நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு!


நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு!
காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று…… அவருடைய ஆசிர்வாதம் பலனளித்தது!…..சாயி எப்படி சொன்னாரோ, அப்படியே நடந்தது. சாயியின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்து கொள்ளமுடியாதவை, துல்லியமானவை, அவருடைய திருவாய் மொழியின் படி குழந்தைகள் பிறந்தன.
                                        (சத்சரிதம்  அத்: 25:-102-103)
     வயதாகிவிட்டது…கருப்பையில் சிக்கல்…….கணவனிடம் பிரச்சனை, ஜாதகக் கோளாறு…இப்படி நிறைய சிக்கல்கள் இருக்கும்போது எப்படி எனக்கு குழந்தை பிறக்கமுடியும்?
      இப்படியொரு கேள்வி பாதிக்கப்படவர்கள் மனதில் இருக்கத்தான் செய்யும்.  ‘மனிதரால் கூடாதது, தேவனால் கூடும்என்கிறது பைபிள். கடவுளின் வாக்குப் பொய்ப்பது கிடையாது.  “காலப்போக்கில் பாபாவின் திருவாய்மொழி உண்மையாயிற்று. அவருடைய ஆசிவாதம் பலனளித்தது.
      சாயி எப்படி சொன்னாரோ அப்படியே நடந்தது.  ஸாயீயின் வார்த்தைகள் தப்பர்த்தம் செய்து கொள்ள முடியாதவை. துல்லியமானவை, அவரது திருவாய்மொழியின்படி குழந்தைகள் பிறந்தன என சத்சரிதம் (அத்: 25:-102-103) கூறுகிற்து.
      தாமு அண்ணாவை சத்சரித்திரம் படித்தவர்கள் அனைவருக்கும் தெரியும். அவரது முழுப்பெயர் தாமோதர் ஸாவல் ராசனே.  அகமது நகரைச் சேர்ந்த இவரை தாமு அண்ணா என்பார்கள்.
      பாபாவின் மீது ஆழ்ந்த பக்தியுள்ளவர்.  சீரடியில் நடக்கும் ராம நவமி ஊர்வலத்தில் இரு கொடிகள் எடுத்துச் செல்லப்படும்.  அதில் ஒன்றை ஆண்டு தோறும் சாயிக்கு அர்ப்பணம் செய்தவர் தாமு அண்ணா.  இதற்க்குக் காரணம், பிறக்கவே பிறக்காது என்று எல்லோரும் கைவிட்ட பின் குழந்தை பிறந்ததுதான். இச்சேவையினை நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் தாமு அண்ணா செய்து வந்தார். இன்னொரு கொடி நிமோண்கருடையது.
      குழந்தைப் பிறப்பதற்க்கு முன்பு தாமு அண்ணா நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!
      அவருக்கு இரண்டு மனைவிகள்.  ஒரே குறை பிள்ளை எதும் இல்லாதது. என்னென்னவோ செய்து பார்த்துவிட்டனர். அப்படியும் குழந்தைப் பேறு எட்டாக்கனியாகவே இருந்தது.
      சிறந்த ஜோதிடர்களை நாடி அவர்கள் சொன்னபடியெல்லாம் நவக்கிரக
பரிகாரம் முதல் அனைத்தும் செய்ததுதான் மிச்சம், பலன் ஏதுமில்லை. ஆனால் இன்று இவரும் பெரிய ஜோதிட நிபுணர் ஆகிவிட்டார். வாரிசுக்காக ஞானிகள், சாதுக்களை தேடித் தேடி வணங்கினார். எதனாலும் பலனில்லாத நிலையில் குழந்தைப் பற்றிய எண்ணத்தையே விட்டுவிட்டார்.
      இந்நிலையில் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு, 1895ம் ஆண்டு வாக்கில் சீரடிக்கு வந்தார். இவர் வரும் வழியில் கோபர்காமில் இருக்கும் போதே, சீரடியில் இருந்த சாயி, அவர் வருவதை அறிந்தார். குழந்தை வரம் வேண்டி வரும் தாமுவுக்கு நான்கு மாம்பழங்களை எடுத்து வைக்க நானாவிடம் சாயி கூறினார்.
இந்த பழங்கள் நானாவின் பெயருக்கு ராலே என்ற சப் கலெக்டரால் அனுப்பப்பட்டவை.  இவற்றினை பாபாவின் பாதங்களில் பக்தியுடன் சமர்ப்பிக்க நானாவிடம் சப்கலெக்டர் கேட்டுக்கொண்டிருந்தார்.
பாபாவின் முன்னால் மாம்பழங்கள் பிரிக்கப்பட்ட போது அதில் சுமார் முன்னூறு பழங்கள் இருந்தன.  பாபா அனைத்தையும் நானாவிடம் ஒப்படைத்துவிட்டார்.  ஆனால் நானாவோ நான்கு பழங்களை எடுத்து கொலம்பா எனப்படும் வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டுவிட்டு மீதியினை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவர் அதை பாத்திரத்தில் போடுல்போதே, ‘இவை தாமு அண்ணாவிற்க்குஎன்றார் பாபா.
இரண்டு மணி நேரம் முடிந்து பாபாவிற்க்கு பூஜை செய்ய நிறைய பூக்களுடன் வந்த தாமுவிற்க்கு மசூதியில் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது.  அவரிடம் பழத்தைக் கொடுத்த பாபா, “இவற்றை சாப்பிட்டு சாவாயாக! என்று கூறினார். இதைக் கேட்ட தாமு திகைத்துப்போனார்.  அருகிலிருந்த மகல்சாபதி, ‘பாபாவின் காலடியில் இறப்பதும் அனுக்கிரகமே!என்றார்.  இதனால் ஊக்கம் பெற்ற தாமு அண்ணா பழங்களை சாப்பிட முயன்றார்.
அவரைத் தடுத்த பாபா, “இவற்றை நீயே சாப்பிட்டு விடாதே. உன் இளைய மனைவிக்குக் கொடு. எட்டு குழந்தைகள் பிறப்பர்.  4 ஆண் 4 பெண்.  முதலில் இரண்டு ஆண்.  மூத்தவனுக்கு தவுலத் ஷா, இரண்டாமவனுக்கு தானாஷா என்று பெயரிடு!என்றார்.
அவர் ஏற்கனவே குழந்தை பிறக்காது என்று விட்ட எண்ணத்தை விட்டு குருவின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கை வைத்தார்.  சாயியின் உறுதிமொழியினையும், ஆசிர்வாதத்தினையும் கேட்டதும் அவருடைய மனதில் புது ஆசையும் நம்பிக்கையும் துளிர்விட்டன. வீட்டுக்கு வந்த தாகு, அவரது டைரியில் பாபா சொன்ன பெயர்களை குறித்து வைத்துக்கொண்டார்.  நாளடைவில் அதை மறந்துவிட்டார்.
       ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது. ஆம், பாபா கூறியவாறே ஆண் குழந்தையும் பிறந்தது.  முதல் குழந்தையினை தூக்கிக்கொண்டு சீரடிக்கு வந்த தாமு அண்ணா, ‘குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?எனக்கேட்டார்.  
        ‘நான் முன் சொன்ன பெயரினை மறந்து விட்டாயா?  டைரியின் மூன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்திருக்குறாய்.  போய்ப் பார்!என்றார் பாபா. அதன்படியே பெயரிடப்பட்டது.
பாபா சொன்னார்: 
என்னுடைய வார்த்தைகளை பிரமாணமாக நம்புங்கள்.      
 நான்    இந்த பூதவுடலை நீத்த பிறகும்,  சமாதியிலிருந்து என்னுடைய எலும்புகளும் உங்களுக்கு ஆசுவாசம் அளிக்கும்.
      நான் மாத்திரம் அல்லன், எனது சமாதியும் உங்களிடம்
பேசும்.
      எவர் எனது சமாதியை சரணடைகிறாரோ அவருடன் அது ஊஞ்சலாடும்.
      நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலும் கவலைப்படாதீர்கள்.  நீஙக்ள் அக்கறை கொண்ட விஷயங்களைப் பற்றி என் எலும்புகள் பேசுவதை நீஙக்ள் கேட்பீர்கள்.
     விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும், சுயனலம் கருதாது என்னை வழிபடுங்கள். எல்லா மங்களங்களும் விளையும்
     பாபா தனது திருவாய் மொழியாகக்கூறிய இந்த வார்த்தைகளை முழுமையாக நம்புங்கள்.  அப்போது உங்களுக்கு சர்வ மங்களங்களும் விளையும்.
      எனக்குக் குழந்தைப்பேறுதான் இருக்கிறதே… எனக்கு இந்த தகவலால் என்ன பயன் என்று நினைக்காதீர்கள்.
      விசுவாசம் நிறைந்த இதயத்துடன் நீங்கள் கேட்பது நீங்கள் செய்கிற தொழிலில் லாபமாக இருக்கலாம்,  வாழ்வின் முன்னேற்றமாக இருக்கலாம்.  இப்போதுள்ள நிலையைவிட இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தரும் நிலையாகவும் இருக்கலாம். அல்லது எதிர்பார்த்து இதுவரை கிடைக்கவே கிடைக்காது என்று முடிவு செய்துவிட்ட விஷயமாகவும் இருக்கலாம்.
      சமர்த்த (எல்லாவற்றையும் செய்யவல்ல) சாயியை சரணடைந்து காத்திருங்கள்.  பலன் நிச்சயம்!
          சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்  வெளியான கட்டுரை.

அன்னதானம்

அன்னதானம்


அன்னதானம் உலகிலுள்ள மற்ற தானங்களை விட மிகச் சிறந்தது. சகல சவுபாக்கியங்களையும் தரவல்லது.  பாவங்களைப் போக்கவல்லது. இதைப்பற்றி சத்சரித்திரம் 38-ம் அத்தியாயத்தில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.


மனிதன் அடிக்கடி தான தர்மங்கள் செய்ய வேண்டும். பசிப் பிணியைக் களைவதையே முக்கிய தானமாகக் கருத வேண்டும்.  நித்திய நியமமாக அன்னதானம் செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டு வாழவேண்டும்.
    மதியம் 12 மணிக்கு அன்னமேதும் கிடைக்காவிட்டால் மனம் குழம்புகிறது.  நமக்கு எப்படியோ அப்படியே பிறருக்கும், இதை உள்ளுக்குள் நன்கு உணர்ந்தவன் உயர்ந்த மனிதன்.
ஆசார தர்மத்தில் பிரதானமானதும், முதலில் செய்ய வேண்டியதுமான தானம் அன்னதானம். இது பற்றி நன்கு சிந்தித்துப் பார்த்தால் அதைவிட சிறந்த தானம் எதுவும் இல்லை என்பது நன்கு விளங்கும். அன்னம் பரப்பிரம்ம சொரூபம், எல்லா உயிரினங்களும் அன்னத்திலிருந்தே எழுகின்றன.  அன்னமே உயிரைக் காப்பாற்றும் சாதனம்.  உயிர் உடலைப் பிரிந்த பிறகு அன்னத்திற்குள்ளேயே சென்று கலந்துவிடுகிறது.
அதிதி (விருந்தாளி) நேரத்தோடு வந்தாலும் நேரம் தவறி வந்தாலும் இல்லறத்தோன் அவருக்கு அன்னமிட்டு திருப்தி செய்ய வேண்டும்.  அன்னம் அளிக்காமல் விருந்தாளியை அனுப்பிவிடுபவன் இன்னலகளுக்கு அழைப்பு விடுக்கிறான்.  இதில் சந்தேகமே இல்லை.
வஸ்திரங்களையோ, பாத்திரங்களையோ தானமாக அளிக்கும் போது தானம் வாங்குபவர் தகுதியுள்ளவரா என்று யோசிக்க வேண்டிய அவசியம் உண்டு.  ஆனால் அன்னதானம் செய்வதற்க்கு இந்த சிந்தனையே தேவையில்லை.  வீட்டு வாயிலுக்கு எவர், எந்நேரத்தில் வந்தாலும் அவரை அனாதரவாக விட்டு விடுவது தகாது.
     அன்னதானம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. இதற்கு சுருதியே பிரமாணம்.  ஆகவே, பாபாவும் உலகியல் ரீதியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஜனங்களுக்கு உணவளித்து திருப்தி செய்தார்.
     அன்னதானம் இன்றி செய்யப்படும் காசுதானம் போன்ற தானங்கள் முழுமை பெறாதவை.  எத்தனை நட்சத்திரங்கள் இருப்பினும் சந்திரன் இன்றி வானம் அழகு பெறுமோ?  பதக்கம் இல்லாமல் தங்கச்சங்கிலி முழுமை பெறுமோ?
     அறுசுவை உணவில் பருப்பு எவ்வாறு முக்கியமானதோ, அவ்வாறே புண்ணியங்களில் எல்லாம் சிறந்த புண்ணியம் அன்னதானம்.  கலசமில்லாத கோபுரத்திற்கும், தாமரை இல்லாத நீர் நிலைக்கும் அழகு ஏது?
     அன்னதானம் இல்லாது செய்யப்படும் தருமத்தை,  பிரேமையில்லாத பஜனைக்கும், குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளாத சுமங்கலிக்கும், குரல் இனிமை இல்லாதவனின் பாட்டுக்கும், உப்பு இடப்படாத மோருக்கும் ஒப்பிடலாம்.  அன்னதானம் செய்யும்போது வியாதியஸ்தர்களுக்கும், பலம் குன்றியவர்களுக்கும், குருடர்களுக்கும், முடவர்களுக்கும், செவிடர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் முதலில் உணவு அளிக்கப்படவேண்டும்.  உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அதன் பின்னரே அளிக்கவேண்டும்
பாபாவிற்குப் பிடித்தமானது என்பதால் இதை சாயி பக்தர்களாகிய நாம் விரிவாகச் செய்கிறோம். இதைப் பற்றி மேலும் விரிவாக நாளை பார்க்கலாம்.
ஜெய்சாயிராம்!

பூர்வ கர்மா – நம்பிக்கை – பொறுமை


பூர்வ கர்மா நம்பிக்கை பொறுமை
       1941ம் ஆண்டு வாக்கில் சங்கமேசன் என்பவர் சந்தித்த சாது ஒருவர், அவரிடம் சாயிபாபா ஒரு தெய்வீகப்பிறவி என்றும் தன் பக்தர்களை ஒரு போதும் கைவிடமாட்டார் என்றும் கூறியுள்ளார். பின் சங்கமேசனிடம் ஒரு பாபா படத்தினை அளித்து தினமும் அப்படத்திற்க்கு பூஜை செய்யச் சொல்லியுள்ளார்.

     அப்படி பூஜித்து வரும்போது ஆரம்ப காலத்தில் அவருக்கு மனத்துயரங்கள், பணியில், வீட்டில் பிரச்சனைகள் என பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்தச் சாது கூறியுள்ளார். ஆனால் பக்தியோடும், உணர்வு பூர்வமாகவும் பூஜைகளைச் செய்து வந்தால், பாபா அவருடைய உலகாயத முன்னேற்றத்தையும் ஆன்மீக ரீதியான் முன்னேற்றத்தினையும் தாமே அளித்து பாதுகாப்பார் என்றும் அந்தச் சாது கூறியுள்ளார். சாது கூறியதை ஏற்று அவ்விதமே சங்கமேசன் நித்ய பூஜை செய்து வந்தார்
        அதே நேரத்தில் சாது கூறியதைப்போல எல்லாவிதத்திலும் தாங்க முடியாத இன்னல்களை அனுபவித்துள்ளார். ஒரு காலக்கட்டத்தில் மிகுந்த கஷ்டத்தின் காரணமாக சாது கூறிய வார்த்தைகள் மீதும், சாயி மீதும் நம்பிக்கையினை இழந்து, மனம் தளர்ந்து விரக்தியான நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் அமர்ந்திருந்தார். அப்போது கோயிலுக்கு எதிரிலுள்ள அனைந்திந்திய சாயி சமாஜ கட்டிடத்திற்க்குச் சென்று பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிகளை சந்தித்து தனது துயரங்களையும் இன்னல்களையும் மனம் விட்டுக்கூறியுள்ளார்.
         சுவாமிஜீ, சங்கமேசனிடம், பாபாவின் மீதான் நமது நம்பிக்கையும், அவருக்கு பூஜைகள் புரிவதும் நாம் பூர்வ ஜென்மங்களில் செய்த பாவங்களை நீர்த்துப் போகச் செய்யப் பயன்படுகிறது.  பூர்வ கர்ம வினைப் பயன்களில் இருந்து யாருமே தப்பிக்க முடியாது.  நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து விடும்.  ஒரு விதையினை விதைக்கும் போது அதன் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. நீங்கள் பொறுமையோடு காத்திருக்கவேண்டும்.  சில சமயங்களில் வருடக்கணக்கில் கூட காத்திருக்க நேரிடலாம். தவிரவும் பழங்களை அளிக்க உள்ள மரங்களை வெட்டிவிடவும் கூடாது.  அந்த மரம் பழங்களை அளிக்கத் தொடங்கிவிட்டால், நீங்கள் மட்டுமல்ல, உங்கள் பகுதியிலுள்ள அனைவரும் அதனால் பயனடைவர்என்று தெரிவித்தார்.
          சங்கமேசன் பாபாவிற்க்கான நித்ய பூஜைகளை தொடர்ந்து செய்து வந்தார்.  1965ம் ஆண்டிலிருந்து ஸ்ரீ சாயி பாபா சங்கமேசன் அவர்களிடம் பேசத்தொடங்கினார்.  நூற்றுக்கணக்கான மக்கள் பாபா மூலமாக தங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்காக சங்கமேசனிடம் வரத்தொடங்கினர்.  பாபாவின் சக்திகள் அபாரனவை என்றும் அவருடைய லீலைகளை அனுபவித்துத்தான் உணரமுடியும் என்பதையும் சங்கமேசன் தெரிந்துகொண்டார்.
                                         நன்றி:அற்புதப்புத்தகம்
                                     சிவ.கனகசபை, தஞ்சாவூர்

குரு வார மகிமை


குரு வார மகிமை
வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம்.  இந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும்.  ஏழ்மையில் இருப்பவர்களும், திருமணம் ஆகாதவர்களும், குடும்பத்தினை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை இல்லாதவர்களும் வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள். நாம் வியாழன் தோறும் விரதம் இருந்து நமது பிரச்சனைகளை முன் வைத்து சாயிபாபாவிற்க்கு விரதம் இருந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.
                                     -சாயி வீரமணி, சென்னை
ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது

ஒன்பது வியாழக்கிழமை சாயி விரத விதிமுறைகள் 

பற்றி மேலும் அறிய இங்கு செல்லவும்

குருவே தெய்வம்!


குருவே தெய்வம்!

     சீரடி சாயிபாபா மதம், இனம், எல்லை கடந்தவர்.  ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காதவர். அதிகாரி, ஊழியன் என்ற வித்தியாசம் அறியாதவர்.  தன்னிடம் வந்தவன், முழு சரணடைந்தவன் எல்லோரும் ஒன்றே. இந்தப் பூவுலகில் அமைதியும், ஆனந்தமும் பெருகுவதற்க்காகவே அவதரித்தவர். படாடோபம் இல்லாதவர்.
     எளிமையிலும் எளிமையான அவரை குருவாக அடைய புண்ணியம் செய்திருக்கவேண்டும். இலலாவிடில் முன்ஜென்ம தொடர்பாவது இருந்திருக்கவேண்டும்.  இல்லாவிடில் அவர் தனது பக்தனை தன் பக்கம் இழுக்கவேண்டும். அப்படி அவரால் இழுக்கப்பட்ட ஒருவரைப்பற்றி தெரிந்துகொள்வோமா?
     நானா ஆங்கிலேய அரசாங்கத்தில் டெபுடி கலெக்டர். அவரது தந்தை கோவிந்தராவ் சந்தோர்க்கரும் டெபுடிகலெக்டர்தான். இவர் தந்தை மும்பையை அடுத்துள்ள புறநகர்ப்பகுதியான கல்யாணில் வசித்து வந்தார்.
     ஒரு முறை இவரது தந்தை கோவிந்தராவ் சந்தோர்க்கருக்கும், கல்யாணில் உள்ள  உள்ளூர் முஸ்லிம்களுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அதனால் தனது குடும்பத்தினர் யாரையும் அவர்களிடம் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என அவர் கூறிவிட்டார்.  அவரது குடும்பத்தினரைப் பொறுத்தவரை அவர் தந்தை வைத்ததுதான் சட்டம்.  அதை யாராலும் மீற முடியாது.  ஆகவே, அவர் குடும்பத்தார் அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிம்களிடம் பழகுவதை நிறுத்திவிட்டனர்.  இந்த சமயத்தில் நானா சாகேப் சந்தோர்க்கர் அலுவலகம் சம்பந்தப்பட்ட சுற்றுலா சென்றிருந்தார். அவர் திரும்பி வந்ததும் வீட்டிலுள்ளோர் தந்தையின் கட்டளையினைக் கூறினர். நானா அதைக் கேட்டதும் திடுக்கிட்டார். 
     எதற்க்காக?  அக்கம் பக்கத்திலுள்ள முஸ்லிகளிடம் பழக வேண்டாம் என்பதற்காக அல்ல. தனது சாயியை தன் தந்தை ஒரு முஸ்லிமாகத்தான் நினைத்திக்கொண்டு இருக்கிறார். ஆகவேதான் இப்படி முடிவு செய்துள்ளார் என நினைத்துத் திடுக்கிட்டார்.
     சாயிபாபா முஸ்லிமும் அல்ல.  இந்துவுமல்லர்.  அதற்க்கும் மேலானவர் என்பதை எப்படி தந்தையிடம் சொல்லி நம்ப வைப்பது என மூளையைப்போட்டு குழப்பிக்கொண்டார்.
     தந்தையார் என்ன சொல்வார் என்று நானாவால் நிச்சயம் தீர்மானிக்கமுடியவில்லை.  பாபாவை மறக்கவும் முடியாது.  மறப்பதை விட இறப்பதே மேல் என தெளிவான முடிவை எடுத்தார்.
     தன் தந்தையிடம் இதை பற்றி கலந்தாலோசித்தார்.  அவர் தந்தை, ‘இதோ பார் நானா! எனது குரு சகாராம் மகாராஜ்.  இந்த மகராஜ் உனது குரு அல்ல.  உனது குரு சாயிபாபா. அவர் முஸ்லிமாக இருந்தாலும் உனது குரு அவர்தான். அவரை நீ தொடர்ந்து வழிபடலாம். எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை’ , என்றார்.
     தந்தையிடமிருந்து இந்த வார்த்தைகளைக்கேட்ட நானா, தனது காதுகளையே நம்பமுடியாமல் ஆச்சரியப்பட்டார். தனது தந்தைக்கு நன்றி சொன்னார்.
     தன் தந்தை ஆச்சார அனுஷ்டானங்களை கடுமையாக பின் பற்றுபவர், அவர் மனம் எப்படி மாறியது என ஆச்சரியப்பட்டார். தன் சொல்லே சட்டம் என்றிருந்தவரை சாயிபாபா எப்படி மாற்றினார் என நினைத்து நினைத்து நானா பெருமிதம் கொண்டார்.
– கு.இராமச்சந்திரன்
ஸ்ரீ சாயி தரிசனம் செப்டெம்பர் 2012 இதழில் வெளியான கட்டுரை

ஆரத்தி தட்டில் தெரியும் பலன்கள்


ஆரத்தி தட்டில் தெரியும் பலன்கள்
நெய் தீபம் ஏற்றி ஆரத்தி காடுகிற தோரணையை வைத்தே ஒருவர் நிலையை கூறலாம்.  தீபம் ஆடாமல் நேராக நிற்கும் அளவிற்க்கு பொறுமையாக திருமுகம், பாதத்தினை நோக்கி ஆரத்தி காட்டுபவர், உறுதியான மனம் படைத்தவர். இவர் இறைவன் மீது அதிக நம்பிக்கை உள்ளவர். எனவே, இவரது வேண்டுதல் மிக விரைவில் நடந்தேறும்.

வேகமாக ஆரத்தி தட்டினை சுற்றுபவர் அவசரக்காரர்.  இவருக்கு எதுவும் கை கூடாது. கை கூடினாலும் இழந்து விடுவார்.

ஆன்ட்டி கிளாக் வைஸ் என்கிற வலமிருந்து இடமாக ஆரத்தி தட்டினைச் சுற்றுபவர் எவ்வளவு முன்னேறினாலும் சீக்கிரமாக கீழே வந்திவிடுவார்.

பகவானின் திருமுகத்தினை இடிப்பது போல் ஆரத்தி காட்டுபவர் தன் செயலால் குடும்பத்தில் கஷ்டத்தினை அனுபவித்து வருபவர்.

அகலமாக கையினை விரித்து ஆரத்தி காட்டுபவர் ஊதாரித்தனம் மிக்கவர். எளிதில் கடன் படுபவர்.

இதில் நீங்கள் எப்படி என்பதை கவனித்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். பலன் பெறுங்கள். இது சாயி வரதராஜன் கண்டறிந்த அனுபவ உண்மையாகும்.
                                     -சாயி வீரமணி, சென்னை
ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது