சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 1


சீரடி சாய்பாபா ஒரு அற்புத மகான் – பாகம் 1
தேனி. எம். சுப்பிரமணி
                   உலக வாழ்க்கைப் பந்தங்களிலிருந்து விடுபட்டு இறைவனை நாடும் வழிமுறையை எளிமையாகச் சொன்னதுடன் தன் அற்புதச் செயல்களின் மூலம் தனக்கென தனி பக்தர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் சீரடி சாய்பாபா. இன்று அவர் இல்லாவிட்டாலும், அவர் வாழ்ந்த சீரடியில் இன்னும் பக்தர்கள் கூட்டம் அருளாசி வேண்டி அலை மோதிக் கொண்டுதான் இருக்கிறது. சாயிபாபாவை இந்துக்களும் இசுலாமியரும் அற்புத மகானாகப் போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர்.
சீரடி சாய்பாபா சீரடிக்கு வந்த பின்புதான் அவருடைய தகவல்கள் ஆதாரப்பூர்வமானவையாக உள்ளன. அதற்கு முன்பு அவர் 1838 ஆம் ஆண்டு பிறந்தார் என்கிற விவரம் தெரிந்தாலும் அவரது உண்மையான பெயர் என்ன? அவர் பிறந்த இடம் எது? பிறந்த தேதி என்ன? என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் பிறப்பு குறித்த செய்தியாகச் சொல்லப்படும் கதைக்குள் செல்வோமா?
பத்ரி என்ற ஊரில் ஹரிஸாடே, லட்சுமி தம்பதியருக்கு குழந்தை இல்லாத குறை மனக்கவலையாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களுக்குக் குழந்தை ஒன்றை அளிக்க வேண்டி பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக் கொண்டிருந்தனர். பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் வேண்டுதல் நிறைவேறியது. லட்சுமி கர்ப்பமடைந்து பத்து மாதங்களுக்குப் பின்பு அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
அந்தக் குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று அறிவதற்காக, ஹரிஸாடே தன் மகனின் ஜாதகத்தைக் கணிப்பதற்காக உள்ளூர் சோதிடர் ஒருவரை அணுகினார். குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டு அந்த ஜாதகத்தைக் கணித்த சோதிடர், “இந்தக் குழந்தை மிக அற்புதமான குழந்தை. இக்குழந்தை பிற்காலத்தில் பலரும் போற்றும்படி வாழ்ந்து, புகழ் பெற்ற மகானாக உயர்ந்து விடுவார்என்றார். ஹரிஸாடேயும் அவரது மனைவியும் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
                  அப்போது சோதிடர், “இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.என்றார்.
ஹரிஸாடேயும் அவரது மனைவியும், “நீங்கள் எங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியைத்தானே சொல்லி இருக்கிறீர்கள். நாங்கள் எதற்கு உங்களை மன்னிக்க வேண்டும்?” என்றனர்.
                  சோதிடர், “உங்கள் மகன், மிகப் பெரிய மகான் ஆவது உங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய விசயம் என்றாலும், இந்தக் குழந்தையை நீங்கள் வளர்க்க முடியாது. இன்னும் சில காலத்தில் இந்தக் குழந்தையைத் தத்து (சுவீகாரம்) பெற்றுச் செல்ல ஒருவர் வருவார். அவர் உங்கள் குழந்தையைத் தத்து எடுத்துச் சென்ற சில நாட்களில் நீங்கள் இருவரும் மரணமடைந்து விடுவீர்கள்.என்றார்.
இதைக் கேட்ட அவர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள்.
குழந்தையில்லாத தங்களுக்குக் குழந்தை அளித்த இறைவன், அந்தக் குழந்தையை வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமையைத் தங்களுக்கு அளிக்கவில்லையே என்று வருத்தமடைந்தனர். இருப்பினும் தங்கள் குழந்தை மகான் ஆகப் போகும் மகிழ்ச்சியில் அந்த வருத்தத்தை மறந்து போனார்கள்.
குழந்தை நம்முடன் இருக்கும் குறுகிய காலத்திற்காவது குழந்தையை அதிகமான அன்புடன் வளர்ப்போம்என்று வளர்த்து வந்தனர்.
                   ஒரு நாள் லட்சுமி தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தாள். அதே சமயம் ஹரிஸாடேயும் திடுக்கிட்டு எழுந்தார். இருவர் முகத்திலும் பயம் தெரிந்தது.
(தொடரும்)
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் மலரில் அற்புத மகான்கள் எனும் பெயரில் வெளியான தொடரின் ஐந்தாம் மகான்
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s