உங்கள் வாழ்க்கையில் சுபீட்சம் இன்று முதல் ஆரம்பிக்கும்!


 
ஒருவருடைய நடத்தை இழிவானதாகக் கருதப்பட்டால் அவரைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டியதே நியாயம்,. திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட வேண்டும், பின்னால் புறங்கூறுதல் செய்யலாகாது.
எவரையும் நிந்தனை செய்யக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது. உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து அங்கிருந்து நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து சந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.
மூன்று உலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப் போல ஓர் உபகாரியைக்காண முடியாது. நிந்தை செய்யப்படுபவனுக்கு நிந்தை செய்பவன் பரம மங்களத்தைச் செய்கிறான்.
சிலர் அழுக்கை நீக்குவதற்கு புங்கங்கொட்டையை பயன்படுத்துகிறார்கள். சிலர் சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். சிலர் சுத்தமான நீரை பயன்படுத்துகிறார்கள். நிந்தை செய்பவனோ தனது நாக்கைப் பயன்படுத்துகிறான்.
நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்கு உரியவர்கள். பிறருக்கு நன்மை செய்யத் தங்கள் மனதை வீழ்ச்சியடையச் செய்துகொள்கிறார்கள். அவர்களது பரோபகாரத்தை வர்ணிக்க இயலாது. நிந்தை என்ற பெயரில் ஒவ்வொரு படியிலும் நம் தோஷங்களைத் தெரிவித்து, எதிர்காலத்தில் விளையக்கூடிய அநேக அனர்த்தங்களை வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தைப் போற்ற வார்த்தைகளே இல்லை.
நிந்தை செய்கிறவர்களை சாதுக்களும் ஞானிகளும் பலவிதமாகப் போற்றுவார்கள். ஏனெனில் இவர்கள் சாதுக்கள் மற்றும் ஞானிகளின் பாவங்களையும் அல்லவா துடைத்துவிடுகிறார்கள். அப்படிப் பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நாம் மனதார நமஸ்காரம் செய்யவேண்டும்.
ஒருமுறை சிறந்த சாயி பக்தர் ஒருவர் வேறு ஒருவரைப் பற்றிப் பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமர்சித்து நிந்தை செய்தார். அந்த நிந்தையே பிரவாகம் போல பக்தருடைய வாயிலிருந்து வெளிவந்தது. எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை அறியாமலேயே, வசைச் சொல் கூறுவதும், நிந்தனை செய்வதுமே முக்கியப் பேச்சாக இருந்தது.
இது பாபாவுக்குப் பிடிக்காத விஷயம். நிந்தனையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் இதைக் கேட்டு வெறுப்படைந்தார்கள். நிந்தை செய்தவர் சற்று ஓய்ந்துவிட்டு, காலைக்கடன் கழிப்பதற்காக ஓடைப்பக்கம் போயிருந்தார். பக்தர்களின் கூட்டமோ பாபாவை தரிசிக்க மசூதிக்கு வந்தது.
பக்தர்களுடன் பாபா லெண்டிக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் அந்த நிந்தை எதைப் பற்றியது? யார் நிந்தை செய்தது? என்று கேட்டார்.
நிந்தை செய்தவர் ஓடைப்பக்கம் போயிருப்பதாகச் சொன்னதும், பாபா எதுவும் பேசாமல் திரும்பிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் நிந்தை செய்த பக்தரும் பாபா கோஷ்டியில் சேர்ந்துகொண்டார்.
ஒரு காம்பவுண்டு அருகில் அனைவரும் வந்துகொண்டிருந்தபோது, அதோ அங்கு இருக்கும் பன்றியைப் பாருங்கள்.. அதன் நாக்கு பொது மக்கள் கழித்த மலத்தை எவ்வளவு இன்பமாக ரசித்து சுவைத்து சாப்பிடுகிறது.. தனது பந்துக்களையும் உறுமலால் விரட்டி விட்டு தன் பெரும் பசியைத் தணித்துக் கொண்டிருக்கிறது..
அதைப் போல, பல ஜென்மங்களாகச் செய்த புண்ணிய பலத்தால் கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தனது நாசத்திற்கே வழி செய்கிற உனக்கு இந்த சீரடி என்ன சந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்? என்று சொன்னார்.
நிந்தை செய்தவருக்கு இந்த வார்த்தைகள் தேள் கொட்டியதைப் போலிருந்தது. காலையில் நடந்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன. பாபாவின் வார்த்தைகள் அவருக்கு புத்தியைத் தந்தது.
இப்படி பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கு  ஏற்றவாறு பிரசங்க வடிவில் போதனை தருவார். பாபா சொன்ன விஷயங்கள் சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது பலன்தரும்.
நான் எங்கும் இருக்கிறேன். நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும், இந்த தேசத்திலும் வெளி தேசத்திலும், எங்கும் இருக்கிறேன். ஒளியையுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்து இருக்கிறேன்.
மூன்றரை முழம் உயரமுள்ள இம்மனிதக் கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவதற்காகவே நான் இப்புவியில் அவதரித்திருக்கிறேன். என்னை வேறு ஒன்றிலும் நாட்டமில்லாமலும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவு பகலாகத் தொழுபவன் இரண்டு என்னும் மாயையை (தான் வேறு கடவுள் வேறு என்று எண்ணுதல்) வென்று என்னுடன் ஐக்கியமாகி விடுகிறான்.
வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்று விடலாம். கடல் அலைகளைப் பிரிந்துவிடலாம். கண் கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னிலிருந்து வேறுபடமாட்டான்.
ஜனன மரண சுழலில் இருந்து நிச்சயமாக விடுபட வேண்டும் என்று உறுதியாக நினைப்பவன் தர்ம சாஸ்திர விதிகளின் படி வாழ்க்கை நடத்த கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எப்பொழுதும் தனக்குள்ளே அடங்கிய மனத்தினனாக இருக்க வேண்டும்.
பிறர் மனத்தைப் புண்படுத்தவோ, தாக்கவோ கூடிய சொற்களைப் பேசக்கூடாது. எவரையும் மர்மஸ்தானத்தில் அடிக்கக்கூடாது. தன்னுடைய கடமையையே கருத்தாகக் கொண்டு, சுத்தமாக சுயதர்மத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.
உன்னுடைய மனத்தையும் புத்தியையும் என்னிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு. அவ்வாறான மனிதன், தனது தேகத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுபற்றி கவலைப்படமாட்டான். அவனுக்கு எந்தவிதமான பயமும் இல்லை.
எவன் ஒருவன் வேறொன்றிலும் நாட்டம் இல்லாது என்னையே வரித்து, எனது புண்ணியக்கதைகளைக் கேட்டுக்கொண்டு என்னில் அன்னியமான எதிலும் ஈடுபாடு கொள்ளாது இருக்கிறானோ, அவன் இறைவனுடன் ஒன்றிவிடுகிறான்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் இன்று முதல் உங்கள் வாழ்க்கியில் சுபிட்சம் ஆரம்பிக்கும்.
Advertisements

எட்டு நாட்களில் வேண்டுதல் பலித்தது!

 

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கிறேன்.  சிறுவயது முதல் சபரிமலைக்குச் செல்லும் பழக்கம் உடையவன். கடந்த பதினெட்டு வருடமாக தொடர்ந்து சென்று வருகிறேன். என்னுடைய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறியதில்லை. அதே சமயம் மிகப் பெரிய கஷ்டங்களில் இருந்து தப்பி இருக்கிறேன். அந்த நேரங்களில் நான், ‘ஏதோ கடவுள் அருள் சிறிதாவது நமக்குள்ளது. ஆகையால்தான் இன்று நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம்’ என்று நினைப்பேன்.
எனக்குத் திருமணம் 2005 ல் நடைபெற்றது. கடன் வாங்கித்தான் திருமணம் செய்துகொண்டேன். 2006-ல் என் தந்தை பக்கவாதத்திலும், நெஞ்சு வலியாலும் அவதிப்பட்டார். வீட்டில் இருந்த நகைகளெல்லாம் அடகு வைத்து அவரது மருத்துவச்செலவினை கவனித்தேன்.
சில மாதங்களுக்குப் பிறகு வேறு வழியின்றி வெளியே கடன் வாங்க ஆரம்பித்தேன். கடன் எட்டு லட்சமாக் உயர்ந்தது.
கடனுக்கு வட்டி கட்டி போக சாப்பாட்டிற்க்கும் வழியில்லாமல் போனது. இந்த நிலையில் எனது மைத்துனர் ஒருமுறை என்னிடம் ‘நீங்கள் மைலாப்பூரிலுள்ள பாபா கோயிலுக்கு ஒருமுறை போய் வாருங்கள்’ என்றார்.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த எனக்கு, அங்கு சென்று பாபாவை பார்த்தவுடன் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதேன். அங்கு உள்ள “நான் இங்கிருக்கும் போது ஏன் பயப்படுகிறாய்? நம்பிக்கை, பொறுமை’ என்ற வாசகங்கள் எனக்குள் ஒரு மாற்றத்தினை உருவாக்கின.
அதன் பின்னர் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பித்தேன். அங்குதான் சாயிதரிசனம் புத்தகம் வாங்கினேன். அதில் இருந்த விசயங்கள் என்னுள் பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தின.
சில மாதங்கள் கழித்து பெரிய அளவில் இருந்த கடன்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தேன். எல்லா கிரிடிட் கார்டுகளையும் சரண்டர் செய்தேன்.
வாரம் தவறாமல் பாபா கோயிலுக்குப் போனேன். மாதம் தவறாமல் சாயி தரிசனம் புத்தகம் வாங்கினேன். எனது பல கேள்விகளுக்கு அதில் பதில் கிடைத்தது. என் ஆன்மீகம் தொடர்பான பல சந்தேகங்களுக்கும் அதில் தெளிவு கிடைத்தது. எப்படி பக்தி செலுத்துவது என்று கூட கற்றுத் தந்தது.  சாயி தரிசனம் ஊட்டிய பக்தியால் மேலும் மேலும் பாபாவினை நெருங்க ஆரம்பித்தேன். அதனால் மிகுதியான பலன்களை பெற்றேன்.
என் வீட்டில் பாபா படம் உள்ளது, பாபா நீங்கள் எனது வீட்டிற்க்கு சிலையாகவாவது வரவேண்டும், நானாக பணம் கொடுத்து வாங்கமாட்டேன் என்று மனதில் வேண்டுதல் வைத்தேன்…
 
அதன் பிறகு பலமுறை பாபா கோயில் செல்லும் போதெல்லாம், என் மனைவி பாபா சிலையினை பார்த்து அவர் அழகில் வியக்கும் போதெல்லாம் நான் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து விடுவேன். எனது வேண்டுதல் பற்றி எனது மனைவிக்கு தெரியாது. இப்படியே பதினெட்டு மாதங்கள் நகர்ந்தன.
 
ஒரு முறை தத்தாத்ரேயர் பற்றிய படம் ஒன்றினை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது பாட்டி ஊரிலிருந்து வந்தார். அவர் காசி, கயா தீர்த்த யாத்திரைக்கு சென்றி திரும்பியதாக தெரிவித்து பிரசாதங்களை அளித்தார். அந்த பிரசாதங்களுடன் ஒரு சிறிய பாபா சிலை ஒன்றும் இருந்தது என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
அதனை பெற்றுக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்த நான் எனது பல நாள் வேண்டுதலைச் சொன்னேன். அப்போதுதான் எனது மனைவிக்கே எனது வேண்டுதலும், நான் சிலையை காசு கொடுத்து வாங்க மறுத்த காரணமும் தெரிந்தது. அந்த சிலையினை பூஜித்து வருகிறேன்.
சில மாதங்களுக்குப் பிறகு எனது வருமானம் குறைய ஆரம்பித்தது. செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறினாலும், பாபா கோயிலுக்குச் செல்வதை மட்டும் நிறுத்தவில்லை.,
சாயி தரிசனம் பத்திரிகையொன்றில் ஒரு பக்தர் எட்டு நாட்களில் ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் ஒன்றினை பாபாவிடம் வைத்ததாகவும் அது அவருக்கு பலித்தது என்றும் படித்தேன். சாயியிடம் வேண்டுதல் வைத்த பிறகு அது சாயியின் பிரச்சனை என்று விட்டு விட வேண்டும், பாபாவே அதனை சரி செய்வார் என்றும் இருந்தது.
சீரடியிலிருந்து உதி எனக்கு எட்டு நாட்களில் வரவேண்டும், நானாக யாரிடமும் உதி கேட்கமாட்டேன் என்று வேண்டுதலினை பாபாவிடம் வைத்தேன்.
பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் சென்றேன். சாயி தரிசனம் சொல்வதைப்போல பூ பழம் எடுத்துச் செல்லாமல் எனது பிரச்சனைகளை மட்டும் எடுத்துச் சென்றேன். பாபாவின் கண்களில் இருந்த காந்த சக்தியின் முன் எனது பிரச்சனைகளை சொல்ல திணறினேன்.  வெட்கப்பட்டு எனது பிரச்சனையினை எழுதியும் பாபா முன் வைக்கவில்லை. மறு நாளும் அங்கு சென்றேன். அந்த காந்த சக்தியினை என்னால் இப்போது உணர முடியவில்லை. திகைப்புடன் நின்றேன். அப்போது அங்கிருந்த ஓர் அம்மா, சாயி வரதராஜன் மேலே பிரார்த்தனையில் இருக்கிறார், செல்லுங்கள் என்று என்னை மாடிக்கு அனுப்பினார். அப்போதுதான் எனக்கு எனது வேண்டுதலின் எட்டாவது நாள் இன்று என்ற நினைவு வந்தது. பாபா எப்படி உதி தரப்போகிறார் பார்ப்போம் என்று நினைத்தபடி .மேலே சென்றேன்.
அங்கு சாயி வரதராஜன் யாரோ ஒரு குடும்பத்தினருக்கு பிரசாதங்களைத் தந்து கொண்டிருந்தார்.  நான் மாடியில் அனுமனையும் சாயியினையும் வணங்கினேன். அப்போது சாயி வரதராஜன் அவர்கள் என்னை ஜாடை காட்டி அழைத்து அங்கு அமரச்சொன்னார். உதியினைத் தந்து ‘இது சீரடி உதி, வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.
பிரார்த்தனை செய்த எட்டாவது நாளில் பாபா அருள் எனக்குக் கிடைத்தது.  ‘இனி எல்லாம் உங்களைத் தேடி வரும், கவலைப்பட வேண்டாம்’ என்று சாயி வரதராஜன் அவர்கள் சொன்னார். சிலருக்கு இது சாதாரணமாகத் தெரியும்.  ஆனால் எனக்கு இவை மிக மிகப் பெரியவை.
வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்ததால் கிளம்ப எழுந்தேன். அப்போது அவர் அமருங்கள், பிரார்த்தனை முடிந்த பிறகு சென்றால் போதும் என்று சொல்லி உட்கார வைத்துவிட்டார். பிறகு என்னை கூப்பிட்டு என்ன பிரச்சனை என்று கேட்டு அதற்காக பிரார்த்தனை செய்து உதி அளித்தார்.
அடுத்த வாரத்தில் எனக்கு போன் மூலம் வேறு வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். அதன் பிறகு வாரம் இரு முறையாவது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து விடுவேன். எனது முதல் மாத சம்பளத்தில் ரூ 2400 கொடுத்தேன். சீரடி செல்ல வேண்டும் என்றால் இவருடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து பணம் கட்டி காத்திருந்து, அவருடன் சீரடி சென்றேன்.
பாபா வாழ்ந்த இடங்கள் அனைத்தையும் தரிசித்தேன். சமாதி மந்திரில் என் மேல் விழுந்த மலரினையும், குருஸ்தான் போனபோது கிடைத்த வேப்பிலையினையும்  துவாரகமாயி சென்றபோது கிடைத்த தேங்காயினையும் எனது பூஜையறையில் வைத்திருக்கிறேன்.
ஜெய் சாயிராம்!
                        ஆர்.எம்.வேலு, வண்ணாரப்பேட்டை, சென்னை.

 

கிரக பாதிப்புகள் உன்னை ஒன்றும் செய்யாது

கிரக பாதிப்புகள் உன்னை ஒன்றும் செய்யாது
     இப்போது நம்முடைய பார்வையெல்லாம் எந்தக்கிரகம் சரியாக இல்லை என்பதில்தான் இருக்கிறது. இந்த கிரகங்களின் தாக்கம் சரியாக இல்லை என்று தெரிய வந்துவிட்டால் நாம் எல்லாம் சோர்ந்துவிடுவோம். போர்க்களத்தில் சோர்ந்து போன அர்ஜுனன் மாதிரியான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.
     என்னதான் சாயி பக்தராக இருந்தாலும் இந்தச் சோர்வு ஏற்படுவது இயல்புதான்.  இந்தச் சோதனை நமக்கு மட்டுமல்ல, சமாதி மந்திரைக் கட்டிக் கொடுத்த பூட்டிக்கும் ஏற்பட்டது.
     அவர்  ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு நானா சாகேப் டெங்கலே என்ற ஜோதிட நண்பர் இருந்தார்.  அவர் சொன்ன பல விஷயங்கள் பூட்டியின் வாழ்க்கையில் பலித்தது.  இதனால், டெங்கலேயை பூட்டி மிகவும் மதித்தார்.
     ஒரு முறை பூட்டியை சந்தித்த டெங்கலே, ‘இன்று உங்களுக்கு கெட்ட காலம்!  எதிர்பாராத பேராபத்து வரப்போகிறது!  எச்சரிக்கையாக இருங்கள்’ என்றார்.
     இதைக்கேட்டு பூட்டிக்கு பயம் வந்துவிட்டது.  என்ன செய்வதென்றே தெரியாமல் மசூதிக்கு வந்தார்.
     அங்கிருந்த பாபா, ‘அந்த டெங்கலே என்ன சொன்னான்? அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா?  நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதியாகக் கூறினார்.
     அன்று முழுக்க பாபாவின் பாதுகாப்பில் இருந்த பூட்டி கழிவறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பாம்பு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  அதைக் கொன்றுவிட வேண்டும் என நினைத்து கம்புகளை தேடினார்.  ஒரு பெரிய தடியினை எடுத்துக்கொண்டு வந்து பார்க்கும் போது அந்தப் பாம்பு மாயமாக மறைந்து போயிருந்தது.
     பூட்டியிடம் நானா சொன்ன பேராபத்து இதுதான் என்றும், இதைப் பற்றித்தான் பாபாவும், ‘அவன் என்ன உன்னைக் கொல்ல முயற்சிக்கிறானா?  நீ பயப்படத் தேவையில்லை, அவன் உனக்கு எவ்வாறு துன்பம் செய்யப்போகிறான் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார் என்பதையும் பூட்டி நன்றாக உணர்ந்து கொண்டார்.
     எத்தகைய கிரக பாதிப்புகள் இருந்தாலும், மரணத்தைத் தருவதாக இருந்தாலும் அவையெல்லாம் நமது சமர்த்த சாயியின் முன்னால் ஒன்றும் இல்லாததாகிவிடும் என்பதற்க்கு இது ஓர் உதாரணம்,
பி.வீரமணி
சைதாப்பேட்டை

பாபாவின் வார்த்தையும் நோய் தீர்க்கும்!

     பண்டரிபுரம்.  பாண்டுரங்கன் வாழும் திவ்ய ‌ஷேத்திரம். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் சந்திரபாகா நதிக்கரையில் அமைந்துள்ளது. விட்டோபா ஆலயம் விசேஷ நாட்களில் சுமார் பத்து லட்சம் பேர் வரை தன் பக்கம் இழுத்து  விடும்.  புராண காலத்திலிருந்தே பிரசித்திப் பெற்ற ஸ்தலம் இது.
     13-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை தியானேஸ்வரியை (பகவத் கீதை) எழுதிய தியானேஸ்வர், நாமதேவர், ஏக்நாத், துக்காராம், புரந்தர தாசர், விஜயதாசர், கோபால தாசர், ஜெகன்னாத தாசர் போன்ற பக்தர்கள் பண்டரிபுர விட்டலை வழிபட்டு மேன்மை அடைந்தவர்கள்.
     இப்படிப்பட்ட புண்ணியத்தலத்தில் தாத்யா சாகேப் நூல்கர் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.  வேதங்கள், சாஸ்திரங்களில் நல்ல புலமை உள்ள இவர், தனக்கு குரு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர்.
     அதிகம் படித்தாலே அடக்கத்திற்க்கு பதில் அகங்காரம் வந்துவிடும். அறிவு கூட ஓரளவுக்கு மேல் வளரக்கூடாது போலிருக்கிறது.  ஏனெனில் அது எப்போதும் தர்க்கம் செய்து கொண்டே இருக்கும்.
     சத்சரித்திரம் எழுதிய தாபோல்கரும் சீரடியில் இருந்தபோது இப்படித்தான் குருவின் அவசியம் என்ன என்று கேட்டு பின் பாபாவேலேயே குரு அவசியந்தான் என உணர்த்தப்பட்டார். பாபாவையே குருவாக ஏற்றுக் கொண்டு என்றும் அழியாத சத்சரித்திரத்தை எழுதினார்.
     இந்த நூல்கர் ஒருமுறை ஜல்கான் என்ற ஊருக்குப் பயணம் செய்தார்.  அங்கே அவருக்குத் தாங்கமுடியாத கண் வலி ஏற்பட்டது.
     இவருடைய சகோதரர் ஒரு டாக்டர்.  அவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நினைத்திருந்த போதிலும், இன்னும் சில நாட்களில் குரு பூர்ணிமா வருவதை நினைவு கூர்ந்து, சிகிச்சை பெறாமலேயே சீரடிக்குச் சென்றுவிட்டார்.
     பாபாவை தரிசிக்கும் முன், சாதேயின் வாதாவில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார்.  அவரது கண்வலி அதிகமாகிக்கொண்டே வந்தது.  அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பாபாவைத் தரிசிக்க துவாரகாமாயி வந்துவிட்டார்.
     பாபா எப்போதும் போல் சாமாவிடம், “ஷாமா!  என் கண்கள் ரொம்பவும் தொந்தரவு செய்கிறது.  வலி தாங்கமுடியவில்லை” என்றார்.
     இந்த வார்த்தையைச் சொன்னதுமே நூல்கரின் கண் வலி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.  பாபா தனது நோயினை குறிப்பிட்டே தனக்கு அனுக்கிரகம் செய்தார் என்பதைப் புரிந்துக்கொண்டார் நூல்கர்.
     தனது பணிக்காலம் முடிந்த பிறகு சீரடிக்கு வந்து, தனது இறுதிக்காலம் வரை சீரடியில் பாபாவுடனேயே தங்கிவிட்டார்.  அவர் காலமான அன்று அவருக்கு உதியும் தீர்த்தமும் அனுப்பி, அவரது ஆன்மா சாந்தியடைய அனுக்கிரகம் செய்தார் பாபா.
    கு ராமச்சந்திரன்

பணிவு!

sai-guide-us

பணிவு பணிவு என்று கூறுகிறீர்களே! எத்தகைய பணிவு நமக்குத் தேவை? எனக் கேட்கலாம். பூமியைப் போல பணிவு, விளைந்து முற்றிய நெல் கதிரைப் போன்ற பணிவு, நாணலைப் போல வளைந்து கொடுக்கும் பணிவு நமக்கு அவசியம்.

தவமும், பக்தியும் இல்லாதவனிடமும், என்னை நிந்திப்பவனிடமும், பணிவுடன் சேவை செய்யாதவனிடமும் என்னைப் பற்றியோ, மேன்மையான ஞானத்தைப் பற்றியோ கூறவேண்டாம் என்றார் பகவான் கிருஷ்ணர்.

இவர்கள் விலக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில், இவர்கள் மனம் பண்படாதது. பணிவு, அடக்கம், தூய்மை போன்ற பண்புகளால் மனமாகிய நிலம் பண்படுத்தப்பட்டு தயாராக இல்லாதவர்கள். இறை நாமத்தை உச்சரித்தாலும் அதன் மீது அன்பு இல்லாதவர்கள். ஆகவே, இவர்கள் விலக்கப் படவேண்டும் என்று பகவான் கூறுகிறார்.

பகவானின் அன்பைப் பெற பணிவுடனும் தூய்மையுடனும் சேவை மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சாயி நாமம் நமக்குள் பிரதிஷ்டைச் செய்யப்பட வேண்டுமானால், மனத்தூய்மை உட்பட அனைத்தும் முக்கியம். இதற்காக சில விக்ஷயங்களைப்பார்க்கலாம்.

அகிம்சையைப் பின்பற்ற வேண்டும்!

சாயி நாமம் நமக்குள் பிரதிஷ்டைச் செய்யப்பட வேண்டுமானால், அகிம்சை,, நேர்மை,. திருப்தி, புலனடக்கம் உட்பட அனைத்தும் முக்கியம். இதற்காக சில விக்ஷயங்களைப்பார்க்கலாம். முதலில் அகிம்சை, அகிம்சை ……

 அகிம்சையைப் பின்பற்ற வேண்டும் என்றால், சிலர் கோழியை சாப்பிடக்கூடாதா? மீனை சாப்பிடக்கூடாதா? என்று கேட்பார்கள். இதெல்லாம் வேண்டாத பிரச்சினைகள்.

பிறருடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தவோ, மனதால், உடலால் பிறரைக் காயப்படுத்தவோ கூடாது என்பதே அகிம்சை என்பது. தன்னுயிரைப்போல் பிற உயிர்களை நேசிக்கும் குணமே அகிம்சை. மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் அகிம்சையைப் பின்பற்ற வேண்டும்.

மந்திரச்சொல்!

images (1)

சாயி சாயி என்ற மந்திரச் சொல், ஒரு மனதை மாற்றி அமைப்பதால் வருகிற விளைவு இது. இந்த விளைவை நாம் அனுபவிக்க வேண்டுமானால், வெறும் சொல்லான சாயி சாயி என்று சொன்னால் போதுமா? போதாது. நாம் நம்மை சிறிது சிறிதாக மாற்றிக்கொள்ள வேண்டும், அல்லது மாற்றத்தை உண்டாக்க சாயிக்கு இடம் தரவேண்டும்.

நம் மனதில் சாயி சாயி என்று சொல்வதில் ஆர்வம், ஈடுபாடு ஆகியவை இருந்தால் மட்டும் போதாது. அது நமக்குள் வேலை செய்வதற்குப்பணிவும், நல்ல ஒழுக்கமும் நமக்குள் விதைக்கப்பட்டாக வேண்டும்.

பாபா அழகாகச் சொன்னார்: ”மாமரத்தைப் பாருங்கள், அதில் காய்க்கிற எல்லா காய்களும் பழுத்துப் பலன் தருவதில்லை. அதுபோலத்தான் என்னிடம் வருகிற எல்லோரும் பயன்பெறுவது இல்லை” என்று!