நம்பிக்கை

அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து
          நித்திய நியமமாக உதியைப் பூசி,நீருடன் கலந்து                                  அருந்துபவர்களுடைய மனோரதங்கள் 
அனைத்தும் நிறைவேறும். 
அறம், பொருள், இன்பம், வீடு 
ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் 
அடைவர். வாழ்வில் நிறைவு பெறுவர்.
Advertisements

இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..

       பாபாவிடம் வேண்டிக்கொள்ளுகிறோம், நமக்குப்பரிகாரம் கிடைக்க அவர் அருள் செய்கிறார். எவ்வளவு ஆர்வமாக வேண்டிக்கொள்ளுகிறோமோ, அந்தளவுக்குப்பலன் கிடைக்கிறது. பலன் கிடைத்தபிறகு, நாம் நமது பகவானை மறந்துவிடுகிறோம். அவரது நேர்த்திக் கடனை தள்ளி வைத்துவிடுகிறோம்.
     இதை நன்றி மறந்த நிலை என்பதா? நேரமில்லை என்பதா?வேறு ஏதேனும் சொல்லிக்கொள்ளலாமா? இந்த மாதிரி ஒரு நிலை ஒரு பக்தனுக்கு ஏற்பட்டது.
     வேண்டுதல் வைத்தான், நிறைவேறிவிட்டது. நாளைக்கு நாளைக்கு எனத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான். ஏன்? நேரமில்லை என்றா? நன்றி மறந்தானா? இல்லை.. அவனுக்கு பகவானைத் தரிசிக்கச் செல்லும அளவுக்குப் பண வசதியில்லை. இந்தப் பணத்தைச்சேமித்துக்கொண்டு பகவானைத் தரிசிக்கச் செல்வேன் என அவன் முடிவு செய்து, பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தான்.
     யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆபத்து மிக்க உச்சி மலைக்கோட்டையைக் கூட கடந்துவிடலாம். ஆனால் குடும்பத்தில் ஈடுபட்டிருப்பவன் தனது தலை வாயிலை கடந்து போவது மிகவும் கடினம் என்கிறது நமது சத்சரித்திரம்.
     நிறைய பக்தர்கள் ஒரு விக்ஷயத்தை தவறாகப் புரிந்துகொண்டிருப்பார்கள். அதாவது ‘சோல்கர் மாதிரி கோரிக்கை நிறைவேறும் வரை காபியில் சர்க்கரை சேர்க்கமாட்டேன், விரும்பிய பொருளைத் தொட மாட்டேன் என்று சொல்வார்கள்.பாபாவிடம் வேண்டிக்கொள்ளும்போது சோல்கர் அப்படி ஒரு வேண்டுதலை வைக்கவே இல்லை. சத்சரித்திரத்தை நன்றாக கூர்ந்து கவனித்துப் படியுங்கள்.
     ‘‘உம்முடைய கிருபையால் பரீட்சையில் நான் வெற்றி பெற்றுவிட்டுவிட்டால், உமது பாதங்களை தரிசனம் செய்வதற்கு சீரடிக்கு வந்து உம்முடைய நாமத்தை சொல்லிக் கற்கண்டு விநியோகம் செய்கிறேன். இது என்னடைய நிர்த்தாரணமான தீர்மானம்’’ என்றுதான் வேண்டிக்கொண்டார்.
     ‘‘நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி, கெஞ்சி,பக்தியுடனும், விசுவாசத்துடனும் கைநீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..’’
     பிறகு, தேநீரில் சர்க்கரை கலக்காமல் நேர்ந்து கொண்டது எப்போது? தனது வேண்டுதல் நிறைவேறிவிட்டது. ஆனால் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தக் குற்றத்திற்குப் பரிகாரமாகத்தான் அவர் சர்க்கரையை சேர்த்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்தார்.
     நீங்கள் துவக்கத்திலேயே சர்க்கரை சேர்க்காமல் விலக்கி வைத்து, அல்லது விரும்பி உணவைத்தவிர்த்து பாபாவிடம் வேண்டிக்கொள்கிறீர்கள். இது நல்லதுதான். அதே சமயம், வேண்டுதல் நிறைவேறிவிட்டால், அவருக்குச் செய்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதும் முக்கியம்.
     நேர்த்திக்கடன் எடுத்துக்கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுக்கொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரகசியமாக வைத்திருப்பினும் நான் அறிவேன்! என்று பாபா சோல்கரிடம் மட்டும் கூறவில்லை. உண்மையாகவே, தாமதத்தால் தவிப்பவராக நீங்கள் இருந்தால் உங்களிடமும் கூறுகிறார்.     பாபா சோல்கரிடம் இன்னொரு விக்ஷயத்தையும் கூறினார்.
     ‘‘நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடி, கெஞ்சி, பக்தியுடனும், விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..’’
     வசனத்தை கூர்ந்து கவனித்தால், பாபா எவ்வளவு உள்ளர்த்தத்தோடு கூறியிருக்கிறார் என்பது புரியும். நாம் அவர் முன்னர், அதாவது அவரை மனதில் நிறுத்தி அவரிடம் நமது வேண்டுதல் பற்றி மன்றாடி, கெஞ்சி பக்தியோடு கேட்டுக் கொள்ள வேண்டும்.
     நமது வேண்டுதலை அவர் கேட்பார் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையும், பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைக்க வேண்டும்.
     ஒரு அடியார் சொன்னார்மூ ‘‘ நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது இறைவன் உங்களுக்காக இறங்கி வருவதில்லை. நீங்கள் பிரார்த்தனையால் அவனை நெருங்கி, அவனிடம் ஏறிச் செல்கிறீர்கள்! என்று.
     பாபா மிக அழகாகவும், நேர்த்தியாகவும் ‘‘நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவு பகலாக உங்கள் பின்னால் திடமாக நிற்கிறேன்..’’ என்று கூறியிருக்கிறார்.
     கடவுள் இறங்கிவரமாட்டார், நாம் ஏறிச் செல்ல வேண்டும் என்று சொன்னேன் அல்லவா? கடவுளை இறங்கி வரவும், இரங்கி வரவும் செய்யவேண்டும்? அது எப்படி சாத்தியமாகும்? பக்தியால் சாத்தியமாகும். அவர் மீது வைக்கிற நம்பிக்கையால் சாத்தியமாகும்.
     பண்டரிபுரத்துப் புண்டலீகர் பற்றி படித்து இருப்பீர்கள். பகவான் அவனைப் பார்க்க வைகுந்தத்தில் இருந்து வந்தார். வைராக்கியத்தோடு தவம் செய்கிற பக்தர்களைத் தேடி பகவான் வருகிறார்.
     பக்தி என்பது பயத்தால் வரக்கூடாது. அவர் மீது வைக்கிற அன்பால் வரவேண்டும். கடவுள் மீது வைக்கிற ஆழ்ந்த அன்புதான் பக்தி. அந்த பக்தியால் அவர் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதே அது தான் விசுவாசம்.
     உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால், மன்றாடி, கெஞ்சி, அன்பால் விளைந்த பக்தியோடு அவரை நம்பிக் கேட்டுக்கொண்டே இருந்தால் அது அவரை கட்டிப் போட்டு நமக்காக இரவு பகலாக நம் பின்னால் நிற்கவைக்கும்.
     நான் ஒருநாளும் விரதம் இருந்தது கிடையாது, நாட்களை அனுசரித்தது கிடையாது, ராகு காலம், எம கண்டம் பார்த்தது கிடையாது. நட்சத்திரங்களை பார்த்தது கிடையாது, யார் இதைத் தள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும் என்றாலும் அதையும் செய்தது கிடையாது.
     ஏன் எனில், இவையெல்லாம் எனக்கு முக்கியம் கிடையாது, இறைவர்க்கும் அவசியமில்லை. அவர் என்னிடம் எதிர்பார்ப்பது அவர் மீது ஆழ்ந்த அன்பு, நம்பிக்கை. இதை நான் சரியாகச் செய்கிறேன். அவர் எனக்காக, என்னோடு என் பின்னால் திடமாக நிற்கிறார் என்பதை உணர்கிறேன்.
     எப்படி இவ்வளவு உறுதியாக என்னால் சொல்ல முடிகிறது என்றால், நான் கடந்து வந்த பாதைகள் அப்படிப்பட்டவை. காட்டாறு வெள்ளம்போன்றும், கரடு முரடான முட்கள் நிறைந்த பாதைகள் போன்றும், முட்டுச் சந்து போன்றும் விரக்தியை உண்டாக்கும் வழிகளில் நடந்துவந்தேன். அவர் என்னை எப்படி வழி நடத்தி வந்திருக்கிறார் என்பதை அனுதினமும் அமர்ந்து அசைபோடுவேன்.
     நான் இப்போது ஏதேனும் மீறுதல் செய்யும் போது ‘இறைவா! இன்றைய நிலையை நினைத்து என்னை வெறுக்காதே! அன்றைய நிலையை நினைத்து என் மீது அனுதாபம் கொள்! நாம் தனித்து நடந்த நாட்களில் நமக்குள் நடந்த பரிவர்த்தனைகளை எண்ணி என் மீது கருணை காட்டு.. கிடைத்தற்கு அரிய இந்த மனிதப் பிறவியை மதிப்புள்ளதாக மாற்று என வேண்டிக் கொள்வேன்.
     சில நேரம் சீரடிக்கு ஓடுவேன்.. சில நேரம் சீரடியை சுமந்துகொண்டு வேறு எங்கேனும் திரிவேன். கண்டதைத் தின்பேன், கிடைத்ததைப் பருகுவேன்.. அதற்கு முன்பு, ‘‘பாபா இது உனக்கு, இது எனக்கு!’’என்பேன்.
     ஏன் என்றால், அவர் சத்சரித்திரத்தில் சொல்லியிருக்கிறார்,  ‘நீங்கள் இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்கள் இதயமே எனது வாசஸ்தலம். நான் உங்களுக்குள்ளே உறைகிறேன்.
     என்னோடு இருக்கிற சாயிக்கு, நான் உண்பதை தருகிறேன், குடிப்பதைத் தருகிறேன் என்பது இப்படித்தான். சில சமயம், பலரை பாபா என அழைப்பேன். வேலூர் பாபா, நாகராஜ பாபா, பாபா மாஸ்டர்.. இப்படி! இதனால் பலரது கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளேன். அவர்கள் என்ன பாபாவா?  என அவர்களை பிடிக்காதவர்கள் கேட்பார்கள். அல்லது பாபா மீது பக்தியுள்ளவர்கள் கேட்பார்கள்.
     நான் இது பற்றிக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில், வீட்டிலோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்கள் அனைவரும் எனது ஆவிர்ப்பாவங்கள் என்கிற வெளிப்பாடுகளே என பாபா கூறியிருக்கிறார்.
     ஆகவே, அவர்களை அப்படி அழைப்பதில் தப்பில்லை என நினைப்பேன். இப்படிப்பட்ட நிலைக்கு அவர் என்னை ஏற்றிக் கொண்டு வந்துவிட்டதால் எனக்கென வேண்டுதல் களை வைப்பது கிடையாது. எனக்கு எது தேவையோ, அவருக்கு எது சம்மதமோ அதை அவர் எனக்குத் தருவார். தராமல் போனாலும் கவலையில்லை.. இதுவே அதிகம்! என நினைப்பேன்.
     ஆனால், உங்களுக்கு அப்படி சொல்லித் தர மாட்டேன். எனது நிலை வேறு, உங்கள் நிலை வேறு. நீங்கள் நிறைய சாதிக்க வேண்டும். சாதனை செய்து அவரை அறிந்துகொள்ள வேண்டும்.

     அதற்காக வேண்டிக்கொள்ளுங்கள். தீவிரமாக வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் திடமான நம்பிக்கையும், பக்தியும் உங்களது வேண்டுதலை நிறைவேற்றட்டும். நேர்த்தி செய்யாதீர்கள். செய்தால் அதை தாமதமின்றி நிறைவேற்றுங்கள்.

சாயியே உண்மையான சாதனம்!

     சாயியின் சொரூபமே உண்மையான, பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும். அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்து கொள்வதே தியானமாகும். அதுவே அவரது தரிசனம். அஞ்ஞானத்திலிருந்தும் காமத்திலிருந்தும் கர்ம வினைகளில் இருந்தும் முற்றும் விடுபட, வேறு சாதனை எதுவுமே இல்லை. இதை உங்கள் மனதில் உறுதியாக நிலைப்படுத்துங்கள்.

தொகுப்பு் வி. நந்தினி,

எந்தப் பெயரில் தெய்வத்தை வழிபட்டாலும் அதற்குரிய மரியாதையை செலுத்துங்கள்

        சில ஆண்டுகளுக்கு முன்பு நமது பிரார்த்தனை மையத்தில் அனுமன் விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்தபோதும், சனி தோக்ஷ நிவர்த்தி யாகம் நடத்திய போதெல்லாம் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. சாயி பாபாவை ஏற்றுக்கொண்ட ஒருவன் எப்படி மற்ற தெய்வங்களை வணங்கலாம்? இவன் அரை குறையானவன், இவனிடத்திற்குச் செல்ல வேண்டாம், இவனது பத்திரிகையை வாங்க வேண்டாம் என்றார்கள்.
     ஆனால் பாபா அதன் பிறகுதான் பத்திரிகை மற்றும் பிரார்த்தனை மையத்திற்கு ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கினார். எனது பெயரை உலகம் முழுவதும் பரவச் செய்தார்.
     சிட்லப்பாக்கம் விபூதி பாபா ஆலய நிறுவனர் பூஜ்ய  நாகராஜ பாபா அவர்கள் மட்டும்தான், ‘யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே! நீ செய்வது தான் சரி.. நான் கூட இங்கு வருகிற பக்தர்களிடம் சாயி பாபாவுடன் குல தெய்வத்தை வணங்கு, விபூதி பாபாவை வணங்கு என சொல்லி அனுப்புவேன். குல தெய்வ வழிபாடு முக்கிய மானது! என்று கூறுவார்.
     நான் அதை அப்போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தேன். பாபாவே என் குலதெய்வம் என்பேன். பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும்போது, அவரவர் குலதெய்வங்கள் என் மனக்கண் முன் நிற்பதை கவனித்தேன்.
     இது என்னுடைய யூகமாக இருக்கலாம் என நினைத்துக் கேட்டால், அவர்கள் அதை உறுதிப்படுத்துவார்கள்.
     ஒரு சாயி பக்தைக்கு 18 ஆண்டுகளாக குழந்தைப் பேறு இல்லை. அவர் என்னிடம் வந்தார். உதியைப் பிரார்த்தித்து அவரிடம் கொடுக்க என் கண்களை மூடியபோது மிகப்பெரிய ஆலமரத்தையும், அதில் ஒரு குழந்தை கிடப்பதையும் கவனித்தேன்.
     என்னவாக இருக்கும் என நினைத்து, அந்தப் பெண்மணியிடம் உங்கள் குலதெய்வம் என்ன எனக் கேட்டேன். முனீஸ்வரன் என்றார்.
     ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் உங்கள் குலதெய்வம் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அங்கு சென்று வழிபட்டு அங்கிருந்து உதியை எடுத்துக்கொள்ளுங்கள், குழந்தைப்பேறு வாய்க்கும் எனக் கூறினேன்.
     எங்கள் வீட்டில் அதுபோல ஆலமரம் இல்லை என்று அந்தப் பெண்மணி கூறினார். அப்போது உடனிருந்த அவரது கணவர், எங்கள் பூர்வீகத்தில் இப்படி உள்ளது. ஆனால் அங்கு நான் சென்றது கிடையாது என்றார். போய்தான் வாருங்களேன் என்று கூறி அனுப்பி விட்டேன்.
     சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணி மீண்டும் என்னைப் பார்க்க வந்தார். இந்த முறை அவர் சோகமாக இருந்தார். என்னவாயிற்று அம்மா எனக் கேட்டபோது, நீங்கள் சொன்னதுபோல எனது பூர்வீகத் திற்குப் போய் குல தெய்வ வழிபாடு செய்தேன். இவ்வளவு காலமாக இல்லாமல் நான் கருவுற்றேன்.
     ஆனால் கரு, கருப்பையில் பதியமாகாமல் கருக்குழாயில் பதியமாகிவிட்டது. இதனால் அதை மருத்துவர்கள் அகற்றி விட்டார்கள் என்றார். கவலையடைய வேண்டாம், குழந்தைப்பேறு எப்படி வாய்க்கும் என்ற உண்மை உங்களுக்குத் தெரிந்தா யிற்று அல்லவா? மீண்டும் அங்கேயே போய் வேண்டிக்கொள்ளுங்கள் என்றேன்.
     இதுபோன்ற பல விக்ஷயங்களை பரீட்சை செய்தேன். எனக்குள் ஒரு குழப்பம்! பரப்பிரம்மமே பாபாதான். கடவுள் பாபா ஒருவரே அப்படியிருக்க, எதற்காக இப்படிப்பட்ட விக்ஷயங்களை நான் அணுக வேண்டியிருக்கிறது? என்பதுதான் அந்தக் குழப்பம். ஒருவன் பூரணமடைந்துவிட்டால் அவனுக்கு மற்ற எந்த வழிபாடுகளும் தேவைப்படாது. ஆனால், அரைகுறை ஆன்மீகத்தில் இருக்கிறவர்கள் நிச்சயம் தாங்கள் எதை வழிபடுகிறார்களோ அதை மறக்காமல் வழிபட வேண்டும். இதனால்தான் நமது முன்னோர் குல தெய்வம், இஷ்ட தெய்வம் என வைத்தார்கள்.
     எத்தனை பெயர்களில் கும்பிட்டாலும் அவை பல கடவுளாகாது, ஒரே கடவுளின் பல ரூபங்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இது விக்ஷயம் தெரிந்தவர்களுக்கு. விக்ஷயம் தெரியாதவர்கள் அந்தப் பெயரிலேயே வணங்கலாம் என்பதும் ஏற்கக்கூடியதே! இந்தக் கருத்து சரியானதுதானா என பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன்.
     அப்போதுதான் ஹேமத்பந்த் சத்சரித்திரத்தின் முப்பத்தெட்டாவது அத்தியாயத்தில் 123 – வது வசனத்தில் ‘ஆராதனை செய்ய வேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடுவதை அவரால் ஒரு கணமும் பொறுத்துக் கொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளதை என்னால் கவனிக்க முடிந்தது.
     அது தொடர்பான சம்பவம் ஒன்றையும் ஹேமட்பந்த் பதிவு செய்திருக்கிறார். (சாயி ராமாயணம் – அத் – 38123 முதல் 146 வசனங்கள் வரை) அந்தப் பகுதியை அப்படியே தருகிறேன்.
     பாபா லெண்டியிலிருந்து திரும்பி வந்து மசூதியில் அமர்ந்த போது பக்தர்கள் தரிசனத்திற்காக கூடினார்கள். பாபாவின் உயர்ந்த பக்தரான நானா சாந்தோர்க்கர் தனது சகலபாடியான பினீவாலே என்பவருடன் வந்திருந்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செலுத்திவிட்டு உட்கார்ந்தபோது, பாபா திடீரென கோபம் அடைந்து சாந்தோர்க்கரைப் பார்த்து சத்தம் போட ஆரம்பித்தார்.
     ‘‘நானா, இதை எப்படி நீர் மறந்து போகலாம்? என்னுடன் இவ்வளவு நாட்கள் பழகி இதைத்தான் கற்றுக்கொண்டீரா? எனது கூட்டுறவில் இவ்வளவு காலம் கழித்தபிறகு இந்தக் கதியைத் தான் அடைந்தீரா? , உமது மனம் எப்படி இவ்வாறு மயங்கலாம்? அனைத்தையும் விவரமாக சொல்லும்’’
     இதைக் கேட்ட நானா தலையை குனிந்தார். பாபாவின் கோபத்திற்கான காரணம் தெரியாமல் தவித்தார். பாபா காரணமின்றி யாரையும் புண் படுத்த மாட்டார் என்பதை அறிந்திருந்த அவர், அவரிடமே சினத்திற்கான காரணத்தைக் கூறுமாறு கெஞ்சினார்.
     ‘‘என்னுடைய சங்கத்தில் வருடக்கணக்கான கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது. உமது மூளைக்கு என்ன ஆயிற்று? நீர் எப்பொழுது கோபர்காங்வ் வந்தீர்? வழியில் என்ன நடந்தது? எங்காவது வழியில் இறங்கினீரா? நேராக இங்கு வந்தீரா? சின்னதோ, பெரியதோ எதுவாக இருப்பினும் சொல்லும்’’ என பாபா கேட்டார்.
     ‘‘குதிரை வண்டி அமர்த்தியபோது நேராக சீரடிக்கு செல்லவேண்டும் என்றே பேசினோம். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், கோதாவரி நதிக்கரையில் இருக்கும் தத்தாத்ரேயரை பினீவாலே தரிசனம் செய்திருக்க முடியாது. தத்தாத்ரேய பக்தரான அவர் எங்களுடைய மார்க்கத்திலிருந்த தத்தாத்ரேயர் கோயில் வழியாக வண்டி சென்றபோது, இறங்கி தரிசனம் செய்ய விரும்பினார். நான் இங்கு வரும் அவசரம் காரணமாக, சீரடியில் இருந்து திரும்பி வரும்போது தரிசனம் செய்துகொள்ளலாம் என்று சொல்லி அவரைத் தடுத்து விட்டேன். சீரடி வந்து சேர்வதில் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தால் பொறுமையிழந்து, தத்தர் தரிசனம் அப்பொழுது வேண்டாம் எனப் புறக்கணித்துவிட்டேன். பிறகு, கோதவரி நதியில் குளித்தபோது ஒரு பெரிய முள் என் பாதத்தில் குத்தி சதைக்குள் ஏறி விட்டது. வழியில் மிக அவஸ்தைப்பட்டேன். கடைசியில் முயற்சி செய்து எப்படியோ முள்ளை பிடுங்கிப்போட்டேன்.’’
     நானா இப்படி சொன்னதும், பாபா அவரை கண்டித்தார். ‘‘உமக்கு இந்த அவசரம் உதவாது. தரிசனம் செய்வதைப் புறக்கணித்த குற்றத்திற்கு இம்முறை லேசான தண்டனையுடன் தப்பித்துக் கொண்டீர். தொழுகைக்கு உரிய தேவரான தத்தர், நீர் எவ்வித பிரயாசையும் செய்யாமல் தரிசனம் தரக் காத்துக் கொண்டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு நீர் இங்கு வந்தால், நான் மகிழ்ச்சியடைவேனா, என்ன?’’ எனக் கேட்டார்.
     ‘‘எல்லாமே நான் என உணர்ந்து கொண்டாய் நானா! நீர் செய்தது சரி’’ என அவரை உற்சாகப் படுத்தாமல் பாபா ஏன் கண்டித்தார்?
     உலக வழக்கை மீறக்கூடாது. முன்னோரின் நிலையை மாற்றக்கூடாது என்பதால் கண்டித்தார். கிருஷ்ண பரமாத்மா பரப்பிரம்மம் என்றாலும், தானே பரம குரு என்ற போதிலும், மனித அவதாரம் செய்த காலத்தில் தானும் ஒரு குருவை சரணடைந்து அவருக்கு வேலை செய்து சிஷ்யராக இருந்தார்.
     முப்பதாவது அத்தியாயத்தில் ஹேமட் பந்த் இன்னும் ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறார். பாபாவின் இன்னொரு தீவிர பக்தரான சாமாவுக்கு பாபா உணர்த்திய விக்ஷயத்தைக் கேளுங்கள்.
     சாமா பாபாவின் தீவிர பக்தர், பாபாவை ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நெருங்கியவர். சாமாவின் தாயார் முப்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு வேண்டுதல்களை தனது குல தெய்வத்தின் பாதங்களில் சமர்ப்பித்தார். ஒன்று, சாமா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, இந்தக் குழந்தையை உன் பொறுப்பில் ஒப்படைக்கிறேன், குழந்தை சரியாகி விட்டால் அவனை உன் பாதங்களில் கொண்டு வந்துபோடுகிறேன் என்பது ஒன்று. இன்னொன்று அந்தத் தாயாரின் மார்பகங்களில் கட்டி வந்து வேதனைப் படுத்தியபோது, வெள்ளி ஸ்தனங்களை செய்து சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டார்.
     இதை ஜோதிடர் மூலமாக நினைவூட்டப் பெற்ற சாமா, இரண்டு ஸ்தனங்களை செய்து வந்து, பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்து, ‘‘என் நேர்த்திக் கடனை ஏற்றுக் கொண்டு, என்னை விடுதலை செய்யுங்கள்’’ என வேண்டினார்.
     சாமா பாபாவிடம் என்ன சொன்னார் கேளுங்கள்.  ‘‘நீரே எனது சப்தசிருங்கி (அம்மன்) நீரே எமது தேவி. தாயார் வாக்குக் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்!’’
     சாமா உண்மையைத்தான் சொன்னார். ஆனால் அதை பாபா ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நீ சப்த சிருங்கியின் கோயிலுக்கே சென்று, தேவிக்காக அழகாக வடிக்கப் பட்ட இந்த ஸ்தனங்களை உன் கைகளாலேயே சமர்ப்பணம் செய்’’ என்று கூறி விட்டார். (அத்:30, 6773)
     நானா, சாமா ஆகிய பக்தர்களை விட நாம் பாபாவுக்கு நெருங்கிய பக்தர்களாகிவிட முடியாது. அவர்களுக்கே, அவர்களது முதாதையர் பின்பற்றிய பிற வழக்கங்களைப் புறக்கணிக்க வேண்டாம் என பாபா வலியுறுத்தினார்.
     குல தெய்வத்தால் என்ன நன்மைகள் நமக்குக் கிடைத்துவிடப் போகிறது என எண்ணிக் கொண்டு, பாபாவிடம் இதைப் பற்றி பிரார்த்தித்தேன். அன்றைய கனவில், குல தெய்வம் உனக்கு இருபத்தி இரண்டு விதமான சமத்காரங்களை செய்கிறது என்றார் பாபா.
     அது என்ன என்பதை கேட்கத் தவறிவிட்டேன். என் பிள்ளை நல்ல பள்ளியில் படிக்க வேண்டும் என பள்ளிகளைத் தேடிச் சென்று சேர்ப்பதைப் போல, என்னை தகுதிபடுத்த பாபாவிடம் கொண்டு வந்து சேர்த்ததும் என் குல தெய்வம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
     இந்த நிகழ்வுகளுக்கு பிறகுதான் பத்துப் பைசா செலவில்லாமல், எந்த முயற்சியும் செய்யாமல் குலதெய்வம் நமக்கு அருள்கிறது என்ற உண்மை தெரியவந்தது.

     நீங்கள் அனைத்தையும் கடந்த சாயி பக்தரானால் சாயியைத் தவிர வேறு எந்த ரூபத்தையும் மனதில் நிறுத்தாதீர்கள். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கிருப்பது நமது சாயியே என்பதை உணர்ந்து நமஸ்காரம் செய்யுங்கள். முழுமை அடையாதவர், எந்தப் பெயரில் தெய்வத்தை வழிபட்டாலும் அதற்குரிய மரியாதையை செலுத்தி வழிபடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் நல்லது..

எங்கும் நிறைந்த பாபா

கபர்தேயின் மனைவி சீரடியில் நைவேத்யம் செய்து பாபாவுக்கு படைப்பதோடு, அவரை தன் அறைக்கு வந்து உணவு உண்ணுமாறு கேட்டுக் கொள்வார். பாபாவும் வருவதாகச் சொல்வார். ஆனால் ஒருநாள் கூட போனதில்லை.
     ஒருநாள் அவள் பாபாவுக்கு உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது ஒரு நாய் வந்தது. அந்த நாயைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அசுத்தமானது, நோய்க் கிருமிகளைப் பரப்பக்கூடியது என நினைத்து அந்த நாயின் மீது எரிந்துகொண்டிருந்த விறகுக் கட்டையைத் தூக்கிப் போட்டாள். நாய் அங்கிருந்து ஓடிவிட்டது.
     கபர்தேயின் மனைவி உணவு தயாரித்துக்கொண்டு மசூதிக்குச் சென்று படைத்தாள். பிறகு வழக்கம் போல, பாபாவை தன்னிடத்திற்கு வந்து உணவு உண்ணுமாறு அழைத்தாள்.
     ஐயோ, அம்மா! இன்று நான் வந்திருந்தேன். நீ என்னை கொள்ளிக் கட்டையால் அல்லவா அடித்துத்துரத்தினாய்? என்றார் பாபா.

                அந்தம்மாள் பாபாவின் எங்கும் நிறை தன்மையை உணர்ந்ததோடு, தன் செயலுக்கு வெட்கப்பட்டு வருந்தினாள்.

எங்கே தீர்வு உடனே கிடைக்கும் எனத் தேடி ஓடாதே!

குரோம்பேட்டை ரமா அம்மையார் என்னிடம் அடிக்கடி கேட்கிற ஒரு கேள்வி!
     ‘உங்களிடம் எல்லா இறை சக்தியும் இருக்கும் போது பக்தர்களை எதற்காக அங்கே செல்லுங்கள், இங்கே செல்லுங்கள் என அலைக்கழிக்கிறீர்கள்? இது சரியா? அதை விட நீங்களே இதை குணப்படுத்திவிடலாமே! என்பார்.
     வேதங்கள், சாத்திரம், உபநிக்ஷத்துக்கள் மற்றும் உள்ள சாஸ்திரங்களில் புலமையுள்ள நீங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் பார்க்கப் போவது இல்லை, அப்படி யிருந்தும் உங்கள் பிரச்சினை ஏன் சரியாவது இல்லை?
     நமது கர்மாவை நாம் அனுபவித்தே தீரவேண்டும்! அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கக் கூடாது. என்னிடம் வருவோர், தங்கள் லவுகீகத்தின் நலன் கருதியே வருகிறார்கள். என்னையும் அதிலேயே தங்கவைத்துவிடுகிறார்கள். என்னை உணராதவர்கள் என்னிடம் வருகிறார்கள், நான் விரும்பாததை என்னிடம் கேட்கிறார்கள் என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனாலும், இவர்களை தாண்டி என்னால் போக முடியவில்லை.
     பயந்தோடவும் முடியாமல், மேலே நடக்கவும் முடியாமல் வழுக்கு மரத்தில் சறுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறேன். ஆனால், ஒரு நாள் நிச்சயம் ஆன்ம அனுபூதியை அடைந்தே தீருவேன்.
     என்னையே நம்பி என்பால் லயமாகிற பக்தனின் தேவைகளை நான் கவனித்துக் கொள்கிறேன் என்று பாபா கூறுவாரே, அதுபோல, என் மனதில் உள்ள பக்தனுக்காக நான் இரவு பகலாக பிரார்த்தனை செய்துகொள்வேன்!’’ என்று கூறுவேன். யாரையும் அலைக் கழிப்பது கிடையாது. நான் சொல்வதை அவர்கள் ஏற்கப் போவதுமில்லை. பகட்டாகவும், உணர்வு அல்லாமல் உடையிலும், உடலிலும் ஆன்மீகச் சின்னங்களை தரித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் களை நம்பி ஏமாறுவதே இந்த மக்களின் வாடிக்கை.
     அவர்களிடம், ‘பாபாவை நம்பி காத்திரு, அவர் உங்கள் பிரச்சினையைத் தீர்ப்பார் என்றால், கேட்பது இல்லை. அதனாலேயே அவர்களை அனுப்புகிறேன். கர்மாவை அனுபவித்துதான் தீர வேண்டும் என்றால் கடவுளும் குருவும் எதற்காக?
     கர்மா என்பது கடந்த காலத்தில் பயன்கள். போன ஜென்மத்தில் நாம் செய்தவற்றின் விளைவுகளை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம். பள்ளியில் நன்றாகப் படித்தவன் கலெக்டர் உத்தியோகம் பார்க்கிறான்.
     அவனோடு பள்ளிக்கு வந்த இன்னொருவன் ரோட்டில் இளநீர் விற்கிறான். காரணம் என்ன? இருவரும் பள்ளிக்கு வந்தார்கள், ஒருவன் படித்தான், இன்னொருவன் வந்து போனான்.. அவ்வளவுதான். அன்று படித்த பலனை இன்று அவன் அனுபவிக்கிறான், படிக்காததன் பலனை இவன் இன்று அனுபவிக்கிறான். இதுதான் கர்ம பலன்.
     விவரம் தெரியாமல் விட்டுவிட்டேன், மன்னித்து என்னை கலெக்டர் ஆக்கு கடவுளே என்றால், கடவுள் என்ன செய்ய முடியும்? மகனே! உனக்கு தகுதியில்லை. வயதுமில்லை.. அதையெல்லாம் கடந்துவிட்டாய்.. வேண்டுமானால், உனக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து உன்னை பாதுகாக்கிறேன்.. உன் பிள்ளைகளை உருவாக்கு.. அவர்களை கலெக்டர் ஆக்கி, உன்னை கலெக்டரின் தந்தையாராக ஆக்குகிறேன்.. என்பான். இதுதானே நியாயமானது.
     எத்தனையோ அற்புதத்தை செய்கிற கடவுள் இதை செய்யக்கூடாதா எனக் கேட்கலாம்..நமக்கு அவர் நிறைய வாய்ப்புகளைக் கொடுத்தார். நாம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதைப் பொறுத்து நம் கர்மா தீர்மானிக்கப்படுகிறது. நன்மையும் தீமையும், நல்லதும் கெட்டதும் நம்மிடம்தான் இருக்கிறதே தவிர, கடவுளுக்கும் இதற்கும் சிறிதும் தொடர்பேயில்லை.
     உனக்கு இன்றைக்கு லீவு தருகிறேன். உன் லீவு நாளில் வந்து வேலையைச் செய்துகொடு என்று அலுவலகத்தில் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
     அப்படித்தான்.. இன்றைக்கு குருவருளால் உங்கள் கர்மா தள்ளிப்போடப்படலாம். ஆனால் ஒரு நாள் அதை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும். குருவும் கடவுளும் உங்கள் சுமைகளைச் சுமக்க உதவி செய்து இளைப்பாற்றுவார்கள். சுமை தெரியாமல் உங்களை நடக்கவைப்பார்கள். அடுத்தஜென்மத்திற்காக உங்களை தயார் செய்வார்கள்.
     அப்படியானால், என்னைப் பார்க்க வந்தாலும், யாரைப் பார்க்க வேண்டும் என்றாலும், உடனடியாக மாயா ஜாலத்தை எதிர்பார்க்கக்கூடாது. நம்மில் ஏற்படுகிற மாற்றம் நமக்கு மாற்றத்தை உண்டாக்கும் என்பதை உணர்ந்து மாற்றத்தை முதலில் உங்கள் மனதில் கொண்டு வரவேண்டும்.
     சென்னை கொளத்தூரிலிருந்து ஒரு சாயி பக்தை என்னை நம்பி வந்தார். அவரது இரு வயது குழந்தையைக் கூட ஒருநாளும் அவர் கொஞ்சியதே கிடையாது, கணவருடன் அன்பாக இருந்ததில்லை. ஐந்து வருடங்களாக குடும்பத்தில் நிம்மதி என்பது சிறிதும் இல்லை.. என்று வந்தார். ஏதோ பூர்வ கடன் என்பதைப் போல, அவர்களுக்காகப் பிரார்த்தித்து அவர்களுக்கு உதியைக் கொடுத்து அனுப்பினேன்.
     ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.. அந்தப் பிரச்சினைகளின் பாதிப்புகள் ஒரே மாதத்திற்குள் என்னை ஆட்டி வைத்தது. அந்த மகளின் கடந்த கால அறிகுறிகள் அனைத்தும் என் உடலில் ஏற்றப்பட்டது. இது கடவுளால் மாற்றப்பட்ட விக்ஷயம். அவர் என்னை குருவாக முழு மனத்தோடு மதிப்பதால் அவருக்குக் கிடைத்த நன்மை.
     எல்லாருக்கும் இப்படி நடக்குமா என்றால், அது எனக்குத் தெரியாது. அவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது அது. வின்னி சிட்லூரி அம்மையார் எழுதிய பாபாவின் ருணானுபந்தம் என்ற புத்தகத்தில் ஒரு தகவலை குறிப்பிட்டிருக்கிறார்.
     பாபா தேகத்தோடு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒருவர் பாலகிருஷ்ண கேசவ் வைத்யா. ரத்னகிரி மாவட்டத்தில் ராஜபூர் நகரத்திற்கு அருகேயுள்ள பாட்காவோன் என்ற கிராமத்தில் வசித்தவர். ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆன்மீகத்தை போதித்த இவரை, அந்தப் பகுதி மக்கள் மிகவும் மதித்துப் போற்றினார்கள். பல மக்கள் இவரை பேய் ஓட்டுபவர் என்றே சொன்னார்கள். இவரும் பாபாவும் சம காலத்தவர்கள் என்றாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதே கிடையாது.
     இந்தக் காலக்கட்டத்தில் மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு பேய் பிடித்து மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. என்னென்னவோ செய்தும் ஒன்றும் முடியவில்லை. பாதிக்கப்பட்டவரை கயிற்றால் கட்டிவைக்கவேண்டிய நிலை. இந்த நிலையுடன் அவரை சீரடிக்கு அழைத்து வந்தார்கள். அவரைப் பார்த்ததும், அரே.. மிகவும் சக்தி வாய்ந்த பேய் இவரைப் பிடித்திருக்கிறது. என்னால் இதை ஒன்றும் செய்யமுடியாது. பாட்காவோனில் உள்ள தாதா மகராஜீடம் அழைத்துச் சென்று, நான் அனுப்பியதாகச் சொல்லுங்கள் என்றார்.
     அந்தக் குடும்பத்தார் பதினைந்து நாட்கள் பயணம் செய்து பாட்காவோனை அடைந்து பாபா குறிப்பிட்ட நபரைப் பற்றி விசாரித்தார்கள். அவரைப் பார்த்ததும் ஆச்சரியம்!
     அவர் சந்நியாசிக்கு உரிய எந்த வித உடையும் உடுத்தாமல் சாதாரணமாக இருந்தார். பாபா அனுப்பிய விவரத்தைச் சொன்னார்கள். அந்த நோயாளியை எட்டு நாட்கள் தங்கவைத்து பேயை ஓட்டினார் பால கிருஷ்ணா.
     ஒரு சமயம் சில பக்தர்கள் பாட்காவோனுக்கு சென்று பால கிருஷ்ணா மகராiஜ தரிசித்த பிறகு சீரடிக்குச் செல்வதாக முடிவு செய்திருந்தார்கள். இதை அறிந்த பால கிருஷ்ணா, வெள்ளிச் சரிகை போட்ட ஒரு துணியைக் கொடுத்து, இதை பாபாவிடம் சேர்த்துவிடுங்கள். நமஸ்காரம் செய்யுங்கள். ஆனால் எதைப் பற்றியும் சொல்ல வேண்டாம் எனக் கூறி அனுப்பினார்.
     அந்த பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்தத் துணியை பாபாவின் கைகளில் வைத்தார்கள். இதைப்பெற்றுக்கொண்ட பாபா, மகிழ்ச்சியால் நடனமாடத்தொடங்கினார். மசூதியில் இருந்தவர்களிடம், என் பாலா எனக்காக வெள்ளிச் சரிகை போட்ட தோதியை அனுப்பியிருக்கிறான் என்று மகிழ்ச்சியோடு கூவியபடியே அதை தலையில் கட்டிக் கொண்டார்.’’
     இந்த விக்ஷயத்தை கவனியுங்கள். பாபா மிகவும் சக்தி வாய்ந்தவர். எல்லா தேவர்களும் கைவிட்ட போதிலும் கைவிடாதவர் பாபா. அவர் எதற்காக இன்னொருவரிடம் அனுப்பவேண்டும்? இவரே பேய் ஓடச்செய்திருக்கலாம் அல்லவா? நாம் சில விக்ஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாமே பாபா.. எல்லோருமே பாபா. இதில் பேதம் கூடாது. அடுத்து, யாருக்கு எங்கு நடக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அங்கு கண்டிப்பாக நடக்கும்.
     நரசிம்ம சுவாமிஜீ பகவான் ரமணரிடமோ, உபாசினி மகராஜீயிடமோ இருந்திருக்கலாம். பாபாவிடம் போகக் காரணம் ஒன்று இருந்ததல்லவா? அப்படித்தான் மக்கள் போவதற்கும், அனுப்பப்படுவதற்கும் காரணம் நிச்சயமாக இருக்கும்.
     எனக்குத் தெரிந்த ஒரு பிரமுகர் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்தார். அதைப் பற்றி ஒருவர் குறிப்பிடும்பொழுது, எங்கெல்லாம் இப்படி அற்புதம் நடக்கிறது எனக் கேள்விப்படுகிறாரோ அங்கெல்லாம் ஓடுவதிலே இவருக்கு நிகர் யாரும் கிடையாது என்றார். இவரைப் போல, பலர் இப்பொழுதெல்லாம் நிறைய பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
     அவர்கள் தீர்வு எங்கே உடனே கிடைக்கும் எனத் தேடுவதி லேயே குறியாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். என்னிடம் வந்தார்கள், சரியானார்கள் என்று சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. ஏனெனில், நான் மாயை வசப்பட்ட மனிதன். என் எதிர்காலம் என்னவென்றே தெரியாதவன். எனக்கு எப்போது நல்லது நடக்கும் என்பதில் நிச்சயம் தெரியாதபோது, பிறருக்கு என்னால்தான் எல்லாம் நடந்தது எனக்கூறக்கூடாது.
     ஒருவருக்கு எப்போது அனுகூலமான நேரம் அமைகிறதோ, பகவான் அருள் பூரணமாகக்கிடைக்கிறதோ, அப்பொழுது அவர்கள் ஒருவரிடம் செல்வார்கள். எனவே, அவரை விடுவிப்பது இறையருளே தவிர, நமது தெய்வீக சக்தியல்ல.

     இதைப் புரியாத சிலர், எல்லாம் என்னால் நடக்கிறது என சொல்லிக்கொள்வார்கள். நமது கடன் பணி செய்வது, இறைவன் வேலை நமக்கு அருள் செய்வது. அது போதும்.