கணவனை கவனித்துக்கொள்!

bigsai

என் அன்பு மகளே!

இதுவரை எனது கவலைகள் அனைத்தும் உன்னைப் பற்றியதாக மட்டும் இருந்தது. இப்போது உனது கணவனது ஆரோக்கிய விக்ஷயத்திற்காகவும் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

நீங்கள்தான் கடவுளாயிற்றே நீங்களே கவலைப்பட்டால் சாதாரண மனுஷியாகிய நான் எப்படி? எனக் கேட்கலாம்.

கர்ம வினையை அனைவரும் அனுபவித்தாக வேண்டியிருக்கிறதே. இந்த விக்ஷயத்தில் கடவுள் ஒரு வரையறைக்குள் மட்டுமே தலையிட முடியும்.

மற்றபடி அனைத்திலும் தலையிட்டால், இயல்பான வாழ்க்கை மிகவும் குளறுபடியாக முடிந்து விடும். ஆகவேதான் தனது பக்தர்களுக்கு ஆபத்து வரும் முன் பகவான் எச்சரிக்கிறான்.. வந்த பிறகு தலையிட்டுக்காப்பாற்றுகிறான். ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு காப்பாற்றிவிடுவதில்லை. காப்பாற்ற முடிவதில்லை.

ஆரம்பத்தில் செய்த தவறுகள் ஒட்டு மொத்தமாக மூட்டைக்கட்டிக்கொண்டு ஏற்ற காலத்தில் வெளிப்படும். அப்போது, என் கடவுளே காப்பாற்று எனக் கதறினால் என்ன செய்ய?

ஆரம்பத்திலேயே இந்தத் தவறை தவிர்த்துக்கொள் எனக் கூறும் போது காது கொடுத்துக் கேட்டிருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும்..

உதாரணமாக, சாப்பாட்டு விக்ஷயத்தில்கூட, கண்ட கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே என அறிவுரையாகச் சொன்ன வார்த்தையைக்கூட எத்தனை பேர் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

கடைசியில் ரத்த நாளம் பாதிக்கப்பட்டு, இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த வேகத்தைக் கூட தாங்கமுடியாமல் வெடித்துப் போவதும்,கொழுப்புகளால் அடைத்துக்கொள்வதும் நடந்தபிறகு, மாரடைக்கிறது.. காப்பாற்று.. கையில் பணமில்லை மருத்துவத்துக்குக் கொடு எனக்கதறினால் என்ன செய்வது?

ஆகவே, துவக்கத்தில் அறிவுரை கூறும்போதே அவற்றைக் கேட்டுக்கொள்ளும் பக்குவம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

உன்னுடைய மனக்கவலைகள், பிரச்சினைகள் அனைத்தையும்தீர்ப்பதில் கவனம் எடுத்துக்கொண்ட நான், இப்போது உனதுகணவனின் ஆரோக்கிய விக்ஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனக் கூறியதைக் கேட்டு ஒரேயடியாக பயந்துவிடாதேசமீபகாலமாக அவனது உடல் நலத்திலும், மன நலத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதை கவனித்திருக்கிறாயா? இல்லையா? நடவடிக்கைகளிலும் மாறுதல் தோன்றியிருப்பதை கவனித்தாயா? இல்லையா?

ஏதோ பயத்துடனும், படபடப்புடனும் எதையோ பறிகொடுத்ததைப் போன்ற முகத்துடனும் அவன் நடமாடுகிறான். மனதில் இனம் புரியாத பயம், கவலை ஏற்பட்டு சமீப காலமாக அவனை வாட்டுகிறது.

எதிலும் பிடிப்பு இல்லாதவனைப் போல் நடந்து கொள்கிறான். சில நேரங்களில் எரிந்து விழுவதும், சில நேரங்களில் தனித்து அமைதியாக இருப்பதுமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்.

இல்லாத விக்ஷயத்திற்காகவோ, சின்ன விக்ஷயத்திற்காகவோகூட சீறி விழுகிறான்.. இதையெல்லாம் பார்த்து நீ எரிச்சலடைவதும், குழப்பம் அடைவதுமாக இருக்கிறாய்.

வயதாக வயதாக அறிவு முதிர்ச்சி அடைய வேண்டும், இந்த வயதில் இப்படி நடந்து கொள்கிறாரே.. நீயும் தானே வேடிக்கைப்பார்க்கிறாய்? என என்னிடம் கேள்வி வேறுவயதாக வயதாகத்தான் கவலைகள் நம்மை நெருங்க ஆரம்பிக்கும். அதுவும் ஆண்கள் விக்ஷயத்தில் அவர்கள் மனதை கவலைகள் தொடத்தொடங்கும் காலம் இதுவாகும்.

பெரும்பாலானவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது..சூழ்நிலை, கடன் தொல்லை, அது இது என வேறு விதமாக சிந்தித்துக்கொண்டு கடைசியில் கோட்டை விட்டுவிடுவார்கள்.

பல பெண்கள், எனக்கும்தான் கவலை கஷ்டங்கள் இருக்கிறது, நான் என்ன அவரைப்போலவா நடந்து கொள்கிறேன் எனக் கூறுவார்கள்.

தாங்கமுடியாத சுமையை சுமக்கும் போது தலை ஆடுவது இல்லையா? அப்படித்தான் இளம் வயதில் அவனது உடலில் சுரந்த ஹார்மோன்கள் அவனைத்துடிப்போடும், எதிர்த்துப் போராடி ஜெயிக்கிற மனதோடும் வைத்திருந்தது. உன் மீது அன்பும் பாசமும் கொள்ளக் காரணமாக இருந்தது. இப்போது அது குறைய ஆரம்பித்திருப்பதால் எதிலும் பிடிப்பு குறைந்து தடுமாற வேண்டியிருக்கிறது.

எனவே, இதுவரை உனது ஆதரவினாலும்,அன்பினாலும் தனக்கிருந்த துடிப்பினாலும் ஜெயித்து, அனைத்தையும் சமாளித்து வந்தவன் இப்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறான் என்றால் முதலில் அவனது உடல் நலனைக் கவனி.

அவனை இயக்குகிற ஹார்மோன்கள் குறைந்து தன்னம்பிக்கையைத் தளர்த்தியிருக்கிறது. இதனால்தான் மனநிலையில் அவ்வப்பொழுது மாற்றம் ஏற்பட்டு, படபடப்பும் ஒருவித பயமும் தோன்றத்தொடங்கியிருக்கிறது. இதைப்புரிந்துகொள்ளாத பலர் குடிக்கவும், வேறுவித சகவாசங்களிலும் ஈடுபட்டு தன்னை முற்றிலும் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலையும் அவன் அடிமனதில் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது. உனது கணவன் அடிக்கடி தலைவலியாலும் அடிக்கடி டென்க்ஷனாலும் அவதிப்படுகிறான்.

விரக்தி அடைந்தவனைப் போலப் பேசுகிறான். உன் மீது அன்போடு இருந்தவன் அனைத்தையும் வெறுப்பது போலப் பேசுகிறான்.. இதனால் நீ எவ்வளவு உடைந்து போகிறாய்…?

மகளே, உனக்கு அப்பாவாக இல்லாமல் அம்மாவாக இருந்து ஆலோசனை கூறுகிறேன், நான் சொல்வதைக் கேள்..

கைக்கேற்ற பிள்ளைகள் உருவாகிவிட்டார்கள், உனது கவனம் அனைத்தும் அவர்கள் மீது இருக்கிறது. அவர்களைப் பற்றியே அதிகக் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறாய்.. இந்த நிலையில் உனது அன்பும், நெருக்கமும் குறைந்து போனதால், உனது கணவன் தான் தனித்திருப்பதைப் போன்ற நிலையை உணர ஆரம்பித்திருக்கிறான்.

மனதளவில் ஏற்பட்ட இந்தப் பிரிவு தனக்கு யாருமில்லை, தன் மேல் யாருக்கும் அக்கறையில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வருகிறது. வாழ்க்கையின் மீதிருந்த பிடிப்புகளைத் தளர்த்திக்கொண்டே வருகிறது. கடமை, வேலை என்று மட்டுமல்ல, பலரது நெருக்கடிகளில் சிக்கி அவன் அலைக்கழியும் நிலையில் நிச்சயமாக அவனுக்கு உனது ஆதரவு தேவை.

ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.. என்னதான் தைரியமான ஆணாக இருந்தாலும் அவனுள்ளும் ஓர் பெண் இருக்கிறாள்.. அதாவது பெண் தன்மை இருக்கிறது. இந்தத் தன்மைதான் தனக்கு மனைவி உட்பட மற்றவர்களின் அன்பும், கரிசனமும் தேவைப்படுகிறது என எண்ண வைக்கிறது.

தன்னை மற்றவர்கள் எப்படியேனும் பார்க்க வேண்டும் என எண்ணமிட வைக்கிறது. இதில் வயதாக வயதாக மாற்றத்தை உணரும் போது குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்துவிடுகின்றன.

தான் விரும்பியவாறு எதுவும் நடக்கவில்லை என அவன் வருத்தப்படுகிறான். இதற்கெல்லாம் காரணம், குடும்பத்தின் அனைத்து விக்ஷயங்களிலும் தனது மனைவியின் அணுகுமுறைதான் என்றஎண்ணம் அவனுள் ஏற்படுகிறது.

தன்னைப் பற்றியும், சூழ்நிலைகள் பற்றியும் அவன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. கண் எதிரே தெரியும் நிகழ்வுகளை மட்டுமே கவனித்து முடிவு மேற்கொள்கிறான்.. இதனால் சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன.

உங்களுக்குள் ஏற்பட்ட இடைவெளியினால்கூட உனது கணவன் மனதளவில் செயலிழந்தவனைப்போலத் தெரிகிறான். இந்த நிலையை மாற்ற முயற்சி செய்.. அவனை உற்சாகப்படுத்து. எந்த செயலையும் நிலையையும்

குறையாக எடுத்துக்கொள்ளாமல் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நடந்துகொள். கணவனோடு நேரத்தைச் செலவிடு. கல்யாணமான புதிதில் அவன் மீது அன்பு காட்ட எதையெல்லாம் செய்தாயோ, அதையெல்லாம் செய்து உன் மீதும் குடும்பத்தின் மீது அவனுக்குப்பிடிப்பை உண்டாக்கு. அது உனது கணவனின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஆயுளுக்கும் நல்லது.

”அடப் போங்கப்பா.. எனக்கும் இதே உணர்வுதான். அவராவது வெளியே நாலு இடங்களில் சுற்றி வந்து ரிலாக்ஸ் செய்துகொள்கிறார். நான் இந்த நாலு சுவர்களுக்குள் அடைப்பட்டு நரகத்தைத்தானே அனுபவிக்கிறேன்.. வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறேன்.. சீக்கிரம் சாவு வரக்கூடாதா என நானும்தான் உன்னிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.. என் நிலையை வேறு யாரிடம் போய்ச் சொல்வது என புலம்புகிறாய்.

இது உன்னுடைய அலட்சியப் போக்கு.. அடி.. அப்பாவிப் பெண்ணே! இந்த வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழவேண்டும் என்பதற்காக உனக்கு என்னால் தரப்பட்டிருக்கிறது. கஷ்ட நஷ்டங்களும், இன்ப துன்பங்களும் இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கி, கணவன் – மனைவி என்கிற பந்தத்தை மிக நெருக்கமாக்குவதற்காக வருகின்றன.

அனைத்தையும் யோசித்துச் செயல்பட்டால்தான் வாழ்க்கை என்பது இனிமையாக இருக்கும். நீயோ, அவனோ நிரந்தரமாகப் பிரிந்துபோவதால் என்ன லாபம்? யாருக்கு லாபம்? ஆகவே, ஒருவரை ஒருவர் நேசித்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு நல்ல முறையில் வாழுங்கள்..

உன் போல் கணவனால் அல்லாமல் கணவனை இழந்து பிள்ளையால் அவதிப்படுகிற பெண் என்னிடம், அப்பா, என் பிள்ளை கொடுமைப்படுத்துகிறான்.. என்னை நிம்மதியாக வாழவிட மாட்டேன் என்கிறான். அவனோடு வாழ்வது என்பது தினம் தினம் நரகமாக இருக்கிறது. எவ்வளவோ அன்பு செலுத்திப் பார்த்து விட்டேன், இருப்பதையெல்லாம் கொடுத்தும் பார்த்துவிட்டேன்.. அவன் திருந்தவேயில்லை. நாளுக்கு நாள் அவனது கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. எதையும் புரிந்துகொள்ளவே மறுக்கிறான்.. மிருகம் மாதிரி நடந்துகொள்கிறான், நான் என்ன செய்யட்டும்? எனக் கேட்கிறாள்.

அவளுக்கும் நான் சொல்வது… உனது குழந்தை ஆரம்பத்தில் தவறு செய்யும்போது பார்த்து ரசித்து மகிழ்ந்த நீ, அவன் வளர வளர சூழ்நிலைகள் அவனை இந்த அளவுக்குக் கொண்டு வந்தபிறகு, தாங்க முடியாமல் கதறுகிறாய். முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டாய். எந்தப்பலனும் கிடைக்கவில்லை. இனி அவனை விட்டு ஒதுங்கியிரு. அல்லது ஒதுங்கிப் போக வை. அது எப்படி என்னால் முடியும் என்றால், அவன் செய்வது அனைத்தையும் சகித்துக் கொள். உனது அன்பை அவனுக்குப் புரிய வை.. நிறைய நேரம் பேசு.. அவன் திருந்த வாய்ப்பு கொடு… என்று தான் சொல்வேன்.

கணவனோ, பிள்ளையோ நமது கட்டுப்பாட்டில் இருக்கும்வரைதான் நமக்கு அடங்கி நல்லவர்களாக வாழமுடியும். கட்டுப்பாட்டை விட்டுவிட்டால் விரைவில் கெட்டுப் போய்விடுவார்கள்.

பிள்ளையையும், கணவனையும் கட்டுப்பாட்டில்கொண்டு வர பெரிய முயற்சி எடுக்கவேண்டும். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களோடு நிறைய நேரத்தை செலவு செய்யவேண்டும். ஆதரவாகப் பேசவேண்டும். அவர்களதுமற்ற பழக்க வழக்கங்கள் ஒழிந்துபோகுமாறு மறைமுகவாகவோ, நேரடியாகவோ தடைபோட வேண்டும்.

என்னப்பா, பயமுறுத்திவிட்டீர்கள்? என என்னை நொந்துகொள்ளாதே- எச்சரிக்கை செய்யவே இதை நான் எழுதவேண்டியதாயிற்று.

அடுத்து, உன் பிள்ளைகளுக்கு வெகு சீக்கிரம் நீ எதிர்பார்த்த மாதிரி அனைத்தும் நடக்கவுள்ளது. அதையெல்லாம் நான் முன்னின்று பார்த்துக்கொள்கிறேன்.. நீ பார்த்துச் செயல்பட வேண்டியதெல்லாம் உனது கணவனுக்கானதாக இருக்கட்டும். அடுத்த முறை இன்னும் நிறைய பேசுகிறேன்.

அன்புடன் அப்பா

சாயிபாபா

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s