மாயை விலகட்டும், மனம் திருந்தட்டும்!

sai18

இன்னும் நெடுங்காலம் வாழ்வோம் என்னும் ஆசையில் மூழ்கிக்கிடக்கிறோம். திடீரெனக் கூற்றுவன் வாழ்நாளைப் பறித்து உண்ணும்போது, அஞ்சி – கண்மூடி அழுவதன்றி வாழ்ந்து கழித்த நாட்களைத் திரும்பப் பெறுவார் யார்?

எவராலும் இழந்த நாட்களை மீட்கலாகாது என அறிவோம். வாழும் குறுகிய காலத்தில் நம்மால் முடிந்த நற்செயல்களைச்செய்து இறைவனடி சேர வழி தேடுவோர் எத்தனை பேர்?

பலவித பிரச்சினைகளுக்கு காரணம் சாயி நாதர் கூற்றுப்படி நம் கர்ம வினைப் பயன்களே! அவற்றை நாம் வெற்றிகொள்ள ஏதாவது வழி வகைகள் உள்ளனவா? இது குறித்து சாயிநாதர் கூறிய செய்திகளை சற்றே சிந்தித்து சிறிது தெளிவு பெறலாம்.

சாயி நாதருக்கு உயர்ந்த, தாழ்ந்த அடியவர் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரையும் சமமாகவே பாவித்தார். அவர்கள் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார்.

ரோகில்லா தொடங்கி, மேகா வரையிலான ஏராளமான எளிய அடியவர்கள் பாபாவின் பூரண அன்பால் கட்டுண்டவர்கள். பண்டிதர்களும், தொழில் மேதைகளும் பாபாவின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

விரிந்த மனப்பான்மையுடன் உண்மையை அறிய முடிந்தால் தீய எண்ணம் நசிந்துபோகும். மகாத்மாக்களை ஆராதிக்கும் விஷயத்தில் குல, மதங்களைக் காணாதீர்கள் என்பது பாபாவின் அறிவுரை.

தேவையைப் பூர்த்தி செய்யும் உணவு எவ்வளவு சிறப்புடையதோ, மகான்களின் நல்லுரைகளும்கூட அவ்வளவு உயர்ந்ததே. அப்படிப்பட்ட ஒரு மன நிலையில்லை எனில் விலை மதிப்பிட முடியாத நன்மையைக் காலால் உதைத்துத்தள்ளுவது போலவேயாகும். இந்த உண்மையை சாயி சரித கதை ஒன்றிலிருந்து நாம் அறியலாம்.

ஓர் ஊரின் தாசில்தார் பாபாவை தரிசிக்க, தன் நண்பரான ஒரு வைத்தியரையும் உடன் வருமாறு அழைத்தார். வைத்தியர் ஆசாரம் மிகுந்த அந்தணர். _ ராமரை வணங்குபவர். நியம, நிஷ்டைகளை கடைப்பிடிப்பவர். அவரைப் பொறுத்தவரையில் பாபா ஒரு முஸ்லிம். மசூதியில் வசிப்பவர். அவரை வணங்குவது அது தன் குலத்திற்கு ஏற்காது!.

இதைத் தாசில்தாரிடம் கூறி, தான் சீரடிக்கு வந்தாலும் அங்கே பாபாவை வணங்க மாட்டேன், தட்சணை ஏதும் அவருக்குக்கொடுக்க மாட்டேன், இதற்கு உடன்பட்டால் சீரடி வருவதாகக்கூறினார். தாசில்தார் இதற்கு ஒப்புக்கொண்டார்.

சீரடியில் பாபாவை இருவரும் தரிசித்தபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. யாரை வணங்கமாட்டேன் என தீர்மானமாகக்கூறினாரோ அவரை, சாஷ்டாங்கமாக வைத்தியர் வணங்கி, பாதத்தின் அருகில் அமர்ந்து கொண்டார்.

தாசில்தாருக்கு ஆச்சர்யம்! “என்ன இது? பாபாவுக்கு நமஸ்காரம் செய்ய மாட்டேன் என்றீரே!” எனக்கேட்டார்.

”இங்கே அமர்ந்திருப்பது பாபா அல்ல, சாட்சாத் சியாமள வண்ணனாகிய ஸ்ரீ ராமச்சந்திரரே.. சரியாகப் பாருங்கள்!” என்றார் உணச்சிமயமான வைத்தியர்.

இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே, ஒரு கணத்தில் ஸ்ரீ ராமருக்கு பதிலாக சாயியின் உருவத்தைக் கண்டு, பாபா முஸ்லிம் அல்ல ஸ்ரீ ராமரே என்ற முடிவுக்கு வந்தார்.

ஸ்ரீ சாயி நாதர் ஒரு மகா யோகீஸ்வரர், அவதார புருக்ஷர். எத்தனையோ பேர் பிறப்பில் தாழ்ந்த குலத்தவராக இருந்தும், ஞானிகளாகவில்லையா? என்ற எண்ணம் தோன்றியது. இருப்பினும், சாயி தனக்கு அருள் புரியவில்லை எனில், மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் பூண்டார்.

இந்த விசித்திர எண்ணம் ஏன்?

நிச்சயத் தன்மை பெறாத மனம் சாதிப்பது ஏதுமில்லை. மனம் எப்படி இருந்தாலும், விதியின் எழுத்து அதைவிட பலமானது.

வைத்தியர் விஷயத்தில் பிறகு என்னதான் நடந்தது?

இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் மன உறுதியுடன் கழிந்தது. நான்காம் நாள் நான்தேட் என்ற ஊரிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வைத்திய நண்பரை சந்தித்ததால், நண்பர்கள் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டபடி மசூதியை நோக்கி நடந்தார்கள்.

வைத்தியரும் தன் உறுதியை மறந்து மசூதிக்குள் வந்துவிட்டார். பாபா, ”என்ன வைத்தியரே! ஏன் இங்கு வந்தீர்? யார் உம்மை அழைத்தார்கள்?” எனக் கேட்க, கேள்வியின் உட்பொருள் மனதை உறுத்த வெட்கமடைந்தார்.

குழந்தையின் பிடிவாதம் தாயைக் கட்டுப்படுத்துமா? தாயே தானே சென்று குழந்தையிடம் பேசுவார். அதுபோல பாபாவும் மறுநாள் இரவு வைத்தியர் கனவில் தோன்றி அனுக்கிரகம் செய்தார்.

வாய்ப்பு இல்லாதபோது எதுவுமில்லை. ஆனால், கிடைத்த வாய்ப்பை வீணாக்குவது அறியாமை. ஆகையால் பாபா வைத்தியருக்கு அருள் புரிந்தார்.

வாழ்வில் ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தே தீரும் – எவராலும் தடை செய்ய முடியாது.

யார் யாருக்கு எப்பொழுது அருள் பெற வாய்ப்பு வருகிறதோ, அப்பொழுது பாபா அருள் நிச்சயம் கிட்டும். சிறிது நேரம் உலாவி வரலாம் என்று அலைகள் கடலைவிட்டு கரைவரை வரும்போது கடல் கவலையடையாது. அலைகள் திரும்பி வரும் என்று கடலுக்குத் தெரியும். அது போன்றே சாயியும் என்பதை உணரவேண்டும்.

சாயி பக்தர்களாகிய நமக்கும் சில வேளைகளில் பல சந்தேகங்கள் தோன்றும். அவை தீர்ந்து போனால் மகிழ்ச்சியடைகிறோம்.

நவரத்தினங்களை மாலையில் எங்கு பதிக்கலாம் என்பதைப் பொற் கொல்லர் அறிவதுபோல, இந்த சிருஷ்டி நிர்மாணத்தை இறைவன் நன்கு அறிவார்.

சிருஷ்டிகள் அனைத்தும் இறைவனின் மாற்று உருவமே என்பதை அனைவரும் உணரவேண்டும். இது பற்றி பாபா கூறியிருப்பவை்

”சந்தேக உணர்வு, மனிதரை தனிமைப்படுத்தி விடும். சந்தேகம் இல்லாதவர்களாகி இறைவனை ஆராதனை செய்துவந்தால், அப்போது ஏற்படும் ஆனந்தத்துக்கு அளவேயில்லை.

மனிதர்களுக்கு சில ஆசைகள், கோரிக்கைகள் இருந்து வரும். அவற்றில் சில நிறைவேறும், சில நிறைவேறாது. எதிர்பார்த்தது நடக்காவிட்டால் கவலைப்படாமல் நிறைவேறியவற்றை நினைத்து ஆனந்திக்கக் கற்றுக்கொள்ளவும்.

மாயை பிரம்மா முதல் சிறு பிராணிகள் வரை அனைவரையும் பாதித்துள்ளது. ஹரி நாமம் ஜெயிப்பவர்களை இந்த மாயை ஏதும் செய்யாது.

சுகத்தைத் தேடுகையில் ஜீவனைத் தேடி துன்பம் வரும். இது ஒருவித போராட்டமே. இதில் களைத்து விடும் ஜீவன் தான் சுதந்திரமற்றவன் என்பதை உணர்கிறது. இதற்குக் காரணம் கர்மவினைகளே.

அவை சுக வடிவில் வரும்போது சுகமாகவும், துக்கவடிவில் வரும்போது துக்கமாகவும் தெரிகிறது. மாயை விலக சாயி நாமத்தை உச்சரித்து பலன் அடைய வேண்டும்.

கர்மாவின் செயல்கள் கர்மாவினுடையதே, ஆயினும் இறைவனை அனுதினமும் வழிபடுபவர்களிடம் அந்த இறைவனே மறைவாக அவற்றை அனுபவித்து கர்மாவை பலவீனமாக்குகிறான் என வேதங்கள் கூறுகின்றன. சாயி சக்தி என்ற கவசம் நம்மை கண்டிப்பாக காப்பாற்றும் என திட நம்பிக்கை கொண்டு சாயி நாதரைத் தொழுதால் பிறவிப்பிணிகள் எளிதில் அகலும், நாம் வெற்றிபெறலாம்.

ஜெய் சாய் ராம்

ஆதம்பாக்கம் கே. குப்புசாமி

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s