அணுகுமுறையை மாற்றுங்கள்!

srisaipainting

இன்றைக்கு என்னை எல்லோரும் சாயி பாபாவின் செல்லப் பிள்ளை என்று புகழ்கிறார்கள். தன்னை கடவுளின் பிள்ளை என உணர்ந்து கொள்ளவே பலருக்கு முடியாது. உணர்ந்தாலும் பிறரால் அங்கீகரிக்கப்படும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அது பாக்கியம் அல்லவா?

இந்த பாக்கியம் எப்படி வந்தது, தெரியுமா?

இந்த பாக்கியம் வருவதற்கு முன்னதாக, நான் எனது அணுகுமுறையை மாற்றினேன். எதிர்மறை விக்ஷயங்களையும் ஈர்க்கக் கற்றுக்கொண்டேன். தான் கடவுளால் படைக்கப்பட்டவன் என யார் தன்னை நினைக்கிறானோ, அவன், தன்னைப்படைத்தவனே தனது தந்தை என்பதில் உறுதியாகவும், நிச்சயமாகவும் இருக்க வேண்டும். இந்த உறுதி எனக்குள் ஏற்பட்ட பிறகு, பக்தன் என்ற நிலையைத்தாண்டி கடவுளின் நேரடியான வாரிசு என்கிற அங்கீகாரத்தை எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்டேன்.

தந்தையை அறியாத மகன், நான் இவனுடையபிள்ளை என சொல்லிக்கொள்வது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் அல்லவா? இவன் இன்னார் மகன் என்பது ஊரறிந்த உண்மையாகும் போது, நான் அவனது வாரிசு என்று சொல்லிக்கொள்வதில் மட்டும் என்ன தப்பிருக்கப் போகிறது. நான் கடவுளின் வாரிசாக இருந்தால் எல்லை மீறிய சக்தி எனக்கு இருக்க வேண்டும். அந்த சக்தி இந்த உலகத்தை, பிரபஞ்சத்தைக் காக்க வேண்டும். நினைத்ததை நினைத்தவுடனே பெற வேண்டும். ஆனால் இவை எதுவுமே சாத்தியப்படாதபோது, அந்தப் பெரிய இறைவனின் நேரடி வாரிசு என்று சொல்லிக்கொள்வதில் மட்டும் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? என்றும் யோசித்தேன்.

எனக்குள் அந்த சக்தி இருக்கிறது. அதுதான் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கிரமித்து ஆளுகை செய்கிறது. அதே சமயம், நான் என்னை இந்த உடலாக நினைத்து உடலுக்காக வாழும் வரை அந்த சக்தி வேலை செய்யாது என்பதையும் அறிந்தேன்.

உடலாக என்னை நினைக்கும் வரை, எல்லை மீறிய சக்தி என்னிலிருந்து செயல்பட முடியாது. நான் என்பது ஆன்மா என்று என்றைக்கு என்னால் முழுமையாக ஏற்கப்படுகிறதோ, இந்த உடம்பு என்னால் உதாசினப்படுத்தப் படுகிறதோ அன்றிலிருந்து இந்தப் பிரபஞ்ச சக்தி என்னிலிருந்து வேலை செய்யும்.

அதுவரை நான் குறிப்பிட்ட அளவு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறேன். எனக்குள் இறை சக்தி முழுமையாக இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கு, அவர்களின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன. அப்படி நம்பாதவர்களுக்கு என்னால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதாவது யார் தனது அணுகுமுறையை மாற்றி என்னை ஈர்க்கிறார்களோ, அவர்களுக்கு என்னிடமிருந்து பலன் நேரடியாகக் கிடைக்கிறது.

சில சமயம் நான் மிகுந்த சக்தியுள்ளவன் என நம்புகிறவர்களின் வரிசையில் நானேகூட எப்போதும் இருப்பதில்லை. உடம்பு சார்ந்த பிரச்சினைகளால் துவண்டுவிடும் போது என்னையறியாமல் “ஏலி ஏலி லாமா சபக் தானி” என்பேன். அதாவது, “என் கடவுளே, என் கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்கள்?” என்று இதற்கு அர்த்தம்.

இந்த எண்ணம் எனக்குள் புகுந்து ஆக்கிரமிக்கும் போது, எனக்கு இருக்கிற சக்தி மட்டுமின்றி எனக்குள் இருக்கிற சக்தியும் முழுமையாக செயல்பட முடியாமல் போய்விடுகிறது. எதை அடைய விரும்புகிறேனோ, அது என் கை விட்டுப்போகிறது. அதை மீண்டும் அடைய முயற்சிக்கும் போது, மீண்டும் என்னை விட்டுப் போகவே முயற்சிக்கிறது. ஆனால் முயன்று அதைத் தக்கவைத்துக் கொள்கிறேன். இப்படி ஏற்ற இறக்கங்களோடு ஓடிக் கொண்டிருந்தாலும், இன்னமும் என்னை கடவுளின் பிள்ளையாக, அவரது நேரடி வாரிசாகவே உணர்கிறேன்.

இது எப்படி சாத்தியம்?

நான் உடம்புக்குள் அடைப்பட்டுக் கிடக்கிறேன். ஆகவே இந்த உடம்பு பலவீனமானது. அதற்குள் கடவுள் குடியிருக்கிறார். ஆகவே இது பலமானது.

பலவீனத்தில் பலம் என்பதுதான் இந்த உடம்புக்குள் இருக்கிற கடவுள் சக்தி. இதை நான் உணர்ந்து கொண்டேன்.

ஆயிரம் அல்லது நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால், இந்த விக்ஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் ரகசியமாக வைத்திருந்து இருப்பேன். இதற்கு மந்திரம் எனப்பெயர் வைத்து, பிறரை என்னிடம் மயங்கிவர வைத்திருப்பேன். ஆனால், நாளை என்பது நமக்கு உண்டு என்கிற நிச்சயம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற காலக்கட்டத்தில் இருப்பதால், நான் அறிந்தவற்றை உடனடியாக உங்களுக்கு சொல்லிவிட வேண்டும் எனத் துடிக்கிறேன்.

நீங்கள்தான் கடவுளின் நேரடி வாரிசு ஆயிற்றே? உங்களுக்கும் நாளை நான் உயிரோடு இருப்பேன் என்ற நம்பிக்கை இல்லையா? எனக் கேட்கலாம். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.

ஆனால் அறிவியல் பெருக்கமும், வாகனப் பெருக்கமும் வளர்ந்துவருகிற தொழில் போட்டிகளும் பிறருக்கு நான் வாழட்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குவது இல்லையே! ஆகவேதான் நான் இப்படிச் சொல்கிறேன்.

சரி, விக்ஷயத்துக்கு வருவோம். சாதாரணமாக இருந்த எனக்கு நாளுக்கு நாள் இறை சக்தி அதிகரிக்கக்காரணம் என்ன?

நேற்றுவரை தோல்விக்கு உரியவன் என்று என்னாலேயே உதாரணமாகக்கருதப்பட்ட நான் இன்றைக்கு வெற்றி பெற்றவர்கள் வரிசைக்கு வரக்காரணம் என்ன?

இன்று மறக்கவோ, ஒதுக்கவோ முடியாதவனாக நான் மாறுவதற்கான வித்து எங்கே விதைக்கப் பட்டது? அது எப்படி வளர்ந்து இன்றைக்கு நிழல் மரமாகியிருக்கிறது என்பதை நான் சொன்னால் தானே, எனக்குள் இருக்கிற மர்ம முடிச்சு அவிழும். சொல்கிறேன் கேளுங்கள்..

என்னை உணர்ந்தேன்-!

நீ இப்படி இருக்க வேண்டும், நடக்க வேண்டும் என்று கடவுள் வானத்தில் எனக்காக எழுதி வைத்த கட்டளைகள் அடங்கிய கரும்பலகை ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை. வால்மீகி எழுதி வைத்ததைப் போல நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மற்றவர்கள் எழுதி வைத்ததைப் பின்பற்ற முடிகிறதா என்றால் அதுவும் இல்லை.

அப்படியானால் நான் எனக்காக ஒரு கோட்பாடு அல்லது இலக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். இந்த உலகத்துக்கு நான் எதற்காக வந்தேன்? ஏன் வந்தேன்? என்ன செய்ய வந்தேன்? என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்ன செய்ய வேண்டும்? என ஆழமாக யோசித்தேன். இந்த கேள்விகளுக்கான அட்டவணைகளை இறைவன் என் மனத்திரையில் பதித்து வைத்திருக்கிறான்.

அதன் படி நடக்க வேண்டும் என முடிவு செய்தேன். எனது நோக்கம் எது என்று நான் கூறுகிறேனோ அதன்படி நான் நடந்தாக வேண்டும். எனக்கு நான் ஏற்படுத்திக் கொள்வதுதான் சரியான இலக்கு. எனது வாழ்க்கையும் இப்படித்தான் இருக்க வேண்டும் என நான் வகுத்துக்கொள்ள வேண்டும். அது இப்படி இருக்கவேண்டும் என பிறரது எதிர்பார்ப்பில் இருக்கக்கூடாது. இப்படியிரு என யாரும் உத்தரவு போடக்கூடாது.

எனது வாழ்க்கை என்கிற கரும்பலகையை நான் உட்கார்ந்து உற்றுப் பார்த்தேன். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள், தோல்விகள், ஏமாற்றம், மகிழ்ச்சியான நிமிடங்கள், அன்பு, பாசம்,காதல் என எத்தனையோ விக்ஷயங்கள் அதில் பதியப்பட்டு இருப்பதை கவனித்தேன்.

நான் ஜெயிக்க வேண்டுமானால் அவற்றை எல்லாம் உடனடியாகத் துடைத்தாக வேண்டும். கடந்த காலத்தின் எந்த ஒரு நிகழ்வும் என் எதிர் காலத்திற்கு உதவி செய்யாது. முடிந்துபோனவை எதுவும் தொடரப்போவதில்லை. ஆகவே, தேவை இல்லாத குப்பைகளால் எனது மனதை நிரப்பிக்கொண்டிருப்பதைவிட, அனைத்தையும் புதிதாக மாற்றப் போகிறேன் என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

இப்போதுதான் பிறந்தேன் என்ற உணர்வுக்குள் நான் வந்தபோது, அனைத்தும் புதிதாக இருந்தன. மனைவியின் உறவில் புதுமை. இன்றுதான் அவளைப் பார்த்தது போன்ற உற்சாகம் ஏற்பட்டது. பிள்ளைகள் மீது புதிய பாசம்.. இப்போதுதான் அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்ற உணர்வு. பெற்றோர், நண்பர்கள், அக்கம் பக்கத்தார் என அனைவர் மீதும் புதுமையான பாசத்தைப் பொழிய ஆரம்பித்தேன். அவர்கள் அனைவரையும் இப்போது தான் முதன் முறையாக சந்திக்கிறேன் என்ற உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது.

ஒரு புதிய ஆரம்பம்!

நான் யாராக இருந்தேன்? எப்படியிருந்தேன்? என்ன செய்துகொண்டிருந்தேன்? என்ற எந்த கேள்விக்கும் என்னிடம் இடமில்லை. மாறாக, என்னவாக இருக்கப் போகிறேன் என்ற சிந்தனை மட்டும் எனக்குள் இருக்க அனுமதித்தேன். இன்றைக்குத்தான் புதிதாகப் பிறந்திருக்கிறேன் என்ற உணர்வில் இந்த உலகத்தை உற்சாகமாகப்பார்க்க ஆரம்பித்தேன்.

என் மனதுக்கு எது புதிய உற்சாகத்தை, சந்தோக்ஷத்தை, நிம்மதியைக் கொடுக்கிறதோ அதை பிறர் எனக்காகத் தராமல், நான் பிறருக்குத் தருவதற்காகவும், எனக்காக அதை எடுத்துக்கொள்ளவும் தயாராகி விட்டேன்.

நாளைக்காகக் கவலைப்படாமல், இன்றைக்கு எது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, இப்போதைக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது என அப்போதைக்கு அப்போது வாழ்வதற்குத் தயாராகி விட்டேன்.

என் மனநிலைக்கு ஏற்றவாறு மற்றவர்களை மாற்றிக்கவர்வதும், பிறரது மன நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்வதும் எனது புதிய வாழ்வுக்கு உகந்தது எனத் தீர்மானித்து அதில் எனது கவனத்தைச்செலுத்தினேன்.

இப்படி நான் சில விக்ஷயங்களை மாற்றிக் கொண்டபோது, சிலவற்றை ஏற்றுக்கொண்டபோது, சிலவற்றை ஒதுக்கியபோது இன்று மறக்கவோ, ஒதுக்கவோ முடியாதவனாக நான் மாறுவதற்கான வித்து விதைக்கப்பட்டு விருட்சமாக மாறியது.

எனது அணுகுமுறை, நான் அதை ஆக்கிரமித்த விதம், விடாமுயற்சி, எளிதில் மாறிக்கொள்ளும் இயல்பு ஆகிய விக்ஷயங்கள் மூலம் நான் பெரிய விக்ஷயங்களை அடைந்தேன். இதைப் பற்றி விரிவாக உன்னிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

நான் தோற்றுக்கொண்டிருந்த காலத்தில் எனது அணுகு முறை எப்படியிருந்தது? நான் ஏன் தோற்றவனாகவே இருந்தேன். மற்றவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்னால் ஏன் முடியவில்லை? இதை நான் அலசியாக வேண்டும்.

துவக்கத்தில் நான் ஒரு ரிசர்வ் டைப் அல்லது ரிவர்ஸ் டைப் குணமுள்ளவனாக இருந்தேன். இந்த குணமுள்ள யாருமே, தாங்கள் தவறு செய்துவிடக்கூடாது, தங்களைப் பிறர் குறை சொல்லிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு இருப்பார்கள். இதனால் யாரிடமும் அதிகம் பழகவோ, பிறரை நெருங்கவோ தன்னை தயார்படுத்திக்கொள்ளமாட்டார்கள். நான் இப்படித்தான் இருந்தேன்.

இது என் தோல்விக்கு ஒரு காரணம். எனக்கு எல்லாம் தெரியவேண்டும் என்பதற்காக விழுந்து விழுந்து படித்தேன், என்னைப் பிறர் நல்லவன் என பாராட்ட வேண்டும் என்பதற்காக, எனக்குப் பிடிக்காத, பிறருக்குப் பிடித்த பல விக்ஷயங்களைத் தாராளமாகச் செய்துவந்தேன். இதுவும் தோல்விக்கு காரணமாக இருந்தது.

நம்முடைய பெற்றோர்களின் பொருளாதாரம், வாழ்க்கை ஆகியவை எப்படி ஒரு வரையறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறதோ, அப்படியே நானும் அடைபட்டுக் கிடக்கவேண்டியதுதான் என்பதில் நிச்சயம் உடையவனாக இருந்தேன்.

எனது தந்தையார் ஒரு தனியார் நிறுவனத்தொழிலாளி என்றால் நான் அதிகபட்சம் ஒரு அரசுத்துறை தொழிலாளியாக முடியும். அதையும் தாண்டி படித்தாலும், முயற்சித்தாலும் இதுதான் என் நிலைமை என நினைத்திருந்தேன். இதுவும் என் தோல்விக்குக் காரணம்.

பிறரிடம் சென்று நிற்பது என் கவுரவத்துக்கு இழுக்கு என நினைத்தேன். என்னைப் பார்த்துபொறாமைப்பட்டவர்களும், நான் நன்றாக வருவேன் என்று எதிர்பார்த்தவர்களும் என்னுடைய இந்த நிலையைப் பார்த்து பரிகசிப்பார்கள். அல்லது பரிதாபப்படுவார்கள் என நினைத்து யாரையும் அணுகாமல் இருந்தேன். இதுவும் தோல்விக்குக்காரணம்.

கிடைத்ததை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்ற எண்ணத்தோடு இருந்தேன். ஆசையிருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.. என்ற பழமொழி உண்டு. நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், கழுதைக்குப் சுமக்கிற வேலை தான் என்ற பழமொழியும் உண்டு.

இத்தகைய பழமொழிகள் யதார்த்த நிலையை சொல்வதாக நினைத்து என்னை நானே முடக்கிக்கொண்டேன். இத்தகைய சூழல்கள் எனது வளர்ச்சியை வெகுவாகக் குறைத்து விட்டன. எனது திறனை வளர்க்கத் தவறிவிட்டன என்பதை நான் அப்போது அறியவில்லை. இதுவும் எனது தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

மானம், மரியாதை, புகழ் போன்ற போலி கவுரவங்களை போர்த்திக் கொண்டு இருந்ததால் எனது அணுகு முறை அதற்கு ஏற்பவே அமைந்திருந்தது.. இதனால் நான் பிறர் வளர ஏணியாகவும், பிறர் சுகமாக நடக்கத் தரை விரிப்பாகவும் மட்டுமே இருந்தேன்.

இப்படிப்பட்ட அணுகுமுறைகள் என்னைத்தோல்வியின் பிடியிலேயே வைத்திருந்தன. இதற்கு முன்பெல்லாம் எனது அணுகுமுறை பற்றி அவ்வளவாக கவனம் செலுத்தியதுகிடையாது.

என்னை பலர் விரும்புகிறார்கள் என்றால், என்னிடம் உள்ள ஏதோ ஒன்று அவர்களை ஈர்க்கிறது என்று நான் யோசித்தது கிடையாது. இந்த யோசனையில்லாத நிலையால், அவர்கள் என்னை ஈர்த்துக் கொண்டு ஓர் அடிமையைப் போல நடத்தினார்கள். நான் முன்யோசனையில்லாத ஒரு விலங்கைப் போலவே இருந்தேன்.

இப்போது, நான் எதிர்பார்க்காத ஒன்று, விரும்பாத ஒன்று என்னை எதிர்நோக்கியிருக்கிறது என்றால், அதை வெறுமனே ஒதுக்கிச் செல்ல நான் விரும்பவில்லை. அதையும் ஈர்த்துக்கொண்டு மேலேறவே விரும்புவேன். எனது வருகை, பேச்சு என ஆரம்பித்து, கட்டுரைகள், கவிதைகள் என ஒவ்வொன்றிலும் இந்த ஈர்ப்பைச் செலுத்தினேன். இதனால் பிறரால் எதிர்பார்க்கப்படுகிறேன்.

உணராத காலக்கட்டத்தில், சிலரால் மட்டும் ஈர்க்கப்பட்டேன். இந்த ஈர்ப்பு என்பது எனக்கு அவர்கள் விரித்த வலை என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே அகப்பட்டுக் கிடந்தேன். அதை அவர்களது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

டாக்டர் நாசர் என்ற தம்பி, அண்ணே, உங்களை எல்லோரும் தரை விரிப்பு போல பயன்படுத்திக்கொண்டு, தூர எறிகிறார்கள் என வருத்தப்படுவார். இவ்வாறு நடந்ததற்குக் காரணம், எனது தவறான அணுகுமுறை என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

என்னுடைய தவறான அணுகுமுறைக்கு சில உதாரணங்களைக் கூறிவிட்டுத் தொடர்கிறேன். நான் ஒரு பத்திரிகையில் வேலை செய்தேன். மிகப் பெரிய பத்திரிகை. ஆனால், குறைந்த சம்பளம். பத்திரிகையாளனாக இருப்பது கவுரவம் என்பதால் பத்திரிகையாளனாகத் தொடர நினைத்தேன். எனக்கு வாழ்வளித்த பத்திரிகை என்ற விசுவாசத்தால் அதே பத்திரிகையில் தொடர்ந்து இருந்தேன்.

இந்த இரண்டும் எனது வாழ்வின் பெரும் பகுதியை வீணடித்து விட்டன. வாழ்க்கையின் சந்தோக்ஷத்தை இழந்துவிட்டேன். மாற்றம் என்பது தடுமாற்றத்தைத் தரும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது நிச்சயமாக முன்னேற்றத்தைத் தரும் என்பதை பின்னாளில்தான் உணர்ந்துகொண்டேன். நட்பு என்ற போர்வையில் ஏமாந்திருக்கிறேன்.

பத்திரிகையாளர்களை சிவப்புக் கம்பளம் போட்டு மற்றவர்கள் வரவேற்பார்கள். தங்கள் காரியத்தைச்சாதித்துக்கொள்ள! அதனால், தனது நண்பர் எனக்கூறிக்கொள்வார்கள். காரியம் முடிந்ததும் அல்லது நம்மைவிட பெரிய பத்திரிகையாளர் வரும்போது நம்மை கழற்றிவிட தயங்கமாட்டார்கள். இதை அறியாமல் பெரிய பணக்காரர் என்னை நண்பர் என்கிறார், பெரிய அறிவாளி என்னை நண்பர் என்கிறார் என மகிழ்ந்து கிடந்தேன்.

இது தவறான அணுகுமுறை.

பணக்காரனுக்குப் பணக்காரன்தான் நண்பனாக இருக்க முடியும். ஏழையிடம் நட்பு பாராட்டுகிறான் என்றால் அவனை வைத்து வேலை வாங்கப்போகிறான் என்றுதான் அர்த்தம். தனது பணத்துக்கு செலவில்லாமல், பணம் விரையமாகாமல் எதிர்பார்த்த வேலை நடப்பதற்காக தன்னைவிட கீழ் நிலையில் இருப்பவர்களை நண்பர்கள் என சொல்லிக் கொள்வது உலக வழக்கு என்பது இப்போது புரிகிறது. அப்போது புரியவில்லை.

பத்திரிகையிலிருந்து வெளிவந்த பிறகு, எனது நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோர் வெவ்வேறு பத்திரிகைகளுக்குச் சென்றார்கள். நான் தனிப்பத்திரிகை ஆரம்பித்தேன். தனியொருவனாக நின்று போராடினேன்.

ஜெயித்ததை எல்லாம் அதில்தான் தொலைத்தேன். அதன் பிறகுதான் சாயி தரிசனம் பத்திரிகை வந்தது. அதையும் ஜெயிக்க வைக்கப்போராடினேன்.. நிறைய இழப்புகளை சந்திக்கவேண்டியிருந்தது. எனது அணுகுமுறை சரியில்லை என்பதை அப்போது உணரவில்லை.

பலரைப் பற்றி நல்லவர், வல்லவர், மகான் என எழுதிவிட்டு, பிறகு அவரைப் பற்றி தெரிந்ததும் இப்படி செய்துவிட்டோமே என வருந்தியதெல்லாம் நடந்தது. சாயி தரிசனத்தில், சீரடிக்கு அழைத்துச் செல்லும் ஒருவரின் விளம்பரத்தை இலவசமாக வெளியிட்டு வந்தேன். அவர் என் மூலமாகப் பயன் அடைந்துகொண்டே, நான் அவரிடம் நிறைய பணம் பெற்றதாக பிறரிடம் பொய்யானத் தகவலைக் கூறி வந்திருக்கிறார்.

பாபா மாஸ்டர் என்னிடம் கேட்டபிறகுதான் உண்மை புரிந்தது. அந்த நபரைத் தவிர்த்தேன். இலவசமாகச் செய்வதும், தேவையற்ற இரக்கம் காட்டுவதும் நமது வீழ்ச்சிக்குக் காரணம் எனப்புரிந்தது. இந்த விக்ஷயம் என் காதுகளுக்கு வந்த பிறகு தான், அவரை தவிர்த்து நானே நேரடியாக பக்தர்களை அழைத்துச் செல்லும் நிலை வந்தது. சாயி தரிசனமும் தப்பிப் பிழைத்தது. இந்த புதிய அணுகு முறையைத் தெரியாமல் நான் பல ஆண்டு காலம் ஏமாந்து கிடந்தேன்.

இதேபோல சாயி அடியார்கள் என்ற போர்வை போர்த்திக் கொண்ட பலரது ஏமாற்று வேலைகள் நடக்க உடந்தையாக இருந்தேன். காலம் மாற மாற அவர்களைப் புரிந்து ஒதுக்கினேன். இதனால் வந்த விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் எனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அதற்கு முன்பெல்லாம் எனது அணுகுமுறை சரியில்லை என்பதை பாபா எனக்கு உணர்த்தினார். நான் உணர்ந்தேன். அதன் பிறகுதான் சாயி தரிசனத்தில், சாயி வரதராஜன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

சிலந்தி வலை பின்னுகிறது. அதில் மற்ற பூச்சிகள் சிக்கிக்கொள்கின்றன. ஆனால் சிலந்தி சிக்கிக்கொள்வதில்லை. இப்படித்தான் நமது அணுகு முறை மற்றவர்களை கவர்வதாக இருக்கவேண்டும். நம்மை சிக்க வைப்பதாகவோ, வீழ்த்துவதாகவோ இருக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். நான் சிலந்தியாகும் அணுகுமுறையை மேற்கொண்டேன்.

அணுகுமுறையை மாற்றினால் மட்டும் போதாது. வேறு ஒன்றும் நம்மிடம் இருக்கவேண்டும். அது பிறரைக் கவர்கிற ஈர்ப்பு. அந்த ஈர்ப்பைப் பற்றித்தான் முதலிலேயே கூறினேன். விரைவில் அது பற்றி விளக்கமாகக் கூறுகிறேன்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s