பாபாவும், விஜயதசமியும்

            பாபாவுக்கு 1918 செப்டம்பர் 28ம் திகதி லேசான ஜூரம் கண்டது.  ஜூரம் இரண்டு, மூன்று நாட்கள் இருந்தது.  பின்னர் பாபா உணவு சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டார்.  அதனால் நாளுக்கு நாள் பலவீனமானார்.  17வது நாளன்று அதாவது 1918ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி மாலை சுமார் 2:30 மணிக்கு பாபா தமது பூத உடலை நீத்தார்.  விவரங்களுக்கு தாதா சாஹேப் கபர்டேவுக்கு பேராசிரியர் நார்கேயின் 1918 நவம்பர் 5ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் சாயிலீலா சஞ்சிகையில் (முதல் வருடம், பக்கம் 78) பார்க்க.  இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1916ல் பாபா, தாம் இயற்கை எய்துவதைப் பற்றிய குறிப்பு ஒன்றைக் கொடுத்தார்.  ஆனால் அதை அவர்கள் அப்போது புரிந்து கொள்ளவில்லை.  அது பின்வருமாறு:
 
  “விஜயதசமியன்று (தசரா) மாலையில் மக்கள் ஷிமோலங்கணிலிருந்து (ஷிமோலங்கண் என்பது கிராம எல்லையைத் தாண்டுதல்) திரும்பிவரும்போது பாபா திடீரென்று கோபாவேசமடைந்து தமது தலையணி, கஃப்னி லங்கோடு முதலியவைகளை எல்லாம் கழற்றி அவைகளைக் கிழித்து அவருக்கு முன்னால் உள்ள துனியில் எறிந்தார்.  இந்தச் சமர்ப்பணத்தை உண்டு துனியிலுள்ள தீ, மிக்க ஒளியுடன் எரிந்து பிரகாசிக்கத் தொடங்கியது.  பாபா முற்றிலும் நிர்வாணமான நிலையில் அங்கு நின்றார்.  நெருப்பைப்போன்ற சிவந்த கண்களுடன் எல்லோரையும் நோக்கி, “ஓ! பேர்வழிகளே, இப்போது என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்து, நான் ஒரு இந்துவா அல்லது முஸ்லீமா என்பதைத் தீர்மானியுங்கள்” என்று உரக்கக் கூறினார்.  எல்லோரும் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தனர்.  ஒருவருக்கும் பாபாவிடம் நெருங்கத் தைரியமில்லை.

 

              கொஞ்ச நேரத்திற்குப்பின் பாபாவின் தொழுநோய் அடியவரான பாகோஜி ஷிண்டே தைரியத்துடன் அருகில் சென்று லங்கோடை கட்டிவிடும் முயற்சியில் வெற்றிபெற்றார்.  “பாபா என்ன இதெல்லாம்.  இன்றைக்கு ஷிமொலங்கண் – தசரா விடுமுறை” என்றார்.  பாபா தமது சட்காவைத் தரையில் அடித்து, “இது என்னுடையஷிமொலங்கண் என்றார்.  இரவு பதினோரு மணிவரை சாந்தமடையவில்லை.  அன்றிரவு சாவடி ஊர்வலம் நடக்குமா என்று அனைவரும் ஐயம் அடைந்தனர்.

 

 
         ஒரு மணி நேரத்திற்குப்பின் பாபா தமது சாதாரண நிலைக்குத் திரும்பினார்.  வழக்கம்போல் உடையணிந்துகொண்டு முன்னமே விளக்கப்பட்டவிதமாக சாவடி ஊர்வலத்தில் பங்குகொண்டார்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் தசராவே தமது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்ற கருத்தை அவர் தெரிவித்தார்.  ஆனால் ஒருவரும் அதன் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை.  மற்றுமொரு குறிப்பாலும் பாபா இதனை உணர்த்தினார்.  அது பின்வருமாறு.
 
ராமச்சந்திர, தாத்யா பாடீல்களின் மரணத்தைத் தவிர்த்தல் 
 
          இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் ராமச்சந்திர பாடீலுக்குத் தீவிரமான காய்ச்சல் கண்டது.  அவர் பெரிதும் துன்பமடைந்தார்.  அவர் எல்லாவித சிகிச்சைகளையும் கையாண்டு, குணமேதும் காணாமல் தமது வாழ்வில் வெறுப்படைந்து கடைசி வினாடிக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.  பின்னர் ஒருநாள் நள்ளிரவு பாபா திடீரென்று அவரது தலையணைக்கருகில் நின்றார்.

 

 
      பாடீல் பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, “வாழ்க்கையின் எல்லாவித நம்பிக்கைகளையும் நான் இழந்துவிட்டேன்.  நான் எப்போது சாவேன் என்று எனக்கு உறுதியாகக் கூறுங்கள்” என்றார்.  கருணையுள்ள பாபா, “கவலைப்படாதே, உனது ஹண்டி (மரண ஓலை) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.  நீ விரைவில் குணம் ஆவாய்.  ஆனால் தாத்யா பாடீலைக் குறித்து நான் கவலைப்படுகிறேன்.  அவன் சக வருடம் 1840ல் (1918) விஜயதசமியன்று மரணமடைவான்.  யாருக்கும் இதை வெளியிட்டுவிடாதே.  அவனுக்கும் இதைச் சொல்லாதே.  ஏனென்றால் அவன் பயங்கரமான அளவுக்குப் பீதியடைவான்” என்றார்.

 

 
       ராமச்சந்திர தாதா சுகமடைந்தார்.  ஆனால் தாத்யாவின் வாழ்வைப்பற்றி அவர் நடுக்கமுற்றார்.  ஏனெனில் பாபாவின் மொழிகள் மாற்ற இயலாதவை என்பதாலும், இரண்டாண்டுகளில் தாத்யா மரணமடைவார் என்பதைக் குறித்துமே.  பாலா ஷிம்பி (தையல்காரர்) என்பவரைத் தவிர வேறொருவரிடமும் இக்குறிப்பைக் கூறாமல் இரகசியமாக வைத்திருந்தார்.  ராமச்சந்திர தாதா, பாலா ஷிம்பி என்ற இவ்விரண்டுபேர் மட்டும் தாத்யாவின் உயிரைப்பற்றி, என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு இருந்தனர்.  ராமச்சந்திர தாதா படுக்கையைவிட்டு நீங்கி நடமாடத் தொடங்கினார்.  காலம் வேகமாகச் சென்றது.  சக வருடம் 1840 (1918) புரட்டாதி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் வரத்தொடங்கியது.
 
     பாபாவின் கூற்றுப்படியே தாத்யா காய்ச்சலினால் படுத்த படுக்கையானார்.  எனவே அவரால் பாபாவின் தரிசனத்துக்கு வரமுடியவில்லை.  பாபாவுக்கும் காய்ச்சல் வந்தது.  பாபாவிடம் தாத்யாவுக்கு முழுநம்பிக்கை இருந்தது.  தாத்யாவின் காய்ச்சல் மோசமடைந்துகொண்டே வந்தது.  அவரால் அசையமுடியவில்லை.  எப்போதும் அவர் பாபாவை ஞாபகப்படுத்திக்கொண்டார்.  பாபாவின் கஷ்டமான நிலைமையும் அதே அளவு வளர்ந்தது.  முன்னால் பாபாவால் உருவாக்கபட்ட விஜயதசமி நாளும் வந்துகொண்டிருந்தது.

 

 
          ராமச்சந்திர தாதாவும், பாலா ஷிம்பியும் தாத்யாவைப் பற்றி பயங்கரமான அளவு பீதியடைந்தனர்.  பாபா முன்னுரைத்தபடி தாத்யாவின் முடிவு வந்துவிட்டது என்று அவர்கள் எண்ணி, அவர்கள் உடல் நடுங்கி வியர்த்தது.  விஜயதசமியும் மலர்ந்தது.  தாத்யாவின் நாடி மிகமெதுவாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது.  விரைவில் அவர் மரணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ஒரு வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது.  தாத்யா பிழைத்துக்கொண்டார்.  அவரது மரணம் தவிர்க்கப்பட்டது.  அவருக்குப் பதிலாக பாபா உடலை உகுத்தார்.  ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டதாகத் தோன்றியது.  பாபா தாத்யாவுக்காகத் தமது உயிரைக் கொடுத்தார் என்று மக்கள் கூறினர்.  அவர் அங்ஙனம் செய்தாரா?  அவரது வழிகள் அளவுக்கு அப்பாற்பட்டவையாகையால் அவருக்கு மட்டுமே தெரியும், என்றாலும் இந்நிகழ்ச்சியில் பாபா தமது மரணத்தைப் பற்றி தமது பெயருக்குப் பதில் தாத்யாவின் பெயரைப்போட்டுக் குறிப்புப் தந்தார் என்றே தோன்றுகிறது.

 

 
             அடுத்தநாள் காலை (அக்டோபர் 16) பண்டாரீபுரத்தில் தாஸ்கணுவின் கனவில் பாபா தோன்றி, “மசூதி இடிந்து விழுந்துவிட்டது.  ஷீர்டியில் எல்லா எண்ணெய்க்காரர்களும், கடைக்காரர்களும் என்னைப் பெருமளவு துயரப்படுத்தினர்.  எனவே நான் அவ்விடத்தை விட்டு நீங்கிவிட்டேன்.  நான் இதை உனக்குத் தெரிவிக்கவே இங்கு வந்தேன்.  தவுசெய்து அங்கு உடனே சென்று ‘பக்கல்’ (கதம்ப மலர்கள்) புஷ்பங்களால் என்னைப் போர்த்து” என்றார்.  தாஸ்கணு இவ்விஷயத்தைஷீர்டியிலிருந்து வந்த கடிதங்கள் மூலமாக அறிந்தார்.  எனவே அவர் ஷீர்டிக்குத் தமது சீடர்களுடன் வந்து பஜனையும், கீர்த்தனைகளும் செய்யத் தொடங்கினார். 

 

             இறைவன் நாமத்தை பாபாவின் சமாதி முன்னால் நாள் முழுவதும் பாடினார்.  ஹரி நாமத்துடன் தாமே ஒரு அழகிய பூமாலை தொடுத்து பாபாவின் சமாதி முன்னர் வைத்து பாபாவின் பெயரால் மக்களுக்கு அன்னதானமும் செய்துவைத்தார்.
 
லக்ஷ்மிபாயிக்குத் தானம் 
 
                 எல்லா இந்துக்களாலும் தசரா அல்லது விஜயதசமி மிகமிகப் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.  பாபா தமது எல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கு இந்நாளைத் தேர்ந்தெடுத்தது பொருத்தமேயாகும்.  இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் துன்புற்றார் என்றாலும் எப்போதும் அவர் உள்ளுணர்வுடன் இருந்தார்.

 

 
     கடைசித் தருணத்திற்குச் சிறிது முன்னரே எவருடைய உதவியுமின்றி நன்றாக நிமிர்ந்து அமர்ந்து காட்சியளித்தார்.  பாபாவுக்கு அபாயம் நீங்கிவிட்டதென்றும் அவர் தேறி வருகிறாரென்றும் மக்கள் நினைத்தனர்.  தாம் விரைவில் காலமாகப் போவதை அவர் அறிந்திருந்தார்.  எனவே லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தாம் ஏதும் தர்மம் செய்யவேண்டுமென்று நினைத்தார்.  

 

 
எல்லா ஜந்துக்களிலும் பாபா விஜாபித்திருத்தல் 
             இந்த லக்ஷ்மிபாய் ஷிண்டே ஒரு நல்ல வசதியுள்ள பெண்மணி.  இரவும் பகலும் அவள் மசூதியில் வேலை செய்தாள்.  பகத் மஹல்ஷாபதி, தாத்யா, லக்ஷ்மிபாய் இவர்களைத் தவிர வேறு எவரும் இரவில் மசூதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.  ஒருநாள் மாலை பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது லஷ்மிபாய் வந்து வணங்கினாள்.  பாபா அவளிடம், “ஓ! லக்ஷ்மி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்” என்றார்.  அதற்கு அவள், “பாபா சிறிதுநேரம் பொறுங்கள்.  நான் ரொட்டியுடன் வருகிறேன்” என்று கூறிக்கொண்டு சென்றாள்.  பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள்.  அவற்றை பாபாவின்முன் வைத்தாள்.  அவர் அதை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.

 

 
           அதற்கு லக்ஷ்மி, “பாபா! இது என்ன?  உங்களுக்காக நான் அவசரமாக ஓடி எனது சொந்தக் கைகளால் ரொட்டி தயாரித்தேன்.  நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துகொள்ளாமல் நாயிடம் தூக்கி எறிகிறீர்களே!  வீணாக எனக்குத் தொல்லை கொடுத்தீர்கள்?” என்றாள்.

 

            அதற்கு பாபா, “ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய். நாயின் பசியைத் தணிப்பது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம்.  நாய்க்கும் ஒரு ஆத்மா இருக்கிறது.  ஜந்துக்கள் வெவ்வேறாயிருப்பினும், சில பேசினும், சில ஊமையாயிருப்பினும் அவைகள் யாவற்றுமுடைய பசியும் ஒன்றேயாம்.  பசியாய்இருப்போர்ர்க்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்துகொள்வாயாக.  இதை ஒரு ஆதார நீதியாகக் கருது”என்று பதிலளித்தார்.  இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான்.  ஆனால், ஒரு மிகப்பெரும் ஆன்மிக உண்மையை பாபா அதன்மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார்.  தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருதலை, எவருடைய உணர்ச்சியும் துன்புறாதமுறையில் எடுத்துக்காட்டினார்.

 

 
       இத்தருணத்திலிருந்து லக்ஷ்மிபாய் அவருக்குத் தினந்தோறும் பாலையும், ரொட்டியையும் அன்புடனும் பக்தியுடனும் அளித்து வந்தாள்.  பாபா அதை ஏற்றுக்கொண்டு பசி தணியும் வரை உண்டார்.  இதில் ஒரு பகுதியை அவர் ராதாகிருஷ்ணமாயிக்கு லக்ஷ்மிபாயிடமே கொடுத்தனுப்புவார்.  அவளும் பாபாவின் மீதியான பிரசாதத்தை உவப்புடனும், மகிழ்ச்சியுடனும் உண்டாள்.  இந்த ரொட்டிக்கதையை ஒரு சம்பந்தமில்லாத விஷயமாகக் கருதக்கூடாது.  அது எங்ஙனம் சாயிபாபா எல்லா ஜீவராசிகளிடமும் வியாபித்து ஊடுருவி இருக்கிறார் என்றும், அவைகளைக் கடந்தும் இருக்கிறார் என்றும் காட்டுகிறது.  அவர் சர்வவியாபி, பிறப்பற்றவர், இறப்பற்றவர், அழிவற்றவர்.

 

 
       பாபா லக்ஷ்மிபாயின் சேவையை நினைவு கூர்ந்தார்.  அவளை எங்ஙனம் அவர் மறக்கமுடியும்?  உடம்பைவிட்டு நீங்குவதற்குமுன் தமது கையைப் பைகளில் போட்டு ஒருமுறை ஐந்து ரூபாயும், மீண்டும் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்தார்.
 
          ஒன்பது என்ற எண் 21ம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட நவவித பக்தியைப்பற்றிக் குறிப்பிடுகிறது. (இந்த நவவித பக்தியும் ஸ்ரீராமரால் சபரிக்கு உபதேசிக்கப்பட்டது.)  அல்லது ஷிமொலங்கண் நேரத்தில் அளிக்கப்பட்ட்ட தஷிணையாக இருக்கலாம்.

 

      லக்ஷ்மிபாயி ஒரு வசதியான பெண்மணி.  எனவே பாபா அவளுக்குக் குறிப்பால் உணர்த்தி, நல்ல அடியார்களுக்கு வேண்டிய ஒன்பதுவித குணங்களைச் சொல்லியிருக்கலாம்.

 

            பாகவதத்தில் 11வது காண்டத்தில், 10வது அத்தியாயத்தில் 6வது பாடலில் முதலாவது, இரண்டாவது செய்யுளில் முறையே முதல் ஐந்து குணங்களும், பின் நான்கு குணங்களும் கூறப்பட்டுள்ளன.  பாபாவும் அத்தகைய ஒழுங்கைப் பின்பற்றி முதலில் ஐந்து ரூபாயும், பின்னர் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் அளித்தார்.  அப்போது மாத்திரமல்ல.  பலமுறை லக்ஷ்மிபாயின் கைகளில் ஒன்பது ரூபாய் சென்றிருக்கிறது.  ஆனால் பாபாவின் இந்த ஒன்பதை எப்போதும் அவள் நினைவில் கொண்டிருப்பாள்.  கவனமானவரும், எப்போதும் ஜாக்கிரதையானவருமான பாபா தமது கடைசித் தருணத்தில் மற்ற முன்னேற்பாடுகளையும் செய்தார்.  தமது அடியவர்களுடைய அன்பாலும், பாசத்தாலும் சிக்கிக்கொள்ளாதபடி அல்லது பிணிக்கப்படாதபடி அவர்கள் எல்லோரையும் நீங்கச் சொல்லி ஆணையிட்டார்.

 

 
             காகா சாஹேப் தீஷித்தும், பாபு சாஹேப் பூட்டியும் பாபாவிடம் கவலையுடன் காத்திருந்தனர்.  ஆனால் பாபா, அவர்களை வாதாவுக்குப்போய் உணவுக்குப்பின் வரும்படி கூறினார்.  பாபாவின் சந்நிதாதனத்தைவிட்டு அவர்களால் நீங்க முடியவில்லை.  எனினும் பாபாவுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்கமுடியவில்லை.  எனவே அவர்கள் சுமை நிறைந்த மனத்துடன் வாதாவிற்குச் சென்றனர்.  பாபாவின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது என்பதை அவர்கள்  அறிவார்களாதலால் அவரை அவர்களால் மறக்க முடியவில்லை.  உணவுக்காக அமர்ந்தாலும் அவர்கள் மனம் எங்கேயோ இருந்தது.  அது பாபாவுடன் இருந்தது.  அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் முன்பாக பாபா பூதவுடலை நீத்துவிட்டார் என்ற செய்தி வந்தது.  உடனே தங்கள் உணவை விட்டுவிட்டு மசூதிக்கு ஓடினார்கள்.  பயாஜி கோதேயின் மடியில் இறுதியாகப் படுத்திருந்ததைக் கண்டார்கள்.  அவர் தரையில் விழவில்லை.  தமது படுக்கையிலும் அவர் படுத்திருக்கவில்லை.  ஆனால் அமைதியாக தமது இருக்கையில் அமர்ந்துகொண்டே, தமது சொந்தக் கைகளால் தர்மம் செய்துகொண்டே தமது பூதவுடலை நீத்தார்.

 

 
          ஞானிகள் ஒரு குறிப்பான காரணத்துடன் இந்த உலகிற்கு வருகை தருகிறார்கள்.  அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியாகவே அமைதியாகவும், எளிதாகவும் இயற்கை எய்துகிறார்கள்.

 

 
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
 
ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s