கவலைப்படவேண்டாம்!

25125

தினத் தியானம் 3

”மழை பெய்யலாம், ஓதமாக இருக்கலாம், தரையானது மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால் நீர் அதைப் பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர்”                                         அத்: 22

கவலைப்படவேண்டாம்!

கோபர்காங்வ் தாலுகாவில் கொராலே என்ற கிராமத்தைச் சேர்ந்த அமீர் சக்கர் என்ற ஒரு தரகர், தனது முடக்குவாத நோயைத் தீர்க்குமாறு பாபாவிடம் முறையிட்டார்.

அவருக்கு உடனடியாக நிவாரணம் அளிக்காமல், சாவடியில் தங்குமாறு பாபா கூறினார். பாபாவின் சாவடி மிகப் பழையது. மேற்கூரையும், கீழ்த்தளமும் சிதிலம் அடைந்திருந்தது.

விரிசல்கள் நிறைந்து எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பது போன்ற அந்தக் கட்டிடத்தில் தேள்களும்,ஓணான் போன்ற ஜந்துக்களும் சர்வ சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தன.

போதாக் குறைக்கு குஷ்டரோகிகள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எச்சில் இலைகள் அந்தப் பகுதியில் வீசப்பட்டதால் நாய்கள் வேறு இருந்தன. சாவடியின் பின்பகுதியில் இடிபாடுகள் கொட்டப்பட்டு முழங்கால் ஆழத்திற்குப் பல குழிகள்

இருந்தன. அது மட்டுமல்ல, அது மழைக்காலம். கூரையிலிருந்து மழைநீர் ஒழுகியது. தரை முழுவதும் ஈரம் தேங்கி ஓதம் ஏற்பட்டிருந்தது. இவற்றினூடே கடுமையான குளிர்காற்று வீசியது.

இந்த இடத்தில் எப்படி தங்குவது என அமீருக்கு கவலையாக இருந்தது. அதைப் புரிந்துகொண்ட பாபா அவரிடம், “மழை பெய்யலாம், இடம் ஓதமாக இருக்கலாம், தரையானது மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால் நீர் அதைப்பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர். சாவடியில் நிம்மதியாக உட்காருங்கள்!” என்று கூறினார்.

அந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடையாது. தரிசனத்திற்குக் கூட அனுமதியில்லை. சக்கர் ஒன்பது மாதங்கள் வரையில் அந்த சாவடியில் தங்கியிருந்தார். குளிர் காற்றில் மூட்டுகள் விறைத்துக் கொண்டன. படுத்த படுக்கையாக இருந்து துன்பப்பட நேரிட்டது.

சாவடியில் பாபா ஒருநாள் விட்டு ஒருநாள் படுத்துக்கொள்வார். பாபாவுக்கும் அமீருக்கும் இடையே ஒரு மரப்பலகையிலான தடுப்புக் கதவு மட்டுமே இருக்கும். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொள்வார்கள்.

இன்று குணமாகும், நாளைக்குக் குணமாகும் என எதிர்பார்த்த அமீர்சக்கருக்கு வியாதி குணமானதாக தெரியவில்லை. மாறாக சாவடி என்கிற சிறையில் அடைபட்டது போன்ற நிலை தோன்றியது.

இங்கிருந்து வேறு எங்கேனும் ஓடிப் போக வேண்டும் என்று நினைத்தவராக, பாபாவிடம் சொல்லாமல் கோபர் காங்வ் என்ற இடத்திற்கு ஓடிச்சென்றார். அன்றைய இரவைக் கழிக்க அங்கிருந்த ஒரு தரும சத்திரத்தில் தங்கினார்.

தர்ம சத்திரத்தில் தாகத்தால் தவித்த ஒரு பக்கீர், “தண்ணீர் தண்ணீர்” என கேட்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு அவருக்கு நீர் கொடுத்தார். அதை அருந்தியவுடனே, அந்த பக்கீர் இறந்து போனார்.

அக்கம் பக்கம் யாருமில்லை. தன் மீது கொலைப்பழி விழும் என அமீர் பயந்தார். விடிந்தால் பக்கீரின் மரணம் பற்றி விசாரணை நடக்கும். அமீர் கைது செய்யப்படுவார், உண்மையைச் சொன்னா லும் நீதி மன்றம் அதை கேட்கப்போவதில்லை.

நான்தான் நேரடி காரணம் என பிறர் குற்றம் சொல்வார்கள். உண்மையான காரணம் தெரிய வரும் வரையில் தண்டனை அனுபவித்தாக வேண்டும்.

“இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி சீரடிக்கு கொண்டு போய் சேருங்கள் பாபா. இனி உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை விட்டுப் போக மாட்டேன்” என்று பிரார்த்தனை செய்தார்.

சாயி பெயரை ஜெபம் செய்தவாறே சீரடியை வந்து அடைந்தார். அவரது பிரார்த்தனையும் நம்பிக்கையும் அவருக்கு விடுதலையளித்தன. விரைவில் அவர் நோயிலிருந்து குணமானார்.

பாபாவிடம் வந்தவுடனே உங்கள் வேண்டுதல் அனைத்தும் நடந்துவிடும் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால், நடக்கமாட்டேன் என்கிறது.

இப்படி நினைப்பவரா நீங்கள்?

கஷ்ட நேரத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறான் என்பதை நிதர்சனமாகத் தெரிந்துகொள்ளுங்கள். இறைவன் உங்களோடு தங்கியிருக்கிற இந்த நிலையில், நீங்கள் கஷ்டப்படுவதை பொறுத்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் காத்திருங்கள்.

உங்களுக்குத் தேவை பொறுமை. நம்பிக்கை, சரணாகதி. இந்த ்ன்றும் இருந்தால் இழந்துபோன அனைத்தையும் மீட்டுத் தருவார். பாபா கைவிட்டுவிட்டார் என நினைத்து, நீங்கள் வேறு எங்கேனும் சென்றிருந்தாலும் உடனடியாகத் திரும்பி வந்துவிடுங்கள். வேறு நிவாரணம் பெற உங்களால் இயலாது.

யார் ஒருவர் சத்குருவை சரணடைகிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலக லாபங்களும், மேலுலக மேன்மைகளும் கிடைக்கின்றன என்பதை உறுதியாக அறிந்துகொண்டு சரணாகதி செய்யுங்கள். எப்போதெல்லாம் நம்பிக்கை தளர்வது போல இருக்கிறதோ அப்போதெல்லாம் நாம ஜெபம் செய்து வாருங்கள்.

உங்களை பாபா அறிந்திருக்கிறார் என்ற உண்மையில் தெளிவு கொண்டு, காத்திருந்தால் நிவாரணம் நிச்சயம். இந்த நிவாரணத்துடன் அவர் வேறு வேதனையை கூட்டமாட்டார். எதிலும் பொறுமை என்ற ஒன்றை மட்டும் கடைப் பிடித்தால் நம்பிக்கையும் சரணாகத உணர்வும் தாமாக வந்துவிடும். நீங்கள் ஜெயித்து விடுவீர்கள். விசுவாசம் உங்களை விடுவிக்கும்.

உங்கள் நம்பிக்கை உங்களைக் காத்துக்கொள்ளும். பதில் கிடைக்காத பிரார்த்தனை என எதுவும் இல்லை என்பதை உணருங்கள்.

பிரார்த்தனை

சமர்த்த சத்குருவே சாயி நாதப் பிரபுவே!

இதுவரை என்னுடைய பிரச்சினைகளை தீர்க்க வழி தெரியாமல் தவித்த நான், நிவாரணம் தேடி எவ்வளவோ இடங்களை சுற்றிவிட்டேன். இப்போது நீங்கள் என்னை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன்.

என்னுடைய இப்போதைய பிரச்சினை எப்படியிருந்தாலும், உங்கள் அருளால் அவை அனைத்தும் காணாமல் போய் விடும் என்பதை முழுமையாக நம்புகிறேன். உங்கள் மீது மாறாத விசுவாசம் வைத்துக் காத்திருக்கிறேன். எனது விசுவாசத்தை திடப்படுத்தி என்னை இந்தப் பிரச்சினையிலிருந்து விடுவித்து காத்தருள்வீராக.

எனது நோய்கள், கடன்கள், பிரச்சினைகள், பிற தொல்லைகள் அனைத்தையும் விலக்கி என்னை உங்கள் அருள் காக்கட்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s