எட்டு நாட்களில் வேண்டுதல் பலித்தது!

 

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கிறேன்.  சிறுவயது முதல் சபரிமலைக்குச் செல்லும் பழக்கம் உடையவன். கடந்த பதினெட்டு வருடமாக தொடர்ந்து சென்று வருகிறேன். என்னுடைய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறியதில்லை. அதே சமயம் மிகப் பெரிய கஷ்டங்களில் இருந்து தப்பி இருக்கிறேன். அந்த நேரங்களில் நான், ‘ஏதோ கடவுள் அருள் சிறிதாவது நமக்குள்ளது. ஆகையால்தான் இன்று நாம் நடமாடிக்கொண்டிருக்கிறோம்’ என்று நினைப்பேன்.
எனக்குத் திருமணம் 2005 ல் நடைபெற்றது. கடன் வாங்கித்தான் திருமணம் செய்துகொண்டேன். 2006-ல் என் தந்தை பக்கவாதத்திலும், நெஞ்சு வலியாலும் அவதிப்பட்டார். வீட்டில் இருந்த நகைகளெல்லாம் அடகு வைத்து அவரது மருத்துவச்செலவினை கவனித்தேன்.
சில மாதங்களுக்குப் பிறகு வேறு வழியின்றி வெளியே கடன் வாங்க ஆரம்பித்தேன். கடன் எட்டு லட்சமாக் உயர்ந்தது.
கடனுக்கு வட்டி கட்டி போக சாப்பாட்டிற்க்கும் வழியில்லாமல் போனது. இந்த நிலையில் எனது மைத்துனர் ஒருமுறை என்னிடம் ‘நீங்கள் மைலாப்பூரிலுள்ள பாபா கோயிலுக்கு ஒருமுறை போய் வாருங்கள்’ என்றார்.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த எனக்கு, அங்கு சென்று பாபாவை பார்த்தவுடன் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதேன். அங்கு உள்ள “நான் இங்கிருக்கும் போது ஏன் பயப்படுகிறாய்? நம்பிக்கை, பொறுமை’ என்ற வாசகங்கள் எனக்குள் ஒரு மாற்றத்தினை உருவாக்கின.
அதன் பின்னர் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பித்தேன். அங்குதான் சாயிதரிசனம் புத்தகம் வாங்கினேன். அதில் இருந்த விசயங்கள் என்னுள் பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தின.
சில மாதங்கள் கழித்து பெரிய அளவில் இருந்த கடன்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தேன். எல்லா கிரிடிட் கார்டுகளையும் சரண்டர் செய்தேன்.
வாரம் தவறாமல் பாபா கோயிலுக்குப் போனேன். மாதம் தவறாமல் சாயி தரிசனம் புத்தகம் வாங்கினேன். எனது பல கேள்விகளுக்கு அதில் பதில் கிடைத்தது. என் ஆன்மீகம் தொடர்பான பல சந்தேகங்களுக்கும் அதில் தெளிவு கிடைத்தது. எப்படி பக்தி செலுத்துவது என்று கூட கற்றுத் தந்தது.  சாயி தரிசனம் ஊட்டிய பக்தியால் மேலும் மேலும் பாபாவினை நெருங்க ஆரம்பித்தேன். அதனால் மிகுதியான பலன்களை பெற்றேன்.
என் வீட்டில் பாபா படம் உள்ளது, பாபா நீங்கள் எனது வீட்டிற்க்கு சிலையாகவாவது வரவேண்டும், நானாக பணம் கொடுத்து வாங்கமாட்டேன் என்று மனதில் வேண்டுதல் வைத்தேன்…
 
அதன் பிறகு பலமுறை பாபா கோயில் செல்லும் போதெல்லாம், என் மனைவி பாபா சிலையினை பார்த்து அவர் அழகில் வியக்கும் போதெல்லாம் நான் அந்த இடத்தினை விட்டு நகர்ந்து விடுவேன். எனது வேண்டுதல் பற்றி எனது மனைவிக்கு தெரியாது. இப்படியே பதினெட்டு மாதங்கள் நகர்ந்தன.
 
ஒரு முறை தத்தாத்ரேயர் பற்றிய படம் ஒன்றினை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது பாட்டி ஊரிலிருந்து வந்தார். அவர் காசி, கயா தீர்த்த யாத்திரைக்கு சென்றி திரும்பியதாக தெரிவித்து பிரசாதங்களை அளித்தார். அந்த பிரசாதங்களுடன் ஒரு சிறிய பாபா சிலை ஒன்றும் இருந்தது என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
அதனை பெற்றுக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்த நான் எனது பல நாள் வேண்டுதலைச் சொன்னேன். அப்போதுதான் எனது மனைவிக்கே எனது வேண்டுதலும், நான் சிலையை காசு கொடுத்து வாங்க மறுத்த காரணமும் தெரிந்தது. அந்த சிலையினை பூஜித்து வருகிறேன்.
சில மாதங்களுக்குப் பிறகு எனது வருமானம் குறைய ஆரம்பித்தது. செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறினாலும், பாபா கோயிலுக்குச் செல்வதை மட்டும் நிறுத்தவில்லை.,
சாயி தரிசனம் பத்திரிகையொன்றில் ஒரு பக்தர் எட்டு நாட்களில் ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் ஒன்றினை பாபாவிடம் வைத்ததாகவும் அது அவருக்கு பலித்தது என்றும் படித்தேன். சாயியிடம் வேண்டுதல் வைத்த பிறகு அது சாயியின் பிரச்சனை என்று விட்டு விட வேண்டும், பாபாவே அதனை சரி செய்வார் என்றும் இருந்தது.
சீரடியிலிருந்து உதி எனக்கு எட்டு நாட்களில் வரவேண்டும், நானாக யாரிடமும் உதி கேட்கமாட்டேன் என்று வேண்டுதலினை பாபாவிடம் வைத்தேன்.
பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் சென்றேன். சாயி தரிசனம் சொல்வதைப்போல பூ பழம் எடுத்துச் செல்லாமல் எனது பிரச்சனைகளை மட்டும் எடுத்துச் சென்றேன். பாபாவின் கண்களில் இருந்த காந்த சக்தியின் முன் எனது பிரச்சனைகளை சொல்ல திணறினேன்.  வெட்கப்பட்டு எனது பிரச்சனையினை எழுதியும் பாபா முன் வைக்கவில்லை. மறு நாளும் அங்கு சென்றேன். அந்த காந்த சக்தியினை என்னால் இப்போது உணர முடியவில்லை. திகைப்புடன் நின்றேன். அப்போது அங்கிருந்த ஓர் அம்மா, சாயி வரதராஜன் மேலே பிரார்த்தனையில் இருக்கிறார், செல்லுங்கள் என்று என்னை மாடிக்கு அனுப்பினார். அப்போதுதான் எனக்கு எனது வேண்டுதலின் எட்டாவது நாள் இன்று என்ற நினைவு வந்தது. பாபா எப்படி உதி தரப்போகிறார் பார்ப்போம் என்று நினைத்தபடி .மேலே சென்றேன்.
அங்கு சாயி வரதராஜன் யாரோ ஒரு குடும்பத்தினருக்கு பிரசாதங்களைத் தந்து கொண்டிருந்தார்.  நான் மாடியில் அனுமனையும் சாயியினையும் வணங்கினேன். அப்போது சாயி வரதராஜன் அவர்கள் என்னை ஜாடை காட்டி அழைத்து அங்கு அமரச்சொன்னார். உதியினைத் தந்து ‘இது சீரடி உதி, வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றார்.
பிரார்த்தனை செய்த எட்டாவது நாளில் பாபா அருள் எனக்குக் கிடைத்தது.  ‘இனி எல்லாம் உங்களைத் தேடி வரும், கவலைப்பட வேண்டாம்’ என்று சாயி வரதராஜன் அவர்கள் சொன்னார். சிலருக்கு இது சாதாரணமாகத் தெரியும்.  ஆனால் எனக்கு இவை மிக மிகப் பெரியவை.
வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்ததால் கிளம்ப எழுந்தேன். அப்போது அவர் அமருங்கள், பிரார்த்தனை முடிந்த பிறகு சென்றால் போதும் என்று சொல்லி உட்கார வைத்துவிட்டார். பிறகு என்னை கூப்பிட்டு என்ன பிரச்சனை என்று கேட்டு அதற்காக பிரார்த்தனை செய்து உதி அளித்தார்.
அடுத்த வாரத்தில் எனக்கு போன் மூலம் வேறு வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். அதன் பிறகு வாரம் இரு முறையாவது பெருங்களத்தூர் பிரார்த்தனை மையம் வந்து விடுவேன். எனது முதல் மாத சம்பளத்தில் ரூ 2400 கொடுத்தேன். சீரடி செல்ல வேண்டும் என்றால் இவருடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து பணம் கட்டி காத்திருந்து, அவருடன் சீரடி சென்றேன்.
பாபா வாழ்ந்த இடங்கள் அனைத்தையும் தரிசித்தேன். சமாதி மந்திரில் என் மேல் விழுந்த மலரினையும், குருஸ்தான் போனபோது கிடைத்த வேப்பிலையினையும்  துவாரகமாயி சென்றபோது கிடைத்த தேங்காயினையும் எனது பூஜையறையில் வைத்திருக்கிறேன்.
ஜெய் சாயிராம்!
                        ஆர்.எம்.வேலு, வண்ணாரப்பேட்டை, சென்னை.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s