சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 7

சீரடி சாய்பாபா  ஒரு அற்புத மகான் – பாகம் 7
தேனி. எம். சுப்பிரமணி

(முதல் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(இரண்டாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(மூன்றாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(நான்காம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
(ஐந்தாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு  சொடுக்கவும்)
(ஆறாம் பகுதியினை படிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்)
            உண்மைப் பொருள்களைப் பகுத்துணரும் விவேகம், நிலையற்ற பொருட்களின் மேல் பற்றின்மை போன்ற தத்துவத்தை தனது தட்சிணை, உதி ஆகியவற்றின் வழியாக அவர் தெளிவாகவே அறிவுறுத்தினார். தட்சணையை அவர் கேட்டுப் பெற்றார். உதியை அதற்குப் பதிலாகத் திருப்பி அளித்தார். அதாவது தட்சணை மூலம் இவ்வுலகத்தின் மேல் பற்றின்மையையும், உதி மூலம் உண்மையை உணர்ந்து கொள்ளவும் வழிகாட்டினார். 

                          உலகத்தின் உறவுகளிடம் பற்று கொண்ட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இறைவனை அடைய வழிகாட்டிய சாயிபாபா, சீரடிக்கு வரும் போது தன்னுடன் கொண்டு வந்த செங்கல்லை மட்டும் மசூதியில் பாதுகாப்பாக வைத்திருந்தார். மசூதியில் இரவு நேரத்தில் அந்த செங்கல் மீது சாய்ந்து கொண்டுதான் இருக்கையில் அமர்வார். அவர் இதை பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டிருந்தார். 
            ஒரு நாள் சாயிபாபா இல்லாத நேரத்தில், தரையைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு பையன் அந்த செங்கல்லைத் தன் கையில் எடுத்தான். அது அவனிடமிருந்து கை தவறிக் கீழே விழுந்து இரண்டாக உடைந்தது. இதை சாயிபாபா அறிந்ததும், அந்த செங்கல்லின் இழப்பு குறித்து பெரிதும் கவலை கொண்டார்.

 

                            இன்று உடைந்தது சாதாரண செங்கலல்ல. எனது விதியே துண்டுகளாக உடைந்து விட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் துணையுடன் நான் எப்போதும் ஆன்மத் தியானம் செய்தேன். அது என் உயிரைப் போன்று பிரியமானது. இன்று அது என்னை விட்டு நீங்கிவிட்டது என்று புலம்பி அழுதார். ஒரு ஜடப்பொருளான செங்கல்லுக்கு சாயிபாபா ஏன் இவ்வளவு வருத்தம் கொள்கிறார் என்று சிலர் நினைத்துக் கொண்டனர். ஆனால் அவரிடம் யாரும் இது குறித்துக் கேட்டுக் கொள்ளவில்லை. 

 

                                    மனிதனாகப் பிறந்தவன் இறக்கும் நிலையில் அவன் மனதை இந்த உலக விசயங்களிலிருந்து மீட்டு ஆன்மிக விசயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் மத சம்பந்தமான நூல்கள் பாராயணம் செய்யப்படுவது இந்து சமயத்தினரிடையே வழக்கத்திலிருக்கும் ஒன்று. கடவுளின் அவதாரமாக இருந்த சாயிபாபாவிற்கு இது தேவையற்றது எனினும் மக்களுக்கு வழிகாட்டும் விதமாக இவ்வழக்கத்தை அவரும் பின்பற்றினார். தாம் விரைவில் மரணமடையப் போகிறோம் என்பதை உணர்ந்து, வஜே என்பவரை அழைத்து, தம் முன்பு ராம விஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார். 

 

                                   வஜே முதலில் வாரம் ஒருமுறை அதைப் படித்தார். பின்னர் இரவும், பகலும் அதையே படிக்கும்படி சொன்னார். அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார். இப்படி பதினொன்று நாட்கள் சென்றன. பின்னர் மூன்று நாட்கள் படித்தார். ஆனால் வஜே மிகவும் களைப்பு அடைந்து விட்டார். அதன் பிறகு சாயிபாபா அவரைப் போகச் சொல்லி விட்டார். அதன்பிறகு ஆத்ம போதத்தில் மூழ்கியவராய் தன் மரணத்தை எதிர் கொண்டார். அன்றிலிருந்து தனது காலை சஞ்சாரத்தையும், பிச்சை பெற்று வரும் நியமத்தையும் நிறுத்தி மசூதியிலேயே தங்கி விட்டார். அந்த சமயத்தில், அவருடைய பக்தர்களில் சிலர் அவருடனேயே இருந்தனர்.

 

                                   1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் மகான் சாயிபாபா இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். சாயிபாபா மறைவுச் செய்தி சீரடி மக்களையும் அவர் மேல் அன்பும் பக்தியும் கொண்டிருந்த பகதர்களையும் வருத்தத்திற்குள்ளாக்கியது. இந்நிலையில் சாயிபாபாவின் உடலை எப்படி அடக்கம் செய்வது? என்ற கேள்வி எழுந்தது. சிலர் சாயிபாபாவின் உடலை திறந்த வெளியில் அடக்கம் செய்து அதன் மேல் சமாதி கட்ட வேண்டும் என்றனர். சிலர் வாதாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் அடக்கம் செய்யக் கூடாது என்றனர். இந்தக் கருத்து வேறுபாடு முப்பத்தாறு மணி நேரம் தொடர்ந்து நீடித்தது. இறுதியாக வாதாவில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் உடல் வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய இறுதிச் சடங்குகள் அனைத்தும் பாலாசாஹேப் பாடே மற்றும் சாயிபாபாவின் மேல் அதிகமான பற்றுடைய அவருடைய பக்தர்களில் ஒருவரான உபாசினி ஆகியோராலும் செய்யப்பட்டது. 

 

                               சாயிபாபாவை இந்துக்களும், இசுலாமியரும் அற்புத மகானாகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது. 


                              சாயிபாபா நோய் தீர்க்கும் அற்புதங்களை நிகழ்த்தினார். குழந்தையில்லாத பலருக்கும் குழந்தை கிடைக்க அருளினார் என்றும்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு செய்த பல வகையான அற்புதங்கள் கணக்கிலடங்காதவை. இவையனைத்தும் சாயி அற்புதங்கள் (சாயிலீலைகள்) என்று இன்றும் போற்றப்படுகின்றன. அவர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டாலும், தன்னிடம் (சீரடி) தேடி வருபவர்களுக்கு இன்றும் அவர் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி வருகிறார்.
             ஜெய் சாயிராம்!
(நிறைவு)
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s