சத்சங்கம் கேள்!

சில இடங்களில் போட்டோவிலிருந்து விபூதியும் தேனும் வழிகின்றன. பக்தர்கள் பக்திப்பரவசத்தோடு பார்த்துவிட்டுச்செல்கிறார்கள். இது போன்ற விஷயங்கள் சாயி பக்தர்களின் வீடுகளில் நடப்பதைப் பற்றி சாயி தரிசனம் பத்திரிகையில் எழுதலாமே!
                                    (காயத்ரி தேவி, கும்பகோணம்)
யோகிகளின் யோக சக்திகளால் இது போன்ற விஷயங்கள் விளைவது சகஜம்.  இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது பலன் தருவதில்லை. வேண்டுமானால் போட்டோக்களில் இருந்தும் காசும், பணமும் கொட்டட்டும், அதைப் பற்றி நாம் எழுதலாம், பிரமிக்கலாம். அவ்வாறு கொட்டினால் அதைப் பற்றி மூச்சுகூட விடமாட்டார்கள். ஏனெனில் அரசாங்கம் அவர்களைப் பிடித்து விசாரணை செய்யும்.

ஒன்றுக்கும் உதவாத விஷயத்தில் கவனம் செலுத்துவதைவிட சத்சங்கம் கேளுங்கள். அதிலிருந்து நிறைய கொட்டும்! அது உலக சுகத்தையும், ஆன்ம மேன்மையையும் தரும்.
Advertisements

சீரடிக்கு உன்னால் போக முடியுமா?

ஒருவர் நினைக்கலாம், நான் சீரடிக்குப் போய் என் விருப்பம் போல் தங்கப்போகிறேன் என்று. ஆனால் அது அவருடைய கைகளில் இல்லை. ஏனெனில் அவர் முழுக்க வேறு ஒருவருடைய (பாபாவுடைய) சக்திக்கே உட்பட்டிருக்கிறார்.
நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று திடமான தீர்மானத்துடன் வந்த அனைவரும் முயற்சியைக் கைவிட்டுவிட்டுத் தோற்றுப்போனார்கள். ஸாயீ சுதந்திரமான தேவர். மற்றவர்களுடைய அகந்தை அவர் முன் செல்லுபடியாகாது.
இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும், விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும்.
சீரடிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள் கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை சீரடியில் தங்க முடிந்ததா என்ன? அவர் முன் செல்லுபடியாகாது. நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நாள் வரும் வரை பாபா நம்மைப்பற்றி நினைக்கமாட்டார். அவருடைய மகிமையும் நமது காதுகளில் விழாது. அப்படியிருக்க, தரிசனம் செய்யவேண்டும் என்ற அருள் வெளிப்பாட்டைப்பற்றி என்ன பேச முடியும்?
ஸமர்த்த சாயியை தரிசனம் செய்யப் போக வேண்டும் என்று எத்தனையோ மக்கள் பிரத்யேகமான ஆவல் வைத்திருந்தனர். ஸாயி தேக வியோகம் அடையும் வரை அந்த நல் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மற்றும் சிலர் சீரடிக்குப் போவதை காலங் காலமாகத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தனர். போகலாம் போகலாம் என்று நாளைநீட்டிக்கொண்டே போகும் குணமே அவர்களைப் போக முடியாமல் செய்துவிட்டது. ஸாயீயும் மகா சமாதி அடைந்து விட்டார்.
நாளைக்குப் போகலாம், நாளைக்குப் போகலாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே போனவர்கள் ஸாயீயைப் பேட்டி காணும் நல் வாய்ப்பை இழந்தனர். இவ்விதமாக பச்சாதாபமே மிஞ்சியது. கடைசியில் தரிசனம் செய்யும் பாக்கியத்தைக் கோட்டைவிட்டனர்.
இம்மக்களுடைய நிறைவேறாத ஆவல், மரியாதையுடனும், விசுவாசத்துடனும் இக்காதைகளைக் கேட்டால், பால் குடிக்க விரும்பியவர்கள் மோராவது குடித்த அளவுக்கு நிறைவேறும். சீரடிக்குப் போய் பாபாவை தரிசனம் செய்து அவருடைய அருட்கரத்தால் தீண்டப்பட்ட பாக்கியம் செய்தவர்கள் கூட, அவர்கள் விரும்பிய நாள் வரை சீரடியில் தங்க முடிந்ததா என்ன?
           அதற்கு பாபா அல்லவோ அனுமதி கொடுக்க வேண்டும். சுய 
முயற்சிகளால் மட்டும் எவரும் சீரடிக்குப் போகமுடியவில்லை. எவ்வளவு 
ஆழமான ஆவல் இருந்தாலும் விருப்பப்பட்ட நாள் வரை அங்கே 
தங்கமுடியவில்லை. பாபா விரும்பியவரை அங்கே தங்கிவிட்டு, போய் என்று 

அவர் ஆணையிட்டவுடன் வீடு திரும்ப நேர்ந்தது.

மந்திரத்தியானம்

தியானத்தின் போது சிலர் மணிகளை உருட்டி மந்திரத்தியானம் செய்கிறார்களே!  எப்படி உருட்டுவது? அது எப்படி பலன் தரும்?
                                   ( ஆர். நவமணி, சென்னை – 45)
நாம மந்திரத்தைச் சொல்லி முடித்த பிறகு ஒரு மணியாக உருட்ட வேண்டும். காயத்திரி மந்திரம் சொல்லும்போது முழுமையாக அந்த மந்திரத்தைச்சொன்ன பிறகே ஒரு மணியை உருட்டலாம்.
இரண்டாவது முறை மந்திரத்தை முழுமையாகச்சொன்னபிறகே அடுத்த மணியை உருட்டலாம்.
ஓம் சாயி என்ற வார்த்தையை மந்திரமாகச்சொல்லி ஒரு மணியை உருட்டலாம்.
ஓம் சாயி நமோ நம: ஸ்ரீ  சாயி நமோ நம
ஜெய ஜெய சாயி நமோ நம:  சத்குரு சாயி நமோ நம
என்பது ஒரு முழுமையான மந்திரம். இந்த நான்கு வரிகளைச் சொல்லித்தான் ஒரு மணியை உருட்ட வேண்டும். இதுவே மந்திர ஜெபம்.

இதைச் சொல்லும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன் கிடைக்கும். நாமத்தைச் சொல்லி மனத்தை உள்முகமாகச்சொல்லி, மணியை வெளிப்பக்கமாக உருட்டுவது நல்லது என்று சொல்வார்கள் பெரியவர்கள்.

பாவ புண்ணியம்

பாவ புண்ணியத்திற்கு சுருக்கமாக உதாரணம் சொல்லுங்கள், பார்க்கலாம்.?
                                          ( கீதாமணியன், திருப்பூர்)

மனம் உவந்து தருவதெல்லாம் புண்ணியம், மனம் வருந்தப் பெறுவதெல்லாம் பாவம். தான் நோக பிறர்க்கு உபகாரம் செய்தல் புண்ணியம், பிறர் நோக தான் சுகித்தல் பாவம்.

மனம் நிலைப்பட

என் மனம் ஒரு நிலைப் படுவதில்லை. இது ஏன்?
                                    (எஸ். முருகன், சென்னை – 45)

ஆசைகள் மூங்கில் புதரைப் போல வளர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதால்தான் மனம் நம் வசப்படுவதில்லை. புலன்களின் ஆசைகளைக் கட்டுப் படுத்தினால் மனமும் கட்டுக்குள் வந்துவிடும்.


உதி விதியினை மாற்றும்!

என் பெயர் சுமதி. கணவர் பெயர் பரணிகுமார். காட்பாடியில் வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரிகிறார். எங்களுக்கு தேவிகா, மனோ, திவ்யா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூவரும் சாயி பாபாவிடம் அசைக்கமுடியாத நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்கள். எது நடந்தாலும் அது பாபாவின் விருப்பம் என்பார்கள்.
நானும் அப்படித்தான். என் பிள்ளைகள் வியாழன் தோறும் எங்கள் பகுதியில் உள்ள செங்குட்டை பாபா கோயிலுக்குச் செல்வது வழக்கம்.
எனக்கு சில வருடங்களாக வயிற்று வலி கடுமையாக இருந்தது. பரிசோதித்ததில் சிறுநீரகக்கற்கள் இருப்பதாகத் தெரியவந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நோயின் தீவிரம் கடுமையாக ஆனது. நேராக நிமிரக்கூட முடியவில்லை. துவண்டு போய்விட்டேன், இப்போது அறுவை சிகிச்சைதான் தீர்வு, வேறு வழியில்லை. செலவு இருபத்தையாயிரத்தைத் தாண்டும் எனக் கூறினர்.
இதனால் துவண்டு போய்விட்டேன். மனக்குழப்பமும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இருந்தும் சாயியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தேன். சாயி ராம் யார் மூலமாகவோ, நேரடியாகவோ வருவார் என சாயி தரிசனம் இதழில் படித்திருக்கிறேன். அப்படித்தான் சாயி வரதராஜன் அவர்களிடம் இருந்து உதி பெற்றேன்.
என் வீட்டிற்கு அருகாமையில் வசிப்பவர் ஜே. சுஜாதா. என் வேதனையைக் கண்டு அவராக வந்து, சாயி வரதராஜனிடம் இருந்து உதி பெற்றுவந்தார். கூடவே, பாபா படம், சாயி தரிசனம் புத்தகம் கொடுத்தார். பின் எனக்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
உதியை மருந்துடன் சேர்த்து சாப்பிடச்சொன்னார். எனக்குப் புதுப்பொலிவு வந்தது. பாபாவை நான் பேச்சிலும், மூச்சிலும் சுவாசிக்கச் செய்தேன். பதினைந்து நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்தபோது, மருத்துவர்கள் சிறுநீரகக் கற்கள் கரைந்திருப்பதாகச்சொன்னார்கள். அறுவைச் சிகிச்சையும் தேவையில்லை என்றார்கள்.
சுஜாதா, உதி கொடுக்கும்போது, உன் பிரச்சினைகள் தீரும்போது, நம் பெருங்களத்தூர் பாபாவுக்கு நன்றி செலுத்தி, காணிக்கையாக ரூ 2500 ஐ இடம் வாங்கத் தருவதாக பிரார்த்திக்குமாறு கூறினார்.
அதன் பேரில் அவரிடமே எனது காணிக்கையை பாபாவிடம் சேர்ப்பிக்குமாறு கொடுத்தேன்.  என்னை அழைக்கும்போது நிச்சயம் புதுப்பெருங்களத்தூர் வருவேன். நானோ காட்பாடி.
புதுப் பெருங்களத்தூரில் குடியிருக்கும் பாபா என் கோரிக்கைக்கு செவி சாய்த்தார் என எண்ணும்போது, பாபா சர்வ வியாபி என்பதும், உதியே மருந்து என்பதும், உதி விதியை மாற்றும் என்பதும் உண்மையானது.

                                    பி. சுமதி, செங்குட்டை, காட்பாடி