அவர், பாபாவிடம், பாபா இந்த மகல்சாபதி யார் எதைக் கொடுத்தாலும் வாங்காதவர். அவரது இந்தப் போக்கால் குடும்பம் வறுமையில் இருக்கிறது, பசி பட்டினியோடு இருக்கிறார்கள்.
நான் இந்தப் பணத்தைக் கொடுத்தால் கவுரவக்குறைச்சலாக நினைப்பான். நீங்கள் தந்ததாகக் கூறி கொடுத்தால் மறுக்காமல் ஏற்றுக்கொள்வான் எனக்கூறினார். உடனே, பாபாவும் சரி என ஒப்புதல் தந்தார். தீட்சித் உடனடியாக மகல்சாபதி வீட்டுக்குச் சென்று பணத்தை அவரது கையில் திணித்து, பாபா தந்துவிட்டு வரச் சொன்னார் எனக் கூறினார்.
அப்போதுதான் மகல்சாபதி மனைவிக்கு புரிந்தது, இதுதான் பாபா நமது வீட்டுக்கு வருவது என்பது!
இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.. பாபா என்பவர் ஸ்ரீநிவாசன்.. செல்வத்திற்கு அதிபதி. பிரச்சினைகளுக்குத் தீர்வு.
என்னுடைய பக்தனின் வீட்டில் தேவை என்பதே இருக்காது என்றவர்.. உன் சுமைகளை என் மீது வைத்துவிட்டால் சத்தியமாகவே அதை சுமப்பேன் என வாக்குறுதி தந்தவர். அவர் மிக விரைவில் உன் வீட்டிற்குப் பணமாகவோ, பிரச்சினைக்குத்தீர்வாகவோ வரப் போகிறார்.. புத்திசாலியாக இருந்து அவரைப் பிடித்துக்கொள்;.

சாயிபுத்ரன் பதில்கள்

green
சாயி பக்தி போதுமானது, எளிதானது என்று எப்படி கூறுகிறீர்கள்?
(எம். சுதா, சென்னை – 15)
சாயி, கண்ணெதிரே உள்ள கங்கா ஜலம் போன்றவர். அவரை எப்படி இழுத்தாலும் உங்கள் இழுப்புக்கு இரங்கி, இறங்கி வருவார். நிதர்சனத்தை – யதார்த்தத்தை சொல்லித்தருவார். எப்படி வணங்கினாலும் ஏற்றுக் கொள்வார். இவரைப் போன்று வேறு யாரும் ஆன்மீகத்தை எளிமையாக போதிக்கவில்லை என்பது அனுபவஸ்தர்களின் கருத்து.
சாயிபுத்ரன் பதில்கள்
மற்றவர்கள் நிர்ப்பந்தப் படுத்தும்போது எப்படி நடந்து கொள்வீர்கள்?
(கோபால், திருவானைக்கா)
நிர்ப்பந்தப் படுத்துபவரின் தகுதியை அறிந்து, அவர்கள் நிர்ப்பந்தத்திற்கு ஏற்ப நடந்துகொள்வேன்!
சாயிபுத்ரன் பதில்கள்
நீங்கள் தற்போது ஓர் ஆன்மீக அமைப்பைத் தொடங்கியிருப்பதாக, ஊர் ஊராக கிளைகள் உருவாக்குவதாக சாயி தரிசனத்தில் பார்த்தோம். எங்கள் ஊரில் இப்படியொரு அமைப்பை நிறுவினால் அதனால் எங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தலைமையின் கீழ் செயல்படுவதால் ஏற்படுகிற நன்மைகள் என்ன?
( கே. முத்துராமன், திருப்பூர்)
இப்படியொரு கேள்வியை நமது சண்முகம் ஐயா கூட கேட்டிருந்தார்கள். இதுவரை அது பற்றி எதையும் யோசிக்கவில்லை. அவர் போன்ற பெரியவர்களைக் கலந்தாலோசித்து யோசித்து முடிவு செய்ய வேண்டிய விக்ஷயம். இது பற்றி சங்க விதிகளில் சரத்துக்கள் சேர்க்கப்படும்.
சாயி பக்தியை பெரிய அளவில் வளர்க்கும் நோக்கில் இந்த ஆன்மீக அமைப்பு உருவாகிறது. இதன் கீழ் வரும்போது ஒருங்கிணைந்த சாயி பக்தியை ஏற்படுத்த முடியும். காசு பணம் நம்மிடம் கிடையாது. கடவுள் பக்தியைப் பிரச்சாரம் செய்ய ஓர் அமைப்பு தேவைப்படுகிறது. நடிகர்களுக்கு மன்றங்கள் உள்ளன, எதற்காக என்று அதை வைப்பவர்களுக்குத் தெரியாது. கடவுள் பெயரிலான அற அமைப்பு உருவாகும்போது சமூகம் சீர்பெறும். மற்ற நற்பணிகளும் செய்யமுடியும்.

சாயிபுத்ரன் பதில்கள்

bless

பாபா சிலையை வீடு வீடாக எடுத்து வந்து வைத்தால் பிரச்சினைகள் தீரும் எனக் கூறி சிலர், பாபா சிலையை வீடு வீடாக எடுத்துச் செல்கிறார்களே, உண்மையில் பிரச்சினை தீருமா?

(ஆர். ராதா, சென்னை – 83)

நிச்சயமாக சிலையை எடுத்துச் சென்று பூஜை செய்வது போல நடிக்கிறவரின் பிரச்சினை தீரும். இப்படிப்பட்டோர் பின்னால் போகிறவர்களுக்கு பாவம் சேரும்.

சாயிபுத்ரன் பதில்கள்

எனக்கு பாபாவிடம் பக்தி ஏற்பட்டு, காலப் போக்கில் காணாமல் போய்விட்டது. திட நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. இது ஏன்?

(ஜி. குமார், செங்கல்பட்டு)

சுயநலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு சாதனமாக பக்தி இருக்கும் வரை திடநம்பிக்கை வராது.ஆர்வத்தின் காரணமாக பக்தி செலுத்தினா லும், கோயிலில் முக்கியஸ்தர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பினாலும் பக்தி பாதியில் முடிந்துவிடும்.