உதடுகள் உச்சரிக்கட்டும்!

25128

குருராயரே! பூர்வ ஜென்ம தொடர்பினால்தான் நான் உங்களை இப்போது நெருங்க முடிந்தது என்பதை அறிந்து பயப்படுகிறேன்.
பூர்வத்தில் எனக்கும் உங்களுக்கும் என்ன தொடர்போ? நீங்கள் நடக்கும் வழியில் கல்லாய் இருந்து உங்கள் பாதங்களைத் தடுக்கினேனோ, புல்லாய் இருந்து உறுத்தினேனோ, முள்ளாய் இருந்து குத்தினேனோ? நாயாய்க் குரைத்தேனோ, பாம்பாய் அச்சுறுத்தினேனோ, மாடாய் முட்டினேனோ.. வேறு எதுவாய் இருந்து உங்களுக்குத் தொல்லை தந்தேனோ நான் அறியமாட்டேன்..
உங்கள் ஸ்பரிசம் பட்டதால் மனித ஜென்மம் எடுத்துள்ளேன் என்பதை மட்டும் அறிவேன். மற்ற என் பாவங்களால் நான் சூழப்பட்டும், ஆளப்பட்டும் அல்லல் படுகிறேன்..
சாயி தேவா! சமீப காலமாக எனது ஆன்மா அமைதியிழந்து தவிக்கிறது. ஏதோ பயத்தால் படபடக்கிறது. விழித்திருக்கும்போது கவலையாலும், உறங்கும்போது திகில் கனவுகளாலும் அருவருப்பான தீய காட்சிகளாலும் திடுக்கிட்டுப்போகிறேன். குழப்பங்களாலும், கேள்விகளாலும் தத்தளிக்கிற மனதோடு, உடலும் தள்ளாடுகிறது.
கஷ்டங்கள் என்ற படகில் அமர்ந்துகொண்டு சம்சாரக்கடலில் பிரயாணிக்கிறேன். தத்தளிப்போடு செல்லும் வாழ்க்கையில் எங்கே தடுமாறி விழுந்து விடுவேனோ என பயமாக உள்ளது. இதிலிருந்தே நான் உங்களுக்கு எதிராக நடந்து கொண்டவன் என்பதை அறிந்து கலங்குகிறேன்.
கடந்த ஜென்மத்தை மறந்துவிடுங்கள். இந்த ஜென்மத்தில் என் குருவே! உங்களை அறிந்தது முதல் ஆழ்ந்த பக்தி செலுத்துகிறேன்.. கண்ணீரால் உங்கள் திருவடிகளைக் கழுவி, இதயத்தால் துடைத்து, ஆன்மாவால் பூஜீக்கிறேன்..
என்னை நினைவில் வைத்துக் கொள்ளும். உமது இதயத்தின் ஓர் ஓரத்தில் என்னை வைத்து பாது காப்பு அருளுங்கள் குருவே! குரு ராயரே, குரு ராயரே! இக்கட்டான நேரத்தில் என் மீது கண்களை வைத்துப்பாதுகாப்பாக இருங்கள். என்னைக் கைதூக்கிவிட விரைந்து வாருங்கள்.
பகட்டானவர்களும், படித்தவர்களும் உங்களை வெளிச்சத்தில் தேடுகிறார்கள். பாமரனாகிய எனது ஆன்மாவோ இரவு நேரத்தில் தனிமையில் உம்மை நினைத்துத் துதிக்கிறது. இதயத்தில் நிற்கும் உமது திருவடிகளை இறுகப் பற்றிக்கொண்டு வேக வேகமாகப் பிரார்த்தனை செய்து கலங்குகிறது.
எளியவன் என என்னை புறக்கணிப்பு செய்து விடாதீர்கள். பகட்டில்லாதவன் என என்னைப் பாராமல் போய்விடாதீர்கள். கஷ்டப்படுகிறவன் என உறவுகளைப் போல தூரப் போய்விடாதீர்கள். உதவிக்காகக் காத்திருக்கும் என் மீது விருப்பமாக இருங்கள். தவறு செய்யும்போது மனிதரைப் போல புறம்கூறி, தண்டிக்காமல் மன்னித்து அருள் பாலியுங்கள்.
உம்மைத் துதித்தால் துன்பம் விலகி, எதிரிகள் தொலைவார்கள் என்பதால்உம்மைத் துதிப்பதைத்தொழிலாகக் கொண்டிருக்கிறேன்.
நான் நடக்கும்போது அகலமான பாதைகளைப்பார்த்தால் உங்கள் அருளை எண்ணி உருகிப் போகிறேன்.. நான் சுதந்திரமாக நடக்க இந்த வழித்தடத்தை விசாலமாக வைத்திருப்பதாக நினைத்துப்புல்லரிக்கிறேன்.
வெளிச்சத்தில் நடக்கும் போது, உங்களை எண்ணி துதிக்கிறேன்.. நீங்களே என் கண்களைப் பிரகாசமாக்கி வெளிச்சமாகவும் இருக்கிறீர்கள் என்பதை மனம் உணர்கிறது.
எனக்கென நீங்கள் ஒதுக்கித் தரும் இடத்தில் நிம்மதியாக உறங்கும்போதும், விழிக்கும் போதும் நீங்கள் எனக்குப் பாதுகாப்பாக இருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.. –
என் சாயி தேவனை ஆராய்ந்து பார்த்தேன். அவர் நல்லவருக்கு நல்லவராக, புனிதருக்குப் புனிதராக இருக்கிறார். மாறுபட்டுத் தோன்றுகிறவனுக்கு மாறுபட்டு தோன்றுகிறார். இதயத்தில் எளிமை உள்ளவர்களை உடனடியாக காப்பாற்றுகிறார். துரோகம் செய்கிறவர்களையோ அவர் கண்டு கொள்வதில்லை. என் மனமே! நீதியாய் நட, நேர்மையில் விருப்பம் கொள்! மாறாத அகிம்சையைப் பின்பற்று! இந்த அடிப்படை விஷயங்களால் அவனது அருளைப் பெறலாம் என என் மனதுக்கு ஆலோசனை கூறிக்கொண்டேன்..
அப்படியிருந்தும் என் மனம் சஞ்சலத்தால் தள்ளாடுகிறது. சிறு சிறு பிரச்சினைகளால் நான் களைத்துப் போகிறேன். என் நம்பிக்கை வீண் போகாதவாறு என்னைக் காப்பாற்றுங்கள் பிரபு.
குரு ராயரே குரு ராயரே! இக்கட்டான நேரத்தில் என் மீது கண்களை வைத்துப் பாதுகாப்பு தாருங்கள். துன்பங்கள் சூழும்போதும், கடன்காரர்கள் நெருக்கும் போதும் என்னை கவனித்து அருள் செய்து விடுவித்து அருளுங்கள். உங்கள் செல்வத்தைக் கொடுத்து என் கடனைத் தீருங்கள், நானும் என் குடும்பமும் உங்களுக்குக் காலம் முழுவதும் அடிமைகளாகக் கிடப்போம்.
குரு ராயரே, உங்கள் பார்வை மற்றும் ஸ்பரிசம் பட்ட இந்த மானுட ஜென்மத்திற்கு நன்மை செய்து அருள்புரியுங்கள். நான் வாழ வழிகாட்டுங்கள், நீதியை சரிகட்டுங்கள்.
ஜெய் சாய் ராம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s