யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு!

srisai

நான் சேலத்தில் வசிக்கிறேன். எனக்கு கவிதா என்ற மனைவியும், பிரகதி மற்றும் பிரீத்தி என இரண்டு மகள்களும் உள்ளனர்.

எனது கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் நோய் வாய்ப்பட்ட நிலையில் பாபா என்னை சந்தித்து உடல் நிலையைத் தேற்றி முழுமையாகக்காப்பாற்றினார். அன்று முதல் பாபாவின் பாதங்களில் சரணாகதி அடைந்துவிட்டேன்.

வாழ்வில் தன்னம்பிக்கை இழக்கிற நேரத்தில் எல்லாம் தைரியம் தந்து, தொடர்ந்து என்னை சாயிபாபாவின் மீது தீவிர நம்பிக்கையுள்ளவனாக இருக்க வைத்துக் கொண்டிருப்பது சாயி தரிசனம் பத்திரிகை. அதிலும் ஸ்ரீ சாயியின் குரல் என்ற கட்டுரைதான்.

இன்றுவரை நான் செய்யும் தொழில் மற்றும் நான் ஈடுபடுகிற அனைத்து விக்ஷயங்களிலும் சாயிநாதரே என்னுடன் இருந்து செயல்படுகிறார், நடத்தி வருகிறார் என்பதையும் முழுமையாக நம்புகிறேன்.

எத்தனையோ அற்புதங்களை என் வாழ்க்கையில் நிகழ்த்திய பாபா, வாழ்க்கையின் திருப்பு முனையாக ஒரு அற்புதத்தை இந்த ஆண்டு ஜனவரி 14 –ல் செய்தார். இந்த அற்புதத்தை யாரும் எளிதில் பெறமுடியாத பாக்கியம் என்றே சொல்வேன்.

நீண்ட நாட்களாக எனக்குள் விநாயகர் விக்ரமூம் ஒன்றை செய்வித்து ஏதேனும் கோயிலுக்கு அளிப்பது என்ற ஓர் ஆசை இருந்து வந்தது.

இதற்காக சேலத்திலுள்ள சாயி பாபா ஆலயத்தை அணுகியபோது, இங்கே பாபாவுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது, விநாயகர் சிலை வைக்கும் எண்ணமில்லை என்று தெரிவித்து விட்டார்கள். இதனால் மனம் வருந்தினேன்.

அதே மாதம் சாயி தரிசனம் இதழில், கீரப்பாக்கத்தில் அமைகிற பாபா ஆலயத்தைச் சுற்றிலும் கோயில்களும், பள்ளி மாணவர்களுக்காகவே மாணவ ஞான கணபதியாக, அருள் பாலிக்க விநாயகரை பிரதிஷ்டை செய்வதற்கும் சாயி வரதராஜன் ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற தகவலை அறிந்தேன். அதே இதழில், மனம் இருந்தால் கோயில் கட்ட உதவுங்கள் என்ற வார்த்தையையும் கவனித்தேன். உடனே தொடர்பு கொண்டபோது,

”சதீஷ், இப்போதுதான் தங்களை தொடர்பு கொள்ள நினைத்தேன். நீங்களே தொடர்பு கொண்டு விட்டீர்கள். ஆலயம் அமைக்க உங்களிடம் உதவி கேட்க நினைத்தேன்..கீரப்பாக்கத்தில் அமைகிற கோயிலுக்கு விநாயகர் விக்கிரகத்தை வாங்கித் தந்து விடுங்கள்!” என்றார். இதுதான் சாயியின் லீலை என்பது.

எனது உடல்நலம் மற்றும், எனது நிலைமை ஆகியவற்றை முழுமையாகத்தெரிந்தவரான அவர், ”இதற்காக ரொம்ப ரிஸ்க் எடுக்கவேண்டாம், உங்களால் முடியா விட்டால் வேறு ஒருவருடன் சேர்ந்தும் இதைச் செய்து தரலாம்” என்றார்.

”எனது பட்ஜெட்டுக்குள் வருகிறதா என்று பார்க்கிறேன்” எனக் கூறினேன்.

மாணவ ஞான கணபதியின் வடிவத்தை தாளில் எடுத்துக்கொண்டு, திருமுருகன் பூண்டிக்குச் சென்றேன். சிற்பக் கலைக் கூடங்கள் பலவற்றில் விசாரித்தபோது, இந்த வடிவில் சிலை வடிக்க லட்ச ரூபாய்க்கு மேலாகும் என்பது தெரியவந்தது.

கடைசியில் ஜெயலட்சுமி சிற்பக் கலைக்கூடம் என்ற இடத்தில் கால் வைத்தபோது, அங்கு சகுனம் நன்றாக இருந்ததை உணர்ந்து உள்ளே சென்றேன். விசாரித்தபோது, எனது பட்ஜெட்டில் சிலை வடித்துத்தர ஸ்தபதி சரவணன் ஒப்புக்கொண்டார்.

2014 ஜனவரி மாதம் கீரப்பாக்கம் மலையில் பூமி பூஜை போடுவதற்கான அறிவிப்பு சாயி தரிசனம் இதழில் வெளியானது. நானும், நண்பர் வாசுதேவனும் சென்னை வந்து கலந்து கொணடோம்.

ஐயாவிடம் பேசும்போது, விநாயகர் விக்ரகத்தை இங்கு ஏற்கனவே வாங்கிவிட்டார்கள், எனவே கருங்கல்லால் ஆன சாயி பாபா விக்ரகத்தை வாங்கித்தந்தால் அதை மூலவராக வைத்து அபிஷேக, ஆரத்திக்கு வைத்துக்கொள்கிறோம் என்றார்.

நானும் உடனே ஒப்புக்கொண்டேன். இன்றே மகாபலிபுரம் சென்று விசாரித்தபிறகு சேலம் செல்லுங்கள் என்று ஐயா அறிவுறுத்தியதால், அண்ணா வாசுதேவன், நண்பர் திருப்பூர் ரவி ஆகியோர், மகாபலிபுரம் சென்றோம்.

பல சிற்பக்கூடங்களில் விசாரித்தோம். எங்கும் பாபா சிலை செய்வதில்லை என்ற பதிலே வந்தது. சிலை தயாரிக்க முடியுமா என்றபோது, ஒன்னரை லட்சம், இரண்டு லட்சம் ஆகும் என்றபோது, மனம் உடைந்துபோனது.

சென்னை திரும்பி, மயிலாப்பூர் ஆலயத்திற்கு நண்பர்களுடன் சென்றேன். எட்டரை மணியளவில் அங்கு அமர்ந்து, நான் கண்ணீருடன், பாபாவை உருக்கமாக, ”ஏன் பாபா என்னை சோதிக்கிறீர்கள்? என்னால் முடிந்த ஒரு தொகையில் உங்கள் பிரதிமை செய்துதர, எனக்கு அனுமதி தாருங்கள். இன்ன விலையில் முடிந்தால் நல்லது” என ஒரு தொகையைக் குறிப்பிட்டு வேண்டினேன்.

சேலம் வந்த பிறகு ஐயாவுக்குப் போன் செய்து மகாபலிபுரம் விவரத்தைச் சொன்னேன். எங்கள் ஸ்தபதியிடம் பேசுகிறேன் என்றவர், ஓரிரு நாட்களில், ”அவரும் இப்படித்தான் அதிக விலை கூறுகிறார், பார்க்கலாம், பொறுமையாக இருங்கள்” என்றார்.

மீண்டும் திருமுருகன் பூண்டிக்குச்சென்று விசாரிக்கக் கிளம்பினேன். இது மனித உருவமாக இருப்பதால் சிலை வடிக்க நிறைய செலவாகும் என ஸ்தபி சரவணன் கூறினார். அப்போது நான் சாய் ராம் சாய்ராம் என நாம ஜெபம் செய்தபடி, ”பாபா உன் காலடியில் எப்போதும் சரணாகதி அடைகிறேன்.. எனக்கு இந்த அரிய பாக்கியத்தைக் கொடுங்கள்” எனக் கேட்டேன்.

எனது கதறல் பாபாவின் காதுகளில் கேட்டிருக்கும் என நினைக்கிறேன். ஸ்தபதி ஒரு விலை கூறினார். அது மைலாப்பூரில் பாபாவிடம் நான் குறிப்பிட்ட தொகையைவிட நாற்பது விழுக்காடு குறைவான தொகை. சாயியின் லீலையை உணர்ந்தேன்.

இந்த விக்ஷயத்தை ஐயாவிடம் சொன்னபோது, ”சதீஷ், உங்களால் முடிந்தால் செய்யுங்கள். இல்லாவிட்டால் நான் அதற்குரிய பணம் தருகிறேன்” என்றார்.

”ஐயா, நானே செய்து தருகிறேன்” என அவருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு, நல்ல நாள் பார்த்து அவினாசி பாபா கோவிலில் வைத்து, ஸ்தபதி சரவணன் அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தேன்.

சிறிது சிறிதாக நான் பணம் கொடுத்தபோதும், அதை ஸ்தபதி பெருந்தன்மையுடன் பெற்றுக் கொண்டார். பாபா உயிரோவியமாக உருவானார்.

ஐயாவின் உத்தரவுப்படி 12-6-2014 அன்று சாய் பாபாவை அழைத்துக்கொண்டு நான், எனது மகள் பிரகதி, நண்பர்கள் வாசுதேவன், சுகுமார் ஆகியோர் டெம்போ மூலம் கீரப்பாக்கத்திற்குக் கிளம்பினோம்.

முன்னதாக, பாபாவுக்கு வழியனுப்பு பூஜை ஒன்று சிற்பியின் கலைக்கூடத்தில் நடந்தது. அந்த கலைக்கூட தொழிலாளர்கள் பாபாவை வண்டியில் ஏற்றும்போது, நானும் சுகுமாரும் பாபாவைப் பார்த்து சிலிர்த்துப்போனோம்.

சிலையாக இருந்த பாபாவின் இதழ்களில் அற்புதமான சிரிப்பு வெளிப்பட்டது. பாபா சொந்த இடத்திற்குப் புறப்படும் மனநிலையில் இருக்கிறார். இந்த விக்ரகத்தில் உயிரோட்டம் உள்ளது என பேசிக்கொண்டோம்.

பிறகு அவினாசி பாபா ஆலயத்திற்கு பாபாவை அழைத்துச் சென்றோம். பூசாரி எங்களுக்காகக் காத்திருந்து பாபாவுக்கு பூஜை செய்தார். பக்தர்கள் திரளாக வந்திருந்து பாபாவை நமஸ்கரித்து, ஆரத்தி செய்து அன்புடன் வழியனுப்பினார்கள்.

அன்பொழுக பாபாவிடம் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது மனம் உருகியது. பாபா அவினாசியில் இருந்தே அருள்பாலிக்க ஆரம்பித்து விட்டார் என உள் மனம் சொல்ல ஆரம்பித்து விட்டது.

எங்கள் திட்டப்படி சேலத்தில் எனது வீட்டில் வைத்து ஓர் ஆரத்தி செய்து அதன் பிறகு கீரப்பாக்கம் செல்ல நினைத்தோம். அதிக எடையாக இருந்த காரணத்தால் கீழே இறக்கமுடியவில்லை. டெம்போவில் வைத்தே பூஜை செய்தோம். சுமார் அறுபது பக்தர்கள் கலந்துகொண்டார்கள். வந்தவர்களுக்கு வயிறார அன்னதானப் பிரசாதம் செய்யப்பட்டது.

அன்று முழு பவுர்ணமி நாள். இந்த விழா எனது வீட்டில் நடக்கும் என நினைத்துக்கூட பார்க்க வில்லை. பாபா அதை அற்புதமாக நடத்தினார். வெளியூருக்குப் படிக்கச் செல்லும் பிள்ளையை அனுப்பும் மனநிலையில் இருந்தோம்.

12-6-2014 அன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் சேலத்திலிருந்து விடைபெற்றார் பாபா.

சேலம் கலைக்கல்லு}ரி அருகே வண்டி நிறுத்தப்பட்டு, எனது அண்ணார் சக்தி வேல் மற்றும் உறவுக்காரர்கள் ஆகியோர் குடும்பம் குடும்பமாக நமது பாபாவை வணங்கி அருள் பெற்றார்கள். இந்த கருப்பு பாபாவை கண்குளிர ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். சில நிமிட நேரம் அங்கே தரிசனம் தந்த பாபா ஆத்தூர் வழியாக பதினொன்னரை மணியளவில் வந்தார். அப்போதும் பக்தர்கள் அவரை தரிசித்து மெய்சிலிர்த்தார்கள். இப்போதே பாபா செயல்பட ஆரம்பித்து விட்டதை உணர்ந்தேன்.

எனக்கும் வாசுதேவன் அண்ணா, நண்பர் சுகுமார் ஆகியோருக்கும் பாபாவுடன் வந்த ஓர் இரவு முழுவதும் இனிமையான இரவு. பாபாவின் முகத்தில் அப்படியொரு பிரகாசம் மற்றும் மகிழ்ச்சி மிலிர்ந்தது.

இதை அனுபவித்த மகிழ்ச்சி எங்கள் மூவருக்கும். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இப்போது கிடைத்த உணர்வுகள் மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அத்தகைய உணர்வுடன் வந்தோம்.

ஐயாவும், ஆறுமுகம் அண்ணா, கார்த்திக் ஆகியோர் வந்து எங்கள் வருகைக்காக ஊரப்பாக்கத்தில் காத்திருந்தார்கள். சென்னையை அடைந்தவுடன் அவர்கள் வழிகாட்டியபடி முன்னே செல்ல, எங்கள் டெம்போ அவர்களைப் பின்தொடர்ந்தது.

அப்போது வழியில் ஓர் அற்புதமும் நடந்தது. திடீரென டிரைவர் பிரேக்போட்டார். என்ன வெனக்கேட்டபடி முன்னே பார்த்தேன். சாலையைக்கடந்துகொண்டிருந்த நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கிக் கொண்டு நின்று, பிறகு நகர்ந்து சென்றது. டிரைவர் பக்கத்திலிருந்த பாபா படம் கீழே விழுந்தது.

ஒருநாள் முழுக்க உங்களோடு வருகிறேன். ஆனால் இப்போதுதான் எனக்கு முதன்முதலாக பயம் கலந்த பக்தி ஏற்பட்டிருக்கிறது என்றார் டிரைவர். எனக்கும் மெய் சிலிர்த்தது.

எனது இந்தக் குழந்தையை ஐயா, கண்டிகையில் வைக்கப் போகிறார் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் 13-7-14 அன்று கொத்துமலையில்தான் வைக்கப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டு என் மனம் மகிழ்ச்சியால் துள்ளியது.

13-6-14 அன்று பாபா கொத்துமலையில் கால் பதித்தார். என் மனம் குளிர்ந்தது. நம் பாபாவே இவ்விடத்தில் அமர்ந்து, மலை உச்சியில் 130 அடி உயர பாபாவை அமர வைப்பதும், மற்ற தேவர்களை வரவழைப்பதுமான பணியை மேற்கொள்ளப்போகிறார். அவர் மிக வேகமாக ஜெhலிக்கப் போகிறார். கீரப்பாக்கமும், கீரப்பாக்கம் மக்களும் வளரப் போகின்றனர். இது என் கண் முன் தோன்றியது. இது நடக்கும், இது பாபாவின் மொழி.

13-6-14 அன்று கொத்துமலையில் வண்டியில் இருந்து பாபாவை அங்கிருந்த சுமார் பதினைந்து பேர் சேர்ந்து இறக்கிவைக்க, செய்த முயற்சி என் நெஞ்சை பதறவைத்தது. பாபாவின் விக்ரகம் எடை அதிகமாக இருந்ததால், ஆறுமுகம் அண்ணார் மற்றும் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பிளான் போட்டார்கள். அதன்படி நான்கு கட்டைகள் மூலம் அழகாக தொட்டில் மாதிரி செய்து பாபாவை வண்டியிலிருந்து இறக்கி, அப்படியே அவரது அறைக்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு கோணி ஆசனத்தில் பாபா அமர்ந்தார்.

பக்தர்கள் சாய் ராம், சாய் ராம் என முழக்கமிட்ட கோக்ஷம் விண்ணைப் பிளந்தது. அப்போதும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. இதை அண்ணார் வாசுதேவன் அவர்கள் தான் முதலில் பார்த்தார்.

பாபாவின் நெஞ்சுப் பகுதியில் மணி மணியாய் வியர்வைத் துளிகள். அதை ஐயா சாயி வரத ராஜனிடம் காண்பிக்க, இதை நீங்களே உங்கள் கைகளால் துடைத்துவிடுங்கள் எனக் கூறினார். இது வாசுவுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரும் பாக்கியம்.

கற்சிலையிலும் வியர்க்குமா என நினைப்பவர்கள் இந்த அற்புதத்தைக் கண்டிருந்தால் பாபா, சிலையிலும் உயிரோடு இருப்பதை உணர்ந்திருப்பார்கள். நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்.

திருமுருகன் பூண்டி முதல் கீரப்பாக்கம் வரை நடந்த அற்புதங்களை நினைத்துப் பார்த்தேன். பாபா ஓர் உயிரோட்டமாக அமர்ந்திருப்பதை நினைத்து உள்ளம் உருகினேன்.

ஜூன் மாதம் ஐயாவிடமிருந்து தகவல் வந்தது. ஜூலை பதி்ன்று அன்று பாபாவுக்கு பிரதிஷ்டை விழா என்று. ஆனால் ஐயா இவ்விழாவுக்கு அழைப்பிதழ் எதையும் அனுப்பவில்லை. யாருக்கும் அவர் அழைப்பிதழ் அளிக்கவில்லை என்பது பிறகு தான் தெரிந்தது.

சேலத்திலிருந்து குடும்ப சகிதமாகக் கிளம்ப ஆயத்தமானோம். சேலம் சாய்பாபா கோயிலுக்கு 10-7-14 அன்று சென்றிருந்தபோது, கடையில் ஜூலை மாத சாயி தரிசனம் புத்தகம் இருந்தது. அட்டைப்படம் என்னை அருகில் அழைத்தது.

பார்த்தால் கீரப்பாக்கம் பாபா. உள்ளே பிரதிஷ்டை, தேதி, நேரம் எல்லாம் அழைப்பிதழுடன் இருந்தது. ஆவலுடன் அன்றே அதைப் படிக்க ஆரம்பித்தேன்.

அந்த இதழில் கீரப்பாக்கம் பாபா வரலாற்றுப்பகுதியில், ஐயா பின்வருமாறு எழுதியிருந்தார்.

”நான்கு நாட்கள் கழித்து நான் பார்க்கும்போது, பாபா கோணியில் அமர்ந்த விதம், முதன் முதலாக பாபா சீரடியில் கோணியின் மேல் அமர்ந்திருந்ததை எனக்கு நினைவூட்டியது” என்று. இதைப் படித்ததும் என்னையும் மீறிய பூரிப்புடன் கண்கள் கலங்கின.

அடுத்த வரியில், ”சேலத்திலிருந்து ஒரு பெரியவர் வந்து, கீரப்பாக்கத்தில் இன்னும் இருபது நாட்களில் ஒரு பெரிய சக்தி மக்களுக்கு அருள்பாலிக்கப் போகிறது” என்ற தகவலும் என்னை பூரிக்கச் செய்தது.

சேலத்துப் பெரியவராக பாபாவே சென்று இந்த ஆசியை வழங்கியிருக்கிறார் என்று நம்பினேன்.

சேலத்து மக்களுக்கும், கீரப்பாக்கம் மக்களுக்கும் பாபாவின் பலத்த அருள் உள்ளதே என வியந்தேன்.

12-7-14 அன்று மாலை கீரப்பாக்கம் வந்து மலை ஏறும்போது வழியிலேயே ஒரு மசூதி புதிதாகக் கட்டுப்படுவதைப் பார்த்தேன். பாபாவுக்காகவே ஒரு மசூதி உருவாகியுள்ளது போலிருந்தது. கீரப்பாக்கம் கிராமம் பாக்கியம் அடைவதை நான் உணர்ந்தேன்.

அன்றிரவு ஸ்தபதி சரவணன், பாபாவுக்கு கண் திறப்பு பூஜை செய்து, மக்களை திறந்த விழிகளால் பாபா காணச் செய்தார். ஐயா செய்த பூஜைகள் சிறப்பாக இருந்தன.

13-7-14 அன்று பாபா கும்ப அபிஷேகத்தை ஏற்று, அதிகாரப்பூர்வமாக ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக்கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தோம்.

இந்த வாய்ப்பைக் கொடுத்த ஐயாவுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையால் நன்றி செலுத்த முடியாது. ஜென்ம ஜென்மமாய் எனது பாபா அங்கிருப்பார். அவர்தான் மக்களை வழி நடத்துவார், பல அற்புதங்களை என் இறைவனான அவர் செய்து உலகைக் காப்பார் என்ற நிறைவு நெஞ்சுக்கள் நிறைவாக இருக்கிறது.

பாபாவை யார் பெற்றார்களோ யாருக்கும் தெரியாது. கீரப்பாக்கத்தைப் பொறுத்தவரை, கால காலமாய் அரசாளும் என் குருவாகிய அவரை நான் பெற்றிருக்கிறேன், இந்த பாக்கியத்தை என்றென்றும் மறக்கவே முடியாது.

ஆர். சதீஷ்

சேலம்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s